சிகரம்
“தட்சனின் யாக குண்டத்தில் தேவி தன் உடலை விட்டுவிட்டு பர்வதராஜனின் குமாரியாக அவதரித்தாள் என்பதைக் கேட்டதும் ஈசன் பெரும் சீற்றம் கொண்டார். தம்மை அவமதித்த தட்சனைக் கொன்று யாகத்தை அழிக்க வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பி வைத்த பின்னர் அவர் பித்துப் பிடித்தாற்போல் வனாந்தரங்களிலும் மலைச் சாரல்களிலுமாகத் திரிந்து கொண்டிருந்தார். ஸதி தேவியைப் பிரிய நேர்ந்த வருத்தம் அவர் உள்ளத்தைத் தகித்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட, அந்த உஷ்ணம் சகல லோகங்களையும் தகிக்கச் செய்தது. அதன் காரணத்தை அறியாத தேவர்கள் வெப்பம் தாங்கமாட்டாதவர்களாய்த் தவித்தனர். அனைவரும் பிரம்மதேவனைச் சரண் அடைந்து,
“பிரபு, எங்கும் ஒரே வெப்பமாக இருக்கிறதே காரணம் என்னவென்று தெரியவில்லை. எங்களால் அதன் உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. தாங்கள்தான் வெப்பத்தைத் தணித்து எங்களை ரட்சிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்தனர்.
“தேவர்களே, இந்த தாங்க முடியாத வெப்பத்துக்குக் காரணம், கைலாசநாதனே. தாட்சாயணியைப் பிரிந்த வேதனையால் மனம் போனபடி திரிந்து வருகிறார். அவர் உள்ளம் பிரிவாற்றாமையால் இப்படி உஷ்ணத்தைக் கொட்டுகிறது. என்னால் செய்யக்கூடியது ஏதுமில்லை. நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சந்திரனை வேண்டி அவர் சிரசிலே என்றும் தங்கச் செய்தால், அதன் குளிர்ச்சியால் அவர் உள்ளம் சாந்தமடையும். நம்மைத் தகித்து வரும் உஷ்ணமும் குறையும்’’ என்றார் பிரம்மதேவன்.
நான்முகனின் வார்த்தைப்படி தேவர்கள் சந்திரனைப் பிரார்த்தித்தனர். பகவானின் சிரசிலே தங்கி அவர் உஷ்ணத்தை மட்டுப்படுத்திக் குளிர்ச்சியுறச் செய்யுமாறு வேண்டினர். சந்திரன் அவர்கள் கோரிக்கைக்குச் சம்மதித்தான்.
பின்னர் எல்லோருமாகப் பகவானைத் தேடிச் சென்றனர். அவரைக் கண்டதும் பலவித ஸ்தோத்திரங்களால் அவரைத் துதித்தனர். பிறகு அவரைப் பணிந்து,
“பிரபு, சர்வேச்வரா! தாங்கள் எங்கள் கோரிக்கைக்கு மனம் களித்து சந்திரனைத் தங்கள் சிரசிலே தரித்துக் கொள்ள வேண்டும். லோக க்ஷேமார்த்தம் எங்கள் கோரிக்கையை மறுக்கக் கூடாது’’ என்று கோரினர்.
ஈசனும் அவர்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்து, சந்திரனைத் தமது சிரசிலே தரித்துக் கொண்டார். அப்போதே அவரை வாட்டி வந்த வேதனையின் உஷ்ணம் மட்டுப்பட்டது. தேவர்கள் திருப்தி அடைந்தவர்களாய் பகவானை ‘சந்திரசேகரன்’ என்று கொண்டாடினர்’’ என்கிறது இந்துமதம். (சிவபுராணம்)
இதில் இரண்டு. கருத்துகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனைவியைப் பிரிந்த துக்கத்தில் சிவனுக்கு ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் எல்லோரும் துன்பப்பட்டனர் என்கிறது இந்து மதம். (சிவபுராணம்)
உள்ளத்துள் துக்கம் வந்தால், வந்தவரின் உடல்தான் கொதிக்கும். அந்த வெப்பம் அவரை மட்டுமே பாதிக்கும். அது அடுத்தவரையோ, உலகத்தையோ சூடேற்றாது. இதுதான் அறிவியல்.
ஆனால், ஒருவரின் உள்ளக் கொதிப்பு உலகத்தவரைச் சுட்டது என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து அல்லவா?
சந்திரன் என்பது பூமியைப் போல ஒரு துணைக் கோள். அதற்கு குளிர்ச்சி எதுவும் கிடையாது. அது சூரியனைச் சுற்றி வருகிறது. அதைச் சிவன் தலையில் வைத்தால் எப்படி அவரது சூடு தணியும்? பூமியையும் சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றும் சந்திரனை எப்படி தலையில் வைக்க முடியும்?
சிவனின் கொதிப்புக்குக் காரணமான பார்வதி வந்தால்தானே கொதிப்பு அடங்கும்? உண்மை இப்படியிருக்க அறிவுக்கு, அறிவியலுக்கு ஒவ்வாத மூடக்கருத்தைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
ஒரு கணவன் மனைவிக்கு 16,000 பிள்ளைகள் பிறக்குமா?
ஒரு சமயம் நாட்டிலே மிகுந்த வறட்சி உண்டாயிற்று. மக்கள் ஜீவனத்துக்கு வழி இன்றித் திண்டாடினர்.
அப்போது காட்டிலே வேட்டையாடி ஜீவித்து வந்த வேடன் ஒருவன் தன் மனைவியோடு பசியால் வருந்தியபடி திரிந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் தாமரைத் தடாகம் ஒன்றிருந்தது. அதில் பூத்திருந்த தாமரை மலர்களைக் கண்டதும், அதைப் பறித்துச் சென்று நகரத்தில் விற்றால் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும் என எண்ணி மலர்களைப் பறித்துக் கொண்டு பக்கத்திலிருந்த காசி நகரத்தை அடைந்தான்.
விதிவசத்தால் அன்றைய தினம் நகரம் முழுவதும் சுற்றியும் மலர்கள் விலை போகவில்லை. சுற்றிக்கொண்டு வரும்போது ஓங்காரேசுவரர் ஆலயத்துக்கு வந்தான். அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு, சுவாமி தரிசனத்துக்கு வருபவர் யாராவது மலர்களை வாங்கக்கூடும் என்று ஆலயத்தில் காத்துக் கிடந்தான். அங்கு நடைபெறும் பூஜையையும், மக்கள் பகவானிடம் காட்டிய பக்தியையும் கண்ட வேடன் சிவபெருமானிடம் பக்தி கொண்டான். மலர்களை விற்க மனமின்றி பகவானின் பாதங்களில் பக்தியோடு சமர்ப்பித்துவிட்டு அன்றிரவு முழுவதும் பட்டினியோடு அங்கேயே இருந்து பூஜையைக் கண்டான். விடியற்காலை நேரத்தில் அவ்விருவருக்கும் பகவானின் திவ்விய தரிசனம் கிடைத்தது.
அதன் பின்னர் வேடன் அந்த ஆலயத்தை விட்டுப் போக மனமில்லாதவனாய் அங்கே இருந்து ஆலயத்தைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தான். அவனுக்கு உதவியாக அவன் மனைவியும் இருந்து வந்தாள்.
சிறிது காலத்துக்கெல்லாம் வேடன் இறந்து போனான். அவள் மனைவி அவனோடு உடன் கட்டை ஏறினாள்.
அடுத்த பிறவியில் அந்தத் தம்பதிகள் அரச குலத்தில் பிறந்து ஒன்றாக இணைந்தனர். அரசனுக்கு முன் ஜன்ம புண்ணியத்தால் ஓங்காரேசுவரரைத் தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. காசிக்குச் சென்று ஓங்காரேசுவரரைத் தரிசித்து, பகவானைப் பிரத்தியட்சமாகத் தரிசிக்க விருப்பம் கொண்டு காற்றையே உணவாகப் புசித்துக் கடும் தவம் செய்தான். பகவானும் அவன் தவத்திற்கு மெச்சி அவனுக்குத் தரிசனம் அளித்தார். முன் ஜன்மத்தில் தாமரை மலர்களைச் சமர்ப்பித்ததால் அவனுக்குப் பொற்றாமரை மலர் ஒன்று கொடுத்தார். அதுவே, அவனுக்கு வாகனமாகி நினைத்த இடத்துக்கு அவனை அழைத்துச் சென்றது. அதன் காரணமாக அவனுக்குப் புஷ்பவாகனன் என்னும் பெயர் உண்டாயிற்று.
லாவண்யவதி என்கிற தன் மனைவியோடு புஷ்பவாகனன் சகல லோகங்களையும் சுற்றி வரும்போது பிரம்மதேவன் அவனைப் புஷ்கரதீபத்துக்கு அரசனாக்கி அங்கேயே இருந்து வருமாறு செய்தார். அரசனுக்கு பதினாயிரம் பிள்ளைகள் பிறந்தன’’ என்கிறது இந்துமதம் (சிவபுராணம்)
பிறவி என்பதே மூடத்தனம். அது அறிவியலுக்கு எதிரான கருத்து.
ஒரு பிறவியில் கணவன் மனைவி அடுத்த பிறவியிலும் மீண்டும் கணவன் மனைவியாகவே பிறந்தார்கள் என்பது அறிவியலுக்கு எதிரான மூடக் கருத்தல்லவா?
ஒரு கணவன் மனைவிக்கு மிக அதிகமாக 30 குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புண்டு. ஆனால், 16,000 பிள்ளைகள் ஒரு கணவன் மனைவிக்கு பிறந்தனர் என்பது அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத உலக நடப்பிலும் உண்மையில்லாத மூடக்கருத்தல்லவா? இப்படிப்பட்ட மூடக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்…)