ஆன்டன் செகாவ்
[“எங்கெல்லாம் அற்பத்தனங்கள் இருக்கின்றனவோ, அவற்றை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தினார் ஆன்டன் செகாவ்’’ என்றார் மாக்சிம் கார்க்கி. திடீரென வந்த ஒரு தும்மல்தான் இக்கதையின் கரு. அத்தும்மலின் விளைவுகள் ஒரு பெரும் புரட்சிக்கு வித்திட்டது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை மொழி பெயர்ப்பு இது.]
அருமையான ஓர் இரவில் அருமையான எழுத்தர் இவான் திமீத்ரிவிச் செர்வியாக்கவ்* நாடகக் கூடத்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து, காட்சிக் கண்ணாடியின் துணை கொண்டு லிமீs சிறீஷீநீலீமீs பீமீ சிஷீக்ஷீஸீமீஸ்வீறீறீமீ நாடகம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். கண்ணும் கருத்துமாய் நாடக மேடையைக் கவனித்த அவர், தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைத்தார்.
அப்பொழுது திடுமென ”திடுமென _ எதற்கெடுத்தாலும் உபயோகிக்கப்பட்டு மிகவும் சலிப்பூட்டும் தொடராகி விட்டது இது; ஆயினும் வாழ்க்கையானது எதிர்பாராத திடீர் நிகழ்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதால் எழுத்தாளர்கள் இந்தத் தொடரை உபயோகிக்காமல் என்ன செய்வார்கள்? ஆகவே, அப்பொழுது திடுமென அவருடைய முகம் சுருங்கிக் கோணிற்று, விழிகள் உருண்டு விண்ணோக்கி உயர்ந்தன, மூச்சு தடைப்பட்டு நின்றது.’’ காட்சிக் கண்ணாடியிலிருந்து முகத்தைத் திருப்பி உடலை மடக்கி ஆசனத்தில் கவிழ்ந்தார்.
அதற்குள்_உ-ஊச்சு! அதாவது ஒரு தும்மல் தும்மினார். எவரும் எங்கு வேண்டுமானாலும் தும்மலாம், யாருக்கும் இந்த உரிமை உண்டு. விவசாயிகள், போலிஸ் இன்ஸ்பெக்டர்கள், ஏன் அரசு ஆலோசகர்களுங்கூட தும்முகிறார்கள். எல்லோரும் தும்மவே செய்கிறார்கள் _ யாரும் விதிவிலக்கில்லை. செர்வியாக்கவ் பதைத்துப் போகவில்லை, கைக்குட்டையை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டார் . பிறகு தமது தும்மலால் யாருக்கும் தொந்தரவு எற்பட்டிருக்குமோ என்று, நற்குணசீலருக்கு ஏற்ற முறையில் சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். உடனே பதைபதைத்துப் போனார்.
ஏனெனில், அவருக்கு நேர் முன்னால் முதல் வரிசையில் உருவத்தில் சிறியவராய் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர் முணுமுணுத்தபடி வழுக்கைத் தலையையும் கழுத்தையும் கவனமாய்க் கையுறையால் துடைத்துக் கொள்வது அவர் கண்ணில் பட்டது. அந்தக் கிழவர் யாரென்று செர்வியாக்கவ் தெரிந்து கொண்டுவிட்டார் _ அவர் போக்குவரத்து அமைச்சகத்தின் நிருவாகியான ஜெனரல் பிரிழாலவ்.
”இவர் மீது அல்லவா தும்மிவிட்டேன்!’’ என்று செர்வியாக்கவ் தம்முள் கூறிக் கொண்டார். ”இவர் எனது அலுவலகத்தின் அதிபரல்ல; என்றாலும் அசம்பாவிதச் செயலாயிற்றே! மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று முடிவு செய்தார். மெல்ல இருமியபடி முன்னால் சாய்ந்து ஜெனரலின் காதுக்குள் சொன்னார்.
”மேதகையீர், பொறுத்தருள வேண்டும், தும்மிவிட்டேன். மனமறிந்து செய்ததல்ல.’’
”சரி பரவாயில்லை.’’
”மன்னிக்க வேண்டும். நான்.. வேண்டுமென்று நினைத்துச் செய்த காரியமல்ல!’’
”போதும் ஐயா! நான் நாடகம் பார்க்கணும், சும்மா இரும்!’’
செர்வியாக்கவ் சற்றுப் பதற்றத்துடன் அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, நாடக மேடையில் கவனம் செலுத்த முயன்றார். நடிகர்களை உற்று நோக்கினார், ஆனால், முன்பு போல் இப்பொழுது அவர் தம்மையொத்த ஒரு பாக்கியசாலி உலகில் யாரும் இருக்க முடியாதென நினைக்கவில்லை. தவறிழைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல் அவரை அரித்துத் தின்றது. இடைவேளையின் போது பிரிழாலவின் அருகே நடந்து சிறிது நேரம் தயங்கி நின்றபின் மனதை ஒருவாறு தைரியப்படுத்திக் கொண்டு, பாதி வார்த்தையை விழுங்கியவாறு கரகரக்கும் குரலில் சொன்னார்;
”மேதகையீர், தங்கள் மீது தும்மினேன். மன்னிக்க வேண்டும், தவறாய் நினைக்கலாகாது, வேண்டுமென்று செய்ததல்ல.’’
”என்ன இது? அப்போதே மறந்துவிட்டேன், இன்னுமா அதைப் பற்றி பேசணும்?’’ என்று, பொறுமை இழந்து அடி உதடு துடிக்கக் கூறினார் ஜெனரல்.
“மறந்து விட்டதாய்ச் சொல்கிறார்; ஆனால், அவர் கண்கள் ஒளிர்வதைப் பார்த்தால் நன்றாய் இல்லையே என்று எண்ணிய செர்வியாக்கவ் நம்பிக்கை இல்லாதவராய் ஓரக் கண்களால் ஜெனரலை நோட்டமிட்டார். என்னுடன் பேச அவருக்கு விருப்பமில்லை. விளக்கமாய் அவரிடம் சொல்ல வேண்டும் . தும்ம வேண்டுமென நினைத்துச் செய்ததல்ல. இயற்கை விதி என்று விளக்க வேண்டும், இல்லையேல் அவர் மீது எச்சில் துப்ப வேண்டுமென்று நான் இதைச் செய்ததாய் நினைத்துக் கொள்வார். இப்பொழுது நினைக்காவிட்டாலும் பிற்பாடு அவர் நினைக்கக்கூடும்!’’
வீட்டுக்குத் திரும்பியதும் செர்வியாக்கவ் தமது கண்ணியக் குறைவான நடத்தை குறித்துத் தம் மனைவியிடம் சொன்னார். ஆனால், மனைவி இதைப் பெரிதாய் நினைக்காமல் அலட்சியப்படுத்தியதாய் அவருக்குத் தோன்றிற்று. கணப் பொழுது கலங்கவே செய்தாள் என்றாலும், பிரிழாலவ் ”நமது’’ அதிபரல்ல என்பது தெரிந்ததும் அவள் தைரியமடைந்துவிட்டாள்.
”எதற்கும் நீ போய் அவரிடம் மன்னிப்பு கேட்பது நல்லதென நினைக்கிறேன்’’ என்றாள். ”இல்லையேல் நாலு பேருக்கு முன்னால் பாங்காய் நடந்து கொள்ளத் தெரியாத ஆளாய் உன்னை அவர் நினைத்துக் கொள்வார்.’’
”ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வார்! மன்னிப்புக் கேட்பதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன், ஆனால், அவர் ஒரு விபரீத மனிதர், நல்லபடியாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. தவிரவும் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.’’
மறு நாளன்று செர்வியாக்கவ் தமது பணித்துறைக்குரிய புதிய நெடுங் ”கோட்’’ அணிந்து, முடியையும் வெட்டிக் கொண்டு, தமது நடத்தை குறித்து விளக்கம் அளிப்பதற்காக பிரிழாலவிடம் சென்றார். ஜெனரலின் வரவேற்பறையில் நிறைய விண்ணப்பதாரர்கள் கூடியிருந்தனர். ஜெனரலும் அங்கு வீற்றிருந்து விண்ணப்பங்களை வாங்கிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கூடியிருந்தோரில் சிலருடன் பேசி முடித்தபின் ஜெனரல் தமது பார்வையை உயர்த்திச் செர்வியாக்கவின் முகத்தில் பதிய வைத்தார்.
”மேதகையீர்! நேற்று இரவு உங்களுக்கு நினைவில் இருக்கும், அர்காதியா நாடக மன்றத்தில்…’’ என்று ஆரம்பித்து, ”நான் உம்….. தும்மினேன், அதனால் உம்….. தங்களுக்கு மிக்க வருந்துகிறேன்’’ என்று இழுத்தார்.
”அடே, அபத்தம்! அபத்தம்!’’ என்றார் ஜெனரல். பிறகு அடுத்தவரைப் பார்த்து ”உங்களுக்கு நான் செய்யக் கூடியது என்ன?’’ என்று விசாரித்தார்.
செர்வியாக்கவுக்கு முகம் வெளிறி விட்டது.
”காது கொடுத்துக் கேட்க மாட்டேன்கிறாரே!’’ என்று தன்னுள் கூறிக் கொண்டார். ”அப்படியானால் கோபப்படுகிறார் என்றுதானே அர்த்தம்? இதை இந்த நிலையில் விட்டுவிட்டு நான் போகக் கூடாது. விளக்கமாய் அவரிடம் சொல்லியாக வேண்டும்’’
கடைசி விண்ணப்பதாரருடனும் பேசி முடித்த பின் ஜெனரல் தமது தனி அறைக்குப் போவதற்காகத் திரும்பியபோது செர்வியாக்கவ் அவர் பின்னால் ஓடி முணுமுணுக்கும் குரலில் சொன்னார்;
”மேதகையீர், மன்னிக்கணும்! என் தவறுக்காக உள்ளம் குமைகிறேன், இல்லையேல் எனக்கு இந்தத் துணிவு வந்திருக்காது, மேதகையீரைத் தொல்லை செய்ய நினைத்திருக்க மாட்டேன்’’
ஜெனரல் வாய்விட்டு அழப்போகிறவர் மாதிரி தோன்றினார், விலகிப் போய்விடும்படி கையை வீசிக் காட்டினார்.
”என்னைக் கேலி செய்யாதீர்!’’ என்று சொல்லி செர்வியாக்கவினுடைய முகத்தின் எதிரே கதவைத் தள்ளி மூடினார்.
”கேலி செய்கிறேனா!’’ என்று தம்முள் முனகிக் கொண்டார் செர்வியாக்கவ். ”இதில் வேடிக்கை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லையே எனக்கு ஜெனரலாய் இருக்கிறார், இது புரியவில்லையா, என்ன? சரி, இனி நான் இந்த அரிய மனிதரிடம் வந்து மன்னிப்பு கேட்டுத் தொந்தரவு செய்யப் போவதில்லை. நாசமாய்ப் போக! இவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விடுகிறேன், இனி ஒரு போதும் இவரிடம் வர மாட்டேன்! மாட்டவே மாட்டேன்!’’
வீட்டுக்குத் திரும்பி நடந்த போது செர்வியாக்கவின் மனத்துள் ஓடிய சிந்தனைகள் இவை. ஆனால் அவர் இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பவில்லை. எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவரால் அதன் வாசகத்தைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகவே, யாவற்றையும் சரிசெய்யும் பொருட்டு அடுத்த நாள் அவர் மீண்டும் ஜெனரலிடம் போக வேண்டியதாயிற்று.
“மேதகையீர், நேற்று நான் தங்களிடம் வந்திருந்தேன்’’ ஜெனரலுடைய வினவும் பார்வை தம்மீது திரும்பியதும் இவ்விதம் அவர் தமது விளக்கத்தை ஆரம்பித்தார்.
”மேதகையீர் நினைத்த மாதிரி நான் தங்களைக் கேலி செய்வதற்காக வரவில்லை. எனது தும்மலால் தங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்காக மன்னிப்பு கேட்பதற்காகவே வந்திருந்தேன். தங்களைக் கேலி செய்யலாமெனக் கனவிலும் நான் கருதக் கூடியவனல்லன். அம்மாதிரியான ஒரு துணிச்சல் எந்நாளும் வராது எனக்கு. பெரியவர்களைக் கேலி செய்யலாமென்கிற எண்ணத்துக்கு நாங்கள் இடந்தருவோமாயின், பிறகு மரியாதையே இல்லாமற் போய்விடும். மேலிடத்தில் இருப்போருக்குக் காட்ட வேண்டிய மரியாதை இல்லாதொழிந்துவிடும்.’’
”போ வெளியே! நிற்காதே, போ!’’ என்று செக்கச் சிவந்து போய் ஆத்திரம் தாங்காமல் ஆடியவாறு சீறினார் ஜெனரல்.
”புரியலிங்க, என்ன சொல்லறீங்க?’’ குலைநடுங்கிப் போன செர்வியாக்கவ் மெல்லிய குரலில் கேட்டார்.
”போ வெளியே!’’ என்று காலால் தரையைத் தட்டி மீண்டுமொரு தரம் ஜெனரல் சீறினார்.
செர்வியாக்கவுக்குத் தம்முள் ஏதோ இற்றுப் போனது மாதிரி இருந்தது. காதால் கேட்கவோ, கண்ணால் பார்க்கவோ சக்தியற்றவராய்ப் பின் பக்கமாய் நகர்ந்து கதவை அடைந்தார், பிறகு தெருவிலே இறங்கி மெல்ல நடந்தார். உணர்விழந்த நிலையில் தட்டுத் தடுமாறியபடி வீட்டுக்குத் திரும்பி, தமது பணித்துறை நெடுங்கோட்டுடன் (Uniform) அப்படியே சோபாவில் படுத்து மாண்டு போனார்.
(அந்தோன் பாவ்லொவிச் சேகவ், உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.)