நேயன்
ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர், அம்பேத்கர் இந்திய கலாச்சார ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்.
இது அந்தப் பித்தலாட்டப் பேர்வழியின் நான்காவது கண்டுபிடிப்பு (சிண்டுமுடிப்பு)
முதலில் இவர் இந்தியக் கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவாரா?
இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்: இந்தியாவை இனவழியாக, மொழிவழியாகப் பிரிப்பதை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர் அம்பேத்கர். ஆன்மிகக் கலாச்சார அடிப்படையில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் என்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு பொய்ச் செய்தியை _ புரட்டுச் செய்தியை இம்மோசடிப் பேர்வழி கூறியுள்ளார்.
ஆனால், உண்மையில் அம்பேத்கர் கூறியது என்ன?
“நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால் நாம் பெரிய மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதியினராகப் பிரிந்துபோன மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. நாம் உண்மையில் ஒரு தேசியத்தை விரும்பினால் இவை அனைத்தையும் வென்றாக வேண்டும். (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல், பாகம்_13, பக்கம்_127)
இந்து இராஷ்டிரம் என்று ஒன்று அமைந்தால் அது இந்த நாட்டின் மிகப் பெரிய சோகமாக அமையும் என்கிறார். இந்துமதம் –_ விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கு -_ பெரும் இடராகத்தான் இருக்கும்; கேடாகத்தானிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.
இந்தியாவிற்கென்று ஒரு பொதுவான கலாச்சாரமே இல்லாத நிலையில், இந்துக் கலாச்சாரத்தை அம்பேத்கர் ஆழமாக நேசித்தார் என்பது அசல் பித்தலாட்டம் அல்லவா?
இந்தியாவில் தமிழருக்கு ஒரு பண்பாடு, ஆரியருக்கு ஒரு பண்பாடு, சீக்கியருக்கு ஒரு பண்பாடு, மராட்டியருக்கு, குஜராத்தியருக்கு, வங்காளிக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சாரம். இஸ்லாமியருக்கு ஒரு கலாச்சாரம், கிறிஸ்துவர்களுக்கு ஒரு கலாச்சாரம், சமணர்களுக்கு வேறு கலாச்சாரம், பவுத்தர்களுக்கு மாறுபட்ட கலாச்சாரம்.
உண்மை நிலை இப்படியிருக்க, இந்திய கலாச்சார ஒற்றுமையில் அம்பேத்கர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அயோக்கியத்தனமா? இல்லையா? மேலே சொன்னதுபோல பல கலாச்சாரம் இருக்கையில் இந்துக் கலாச்சாரம் என்பது எது?
இந்துக் கலாச்சாரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் ஆண்களையும், பெண்களையும் ஒன்றுகூட்டி புத்த மதத்திற்கு எப்படி மாறியிருப்பார்? -_ மாற்றியிருப்பார்? பொய்ப் பிரச்சாரமே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அடிப்படை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?
இந்த மதமாற்றத்தில் இணைந்த 3 இலட்சம் பேரும் பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்லர்; இந்துமதக் கேட்டை அறிந்ததால் வந்தவர்கள்.
ஆனால், அன்றைக்கு இந்துத்துவாவாதிகளும், காஞ்சி சங்கராச்சாரியும் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டார் ரூபாய் 9 கோடி செலவிட்டதாக வதந்தி பரப்பி அம்பேத்கரைக் கேவலப்படுத்தினர். இதை அண்ணா அவர்கள் 21.10.1956 ‘திராவிட நாடு’ ஏட்டில் விளக்கியுள்ளார்.
இந்துமதக் கேட்டைச் சகிக்க முடியாமல் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, அநியாயத்தைப் பொறுக்க முடியாமல், இழிவு நீக்கிக் கொள்ள அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பிரிந்து புத்த மதத்தை ஏற்றார்.
இதே காரணத்திற்காகத்தான் பெரியார் திராவிட நாடு கேட்டார். கடைசியில் தமிழ்நாடு தமிழருக்கு வேண்டும் என்று கேட்டார்.
ஆக, அம்பேத்கர் நோக்கமும், பெரியார் நோக்கமும் ஒன்றுதானே? இதில் என்ன வேறுபாடு?
மதமாற்றத்தைத் தீர்வாக அம்பேத்கர் எண்ணினார்; தனிநாடு தீர்வாக பெரியார் எண்ணினார். ஆனால், இருவரும் வெறுத்தது இந்து மதக் கொடுமையை, இழிவை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைத்தானே! கொள்கையில் ஒன்றாய் இருந்து பாதையில் வேறு. இதில் என்ன முரண்பாடு உள்ளது?
எல்லாவற்றையும்விட ஒரு முதன்மையான கருத்தை இங்கு நாம் அறிந்தோம் என்றால், இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எப்படிப்பட்ட திரிபு பேர்வழி, திசைதிருப்பும் பேர்வழி, அயோக்கிய சிகாமணி என்பதைத் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.
அது என்ன முதன்மையான கருத்து?
அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறுகிறாரே… உண்மை என்ன தெரியுமா?
பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ரீதியாக ஆரிய பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என்று ஒவ்வொன்றும் தனக்கென தனிப் பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்கிறார் அம்பேத்கர்.
(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_3, பக்கம்_267)
இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்று அம்பேத்கரே ஆணித்தரமாக அறிவித்துவிட்ட பின் அவர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்பது அயோக்கியத்தனமா? _ இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்!
தந்தை பெரியார் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார். அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறும் கூற்று மிகவும் தவறானது.
1953ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பேத்கர்,
“இந்த மண்ணில் பூர்விகக் குடிகளின் (மண்ணின் மக்களின்) கருத்துகளை மதிக்கும் வகையில் மாநில அரசமைப்பு இருக்க வேண்டும். மொழி உணர்வைவிட ஜாதி உணர்வு உயர்ஜாதியினரிடம் அதிகம் இருப்பதால், மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும்’’ என்று ஆந்திர மாநிலச் சிக்கல் பற்றிப் பேசுகையில் கூறினார்.
ஆக, அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாய் நேசித்தார் என்பதும் பொய்; மொழிவாரி மாநிலத்தை எதிர்த்தார் என்பதும் பொய். இந்தப் பொய்க் கூற்றின் அடிப்படையில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முரண்பாடு இருந்தது என்பதும் மோசடி என்று தெளிவாய் விளங்கும்!
ஆக, இருவரும் மொழிவாரி மாநிலம் வேண்டும் என்றனர். பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கம் வைத்தார். பின்னர் அதைக் கைவிட்டு எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை என்றார். இதில் என்ன தேச விரோதம் உள்ளது? எல்லாம் மக்கள் நலனுக்காகத்தானே!