ஆங்காங்கு பக்தி என்பதை ஒரு வியாபாரமாக்கி, நடைபாதைகளில் கோயில்களைக் கண்ட கண்ட இடங்களில் கட்டி தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூலிக்கிறார்கள்.
சென்னையில் சில மய்யப் பகுதிகளில் நடைபாதை, அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து, நடைபாதைக் கோயில்களைக்கட்டி, அதையொட்டி ஒரு தெரு நீளம் கடைகளையும், குடியிருப்பு வாடகைக்கு விடப்படும் அறைகளையும் இணைத்துக் கட்டி நடுவில் ஒரு பகுதியை மட்டும் கோயில், சிலைகள் வைக்கப்பட்டு, அர்ச்சகரைப் போட்டு சம்பளம் கொடுத்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
“நடைபாதைக் கோயில்களால் போக்குவரத்திற்குப் பெரிதும் பாதிப்புகள் _ விபத்துகள் ஏற்படுகின்றன. “இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருந்தும், பல மாவட்ட கலெக்டர்கள், தலைமைச் செயலாளர் உட்பட பல அதிகாரிகளும் கடமை தவறியவர்களாக (Dereliction of Duty) என்ற அளவில்தான் இருக்கிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி கொடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை திருச்சி போன்ற சில மாவட்டங்களில் உள்ள நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்தி இடித்த பணி ஓரளவுக்கு அப்போது நடந்தது; பிறகு நின்றுபோய் விட்டது!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் திரு. எஸ்.எம்.சுப்ரமண்யம் அவர்கள் மிக அருமையான தீர்ப்பினை _- நடைபாதைக் கோயில்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் சட்டப்படி தவறு என்று சரியாக சுட்டிக்காட்டி உள்ளார்கள். ‘ஆண்டவனே ஆனால்கூட சட்டத்தின் விதிகளை தளர்த்தி, ஆண்டவன் ஆக்கிரமிப்புச் செல்லும் என்று எவரும் கூறிட முடியாது, நிலத்தை அபகரிக்கும் ஒரு கொள்ளைக்கூட்ட மாஃபிய ‘Land Mafia’ வும் நில அபகரிப்பாளர்களும் இப்படி ஆக்கிரமித்து தாங்கள் அனுபவிப்பதோடு, போக்குவரத்திற்கும் பொதுநலத்திற்கும் இடையூறு செய்பவர்களாக இருக்கிறார்கள்.
‘ஆண்டவனே ஆனால்கூட சட்டத்தின்
விதிகளை தளர்த்தி, ஆண்டவன் ஆக்கிரமிப்புச் செல்லும் என்று எவரும் கூறிட முடியாது
உடனடியாக மாநில அரசு இப்படி எத்தனை இடங்களில் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன என்று ஒரு பட்டியல் தயாரித்து _ -அது கோயிலானாலும், சர்ச்சானாலும், பள்ளிவாசல் மசூதியானாலும் எல்லாவற்றின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை இக்கோர்ட்டிற்கு உடனே ஜனவரி 21ஆம் தேதிக்குள் திரட்டித் தரவேண்டும்’’ என்று கடுமையான தீர்ப்பை வழங்கினார். மதச்சார்பின்மை, பொதுநலம், போக்குவரத்து சாலை விபத்துகள், தடுப்பு ஆகியவைகளுக்கு இத்தீர்ப்பு மிகவும் பயன்படும்.
நாம் பல மாதங்களாக எல்லா மாவட்டக் கலெக்டர்களுக்கு உச்சநீதிமன்றம், முன்பு அளித்த தீர்ப்பினை எந்த அளவுக்கு அந்த மாவட்டங்களில் செயல்படுத்தியுள்ளார்கள் என்ற விவரம் தருமாறு கேட்டதற்கு இதுவரை சரியான பதில் ஏதும் பல மாவட்டக் கலெக்டர்களிடமிருந்து வரவேயில்லை என்பதும் இப்போது பதிவு செய்யப்பட வேண்டிய உண்மையாகும்!
‘பெரியார் சமத்துவபுரங்களில்’ எந்த வழிபாட்டு ஸ்தலங்கள், கோயில், சர்ச், மசூதி ஏதும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை சட்டதை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுரத்தில் கோயில் கட்டுவதை எதிர்த்து கன்னியகுமரி மாவட்ட கலெக்டர் சரியானபடி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்மையில் 2018 டிசம்பர் 30ஆம் தேதி அன்று ஓசூரில் நடைபெற்ற ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகம விதிப்படிதான் கோயில் புணர்பூசை நடைபெற வேண்டும் என்று கூறும் பக்த சிகாமணிகள், நடைபாதை ஆக்கிரமிப்புக் கோயில்கள் ஆகம விதிப்படியா கட்டப்பட்டுள்ளன என்று என்றாவது கேட்டதுண்டா?
நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்! முன்பு சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் கோயில் கட்டும் முயற்சிக்கு எதிராக ஜஸ்டிஸ் வைத்தியநாதன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு எந்த அளவுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது என்பதும் கேள்விக்குறியே!
கி.வீரமணி,
ஆசிரியர், ‘உண்மை’