Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்ரோப்பிய பயணக் கட்டுரை

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனிவா நகரம் மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்குள்ள அய்க்கிய நாடுகள் சபையில் பல்வேறு உடன்படிக்கைகள் கையெழுத்தாகி உள்ளதை நாம் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். இன்றும் அதன் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறோம். மேலும் சுவிஸ் வங்கி என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு பண முதலைகள், கொள்ளையடித்தவர்கள் நினைவுக்கு வருவார்கள். அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கிடைத்தது. அதற்கடுத்த நாள் பாரிஸ் நகர் செல்லும் வாய்ப்பும் அங்கு ஈபல் டவரைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

2017ஆம் ஆண்டு ஜூலை 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்டேன். பிறகு நானும் மாநாட்டில்  கலந்துகொண்ட தோழர்களும் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலை இத்தாலி நாட்டின் பைசா நகரிலிருந்து சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்குப் பயணமானோம்.

எங்களின் பேருந்து காலை 9.10க்கு பைசா நகரிலிருந்து புறப்பட்டது. பயணத் தொலைவு 536 கி.மீ. மிகவும் இனிமையான பயணம்.

பயணம் முழுவதும் இரு மருங்கிலும் அடுத்தடுத்து மலைத்தொடர்கள். பேருந்து மலைமீது ஏறிச் செல்வதோ கொண்டை ஊசி வளைவுகளில் செல்வதோ கிடையாது. அடுக்கடுக்காக மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகளை அமைத்திருக்கிறார்கள். சாதாரணமாக சமவெளியில் பயணம் செய்வதைப் போன்றே இருந்தது.

இத்தாலியின் அலசாண்டிரியா (ALESSANDRIA) என்ற பெரிய நகரின் வழியாகவும் பேருந்து சென்றது. ஸ்கைவே மோன்டி பிலான்கோ (Skyway Monte Bianco) என்ற இடத்தில் உயரமான மலையில் பணி உறைந்து அழகாகக் காட்சியளித்தது. அங்கு இழுவைக் கார் மூலம் மக்கள் மலைமேல் சென்று கொண்டிருந்தனர்.

அதையடுத்து மணி 4:15க்கு இத்தாலி எல்லை முடிந்து பிரான்சு நாட்டு எல்லை ஆரம்பமானது. அதிலிருந்து சற்று தூரம் சென்ற பின் மிகவும் அதிசயத்தக்க பாதைக்குள் பேருந்து நுழைந்தது. அதாவது மலைத் தொடரைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை. அதன் நீளம் 11.6 கி.மீட்டர் என்றவுடன் மிகவும் மலைப்பாக இருந்தது. சுரங்கப் பாதையில் ஒரே ஒளி வெள்ளம். அதில் பாய்ந்து சென்றது பேருந்து.

பிறகு மாலை 5 மணிக்கு ஆட்டோகிரில் எனப்படும் சாலையோர விடுதிக்கு முன் பேருந்து நிறுத்தப்பட்டது. அதற்கு எதிரே பனி படர்ந்த உயரமான மலை. பனிப் பாறைகளுக்கு மேல் மேகக் கூட்டங்கள் தவழ்ந்து சென்றன. அது பிரான்ஸ் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட மவுண்ட் பிலான்க் (Mont Blanc) என்ற மலை. அதன் உயரம் 4810 மீட்டர்.

மாலை 6.30க்கு ஜெனிவா நகரில் பேருந்து நுழைந்தது. அங்கு முதலில் என் கண்களுக்குத் தென்பட்டது புளோரல் கிளாக் (Floral Clock) ஆகும். வட்டவடிவமான, பூக்கள் நிறைந்த தரையில், நீண்ட முட்களைக் கொண்ட பெரிய கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய இராட்டினம், உயரமாக பீச்சியடிக்கும் நீரூற்று, குழந்தைகள் விளையாட பல்வேறு வசதிகள் எனச் சிறந்த சுற்றுலாத் தலமாக அப்பகுதி விளங்கியது.

மேலும் ஓரிடத்தில் சுவிஸ் வங்கி தென்பட்டது. அதற்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதுதானே நம்மால் முடியும்!

நாங்கள் அடுத்து சென்ற இடம் அய்க்கிய நாடுகள் சபை. சாலையிலிருந்து உட்புறமாக மஞ்சள் நிறத்தில் கட்டிடம் காணப்பட்டது. அதன் முன் பல்வேறு நாட்டுக் கொடிகள் நடப்பட்டிருந்தன. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தில் பல உடன்படிக்கைகள் கையெழுத்தாகி-யுள்ளன என்பதை நினைத்துப் பார்த்தேன். சாலையின் மறுபுறம் பெரிய நாற்காலி சின்னம் காணப்பட்டது. அதன் முன்னங் கால்களில் வலது புறக்கால் உடைந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்தது. 1997ஆம் ஆண்டு ஒட்டாவா ஒப்பந்தம் கொண்டுவந்த போது, நிலக்கண்ணியின் பாதிப்புகளைப் பற்றிய கவனத்தை ஈர்க்க 12 மீட்டர் உயரமள்ள இந்த நாற்காலியை டேனியல் பெர்செட் என்பவர் வடிவமைத்தாராம். அதன் அருகே ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்து-வதற்கான இடம் காணப்பட்டது. நாங்கள் சென்றபோது வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சிலர் தங்கள் கொடிகளுடன் தங்களுக்கு ஜனநாயகம் வேண்டி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். நாங்களும் அங்கே சென்று தந்தை பெரியார் கொள்கைகளை முழங்கினோம். மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவுச் செயலர் மானமிகு குமரேசன் ஆகியோர் முழக்கங்களைச் சொல்ல நாங்கள் திருப்பி விண்ணதிர முழங்கினோம். எங்களைப் பார்த்த வெனிசுலா நாட்டவர்கள் ஓடிவந்து எங்களுடன் இணைந்து முழக்க-மிட்டனர். தந்தை பெரியாரைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டனர். மிகவும் உற்சாகத்-தோடு எங்களுடன் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

ஜெனிவா நகரின் அழகை எடுத்துக் கூற இயலாது. டிராம் வண்டிகள் சாலைகளில் சென்றவண்ணம் இருந்தன. மிதிவண்டிகளில் செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டது. மின்சாரத் தொடர்வண்டி போன்று பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்கியபடி சென்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. இனிப்பு வகைகள், கைக்கடிகாரங்களுக்கு புகழ்பெற்ற ஊர். நிறைய கடைகள் காணப்பட்டன. சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருந்தது. சிக்கல் இல்லாத போக்குவரத்து.

நடைபாதைக் கோயில்களோ, உடைக்கப்பட்ட பூசணிக்காய்களோ, அதில் தடுமாறி விழுந்து உயிரை விடும் அநாகரீகச் செயல்களோ, கார் சக்கரங்களில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்கும் அற்பத்தனங்களோ எங்கும் காண முடியாது. போலீஸ் இல்லாத சாலை சந்திப்புகள், ஒலி எழுப்பாமல் செல்லும் கார்கள் என நகரைப் பார்க்கவே பரவசமாக இருந்தது.

அன்று இரவு ஜெனிவா நகரில் ஒரு அழகிய விடுதியில் தங்கினோம். மறுநாள் 6ஆம் தேதி காலை விடுதியை ஒட்டிய, வயல்கள் நிறைந்த, ஆள் நடமாட்டமில்லாத சிறிய சாலையில் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டேன். அந்தச் சாலையின் ஒருபுறம் ஆப்பிள், திராட்சைத் தோட்டங்களும், மறுபுறம் மக்காச் சோள வயல்களும் காணப்பட்டன. வயல்களை அருகில் சென்று பார்த்தேன். சொட்டு நீர் பாசன முறை பயன்படுத்தப்படுகிறது.

காலை உணவிற்குப் பின் 6ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு பாரிஸ் நகர் நோக்கிப் புறப்பட்டோம். 540 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். ஏறக்குறைய பைசா நகரிலிருந்து ஜெனிவா நகருக்குள்ள தூரம். இதுவும் ஒரு வித்தியாசமான பயணமாகவே அமைந்தது. எப்போதுமே பேருந்தில் ஜன்னலுக்கு அருகில் உட்காருவது என் வழக்கம். காட்சிகளைப் பார்த்து கட்டுரைகள் எழுதுவதற்கு அதுதானே வசதி!

மலைப் பாதையில் பேருந்து சென்றது. இப்பாதையில் நிறைய வளைவுகள் காணப்-பட்டன. வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. காலை 9:30 மணிக்கு சுவிஸ் எல்லையை விட்டு பிரான்சு நாட்டு எல்லையில் பேருந்து நுழைந்தது.

மலைப்பாதைகளில் பலர் மிதி வண்டிகளில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து அவர்களை முந்திச் செல்லாமல் அவர்கள் பின்னாலேயே சென்றது. குறிப்பிட்ட இடைவெளிகளில் மிதி வண்டிகளில் செல்வோர் ஒதுங்குவதற்காக இடம் விடப்பட்டிருந்தது. அதில் அவர்கள் ஒதுங்கிய பிறகே பேருந்து அவர்களை முந்திச் சென்றது. மலைப்பாதைகளில் கற்கள், பாறைகள் உருண்டு சாலைகளில் விழாமல் இருக்க பாறைகளை ஒட்டி தடித்த இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமங்கள் வழியாகவும் பேருந்து சென்றது. கிராமங்களும் தூய்மையாகக் காணப்பட்டன. பெரும்பாலான வீடுகளில் அழகிய வண்ணப் பூக்களுடன்கூடிய தொட்டிகள் வைக்கப்-பட்டிருந்தன. இரண்டு மணி நேரம் மலைத் தொடர்கள் மீதே சென்று கொண்டிருந்த பேருந்து பிறகு சமவெளியை அடைந்தது. ஏ_39 என்ற எண் கொண்ட நெடுஞ்சாலையில் பேருந்து விரைந்தது. நெடுஞ்சாலையில் மனித நடமாட்டமே இல்லை. சுமார் ஒரு கி.மீட்டருக்கு ஒரு மேம்பாலம் இருந்தது. சாலையின் மறுபுறம் செல்ல மக்கள் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். விபத்து நடக்க வாய்ப்பே இல்லை. எந்த ஆண்டவனையும் வணங்கத் தேவையில்லை. வழிகாத்த வீரனோ, விநாயகனோ, மாதாவோ வேண்டாம். புத்தி இருந்தால் போதும்.

சில இடங்களில் வாய்க்கால்கள் காணப்-பட்டன. அவைகளின் மீதுள்ள பாலங்களின் மீது பேருந்து செல்லும்போது சிறு குலுங்கல்கூட இல்லை. சாலைகள் படு கச்சிதமாக  அமைக்கப்பட்டிருந்தது. வாய்க்-கால்கள் ஆக்கிரமிப்பு ஏதுமின்றி தூய்மை-யாகக் காணப்பட்டன. பெரிய படகுகளும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருந்தன.

பேருந்து விரைந்து சென்று கொண்டிருந்தது. மாலை சரியாக 4:16க்கு பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ஈபல் கோபுரம் (Eiffel Tower) தூரத்தில் தெரிந்தது. பார்க்க மிகவும் மகிழ்வாக இருந்தது. சற்று நேரத்தில் ஈபல் டவர் முன்பாகவே பேருந்து நின்றது. கடந்த கால நினைவுகள் என்னுள் எழுந்தன. 1969ஆம் ஆண்டு சிவந்த மண் படம் வெளியான பின்புதான் இந்த டவரைப் பற்றித் தெரிந்து-கொண்டது நினைவுக்கு வந்தது-. ஒரு பாடல் காட்சி அந்த இடத்தில் படமாக்கப்பட்டிருக்கும். அப்போது அதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

மறுநாள் அதன் மீது ஏறிப் பார்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆகவே, அன்று வேறு இடங்களைப் பார்த்து விட்டு மறுநாள் 7ஆம் தேதி காலை மீண்டும் ஈபல் டவர் வந்தோம்.

மேலே ஏற ரூ.2,700 வரை கட்டணம் உண்டு. வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு பெற்றபின் உள்ளே சென்றோம். உள்ளே சென்ற நான் டவரின் அடியில் நின்று அதை நோட்ட-மிட்டேன். 410 மீட்டர் அடிப்பக்கம் கொண்ட சதுர வடிவிலான பீடத்தில் டவர் எழுப்பப்-பட்டிருந்தது. ஒரு பக்க மூலையில்அதை வடிவமைத்த கெஸ்டாவ் ஈபல் (Gustave Eiffel) அவர்களின் மார்பளவுச் சிலை வைக்கப்-பட்டிருந்தது.

ஈபல் டவர் 1887_1889இல் கட்டி முடிக்கப்பட்டது. பிரஞ்சுப் புரட்சியின் (1789) நூறாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கட்டப்பட்டு 1889ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. 1889ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் நுழைவு வாயிலாக இது அமைந்தது. இது தற்காலிகமாகத்தான் கட்டப்பட்டது என்று அறிந்தபோது அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அது பிரிக்கப்படாமல் இன்று உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பல இடங்களில் நின்று பல கோணங்களில் டவரை நோக்கினேன். எதிரே புல்வெளியும் பூங்காவும் காணப்பட்டது. சிவந்த மண் படத்தில் சிவாஜி, காஞ்சனா பாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்ட இடத்தையும் பார்த்தேன். அதில் பார்த்ததுபோலவே தற்போதும் அந்த இடம் காட்சியளித்தது.

டவரின் மொத்த உயரம் ரேடியோ ஆண்டனாவையும் சேர்த்து 320.7 மீட்டர்கள். முதல் தளம் 57.6 மீட்டர் (189 அடி) உயரத்திலும், இரண்டாம் தளம் 115.5 மீட்டர் (379 அடி) உயரத்திலும், ஆன்டனா 20 மீட்டர் (66 அடி) உயரத்திலும் அமைந்துள்ளது.

வால் இரும்பு (Wrought iron), எஃகு ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த டவரில் ஏற உயர்த்திகள் (lift) உள்ளன. இரவில் ஒளிர நெருக்கமாக மின்விளக்குகள் அமைக்கப்-பட்டுள்ளன.

நான் இரண்டாவது தளத்திலிருந்து பாரிஸ் நகரின் அழகை வியந்து பார்த்தேன். அந்தத் தளத்தில் விடுதிகளும், கடைகளும் இருந்தன. கழிவறையும் இருந்தது. கழிவறையின் வாசலில், “ஆண்கள்’’ என்று தமிழில் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன். உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்-பட்டிருந்தாலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது பளிச்செனத் தெரிந்தது.

30 கோடி பார்வையாளர்களைத் தொட்டு-விட்ட உலக அதிசயங்களில் ஒன்றான இந்தக் கோபுரம் அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது.

நமது நாட்டில் பல நினைவுச் சின்னங்களும் கோயில்களும் இருந்தாலும் அவற்றை ஒரு கூட்டம் கடவுளின் பெயரால் வளைத்துப் போட்டுக் கொண்டு உண்டு கொழுத்து வருகிறது. அவைகளை மீட்டு சுற்றுலாத் தலங்களாக மாற்றினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து நாட்டில் வறுமை ஓரளவாவது ஒழியும் என்ற எண்ணம் மேலோங்க டவரை விட்டு கீழே இறங்கினேன்.