கேள்வி சிறுவன் கேட்டது! ஞானிகள், அறிஞர்கள், மேதைகள், பக்தர்கள் பதில் சொல்லத் தயாரா?
ஒரு நாட்டு அரசன் கடுமையான நோய்க்கு ஆட்பட்டிருந்தான். சிகிச்சைகள் பல அளிக்கப்பட்டும் நோய் தீரவில்லை. இறுதியாக ஒரு சாமியார், குறிப்பிட்ட சில அடையாளம் உள்ள ஒரு சிறுவனை பலி கொடுத்தால் அரசன் நோய் குணமாகும் என்றான்.
நாடு முழுக்க அந்த அடையாளங்கள் உள்ள சிறுவனைத் தேடினர். இறுதியில், ஓரு ஏழை வீட்டில் அந்த அடையாளங்கள் உள்ளச் சிறுவனைக் கண்டனர்.
அச்சிறுவனின் பெற்றோருக்கு அதிக அளவில் பணத்தைக் கொடுத்து வாங்கி அவனை பலி கொடுக்க சட்டரீதியான அனுமதி பெற நீதிமன்றம் சென்றனர். ஒரு நாட்டின் மன்னன் உயிரைக் காக்க ஒரு சிறுவனை பலியிடுவது தப்பல்ல என்று நீதிபதி அனுமதி வழங்கினார்!
அதன்பின் அச்சிறுவன் அரசன் முன் நிறுத்தப்பட்டான். சாமியார் அருகில் அமர்ந்திருந்தார். சிறுவனைப் பலி கொடுக்க வாளை உருவினான் கொலையாளி.
அப்போது அச்சிறுவன் கலகலவென சிரித்தான்!
அரசன் உட்பட அனைவரும் அதிர்ச்சி-யோடும், அதிசயத்தோடும் அச்சிறுவனைப் பார்த்தனர்.
அரசன் சிறுவனைப் பார்த்து, “சாகப் போகும் நீ ஏன் சிரிக்கிறாய்?’’ என்று கேட்டார்.
அச்சிறுவன் அரசனை வணங்கி, “அரசே! இந்த நாட்டின் காவலரே! எந்தக் குற்றமும் செய்யாத, பெற்ற பிள்ளையின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் என் பெற்றோர் என்னை விற்றுவிட்டனர்!
நீதிபதியோ எந்தக் குற்றமும் செய்யாத என்னைக் கொல்ல அனுமதி அளித்துவிட்டார்! நாட்டின் காவலரும் நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசனோ அவரது நலத்துக்காக குற்றமற்ற என்னைக் கொல்லச் சம்மதித்து, அக்கொலையைப் பார்க்கவும் தயாராகிவிட்டார்!
“கடவுள், உலகை ஆளுவதாய்ச் சொல்கிறார்கள். அவர் என்ன செய்யப் போகிறார்? என்று நினைத்தேன் _ சிரித்தேன்’’ என்றான்.
மன்னனின் மண்டையில் அடிவிழுந்தது-போல் இருந்தது. கண் கலங்கினான். சிறுவன் அருகில் வந்து கட்டிப் பிடித்து உச்சிமோந்தான்.
“சிறுவனான உனக்குள்ள அறிவு சாமியாருக்கும் இல்லை, நீதிபதிக்கும் இல்லை, அரசனான எனக்கும் இல்லை. உன் வார்த்தைகள் எங்கள் கண்களைத் திறந்தன; அறிவைத் தூண்டின!
உன்னைப் போன்ற ஒரு அறிவுள்ள பிள்ளையை பலி கொடுக்கக் கூடிய நாங்கள்தான் குற்றவாளிகள்’’ என்றான்.
உடனே அச்சிறுவன், “நாட்டை ஆளும் அரசரே குற்றவாளியென்றால், உலகில் நடக்கும் அநியாயம், அக்கிரமம், கொலைகளை பார்த்துக் கொண்டிருக்கிற கடவுள்தானே முதல் குற்றவாளி!
கடவுள் ஆட்சி உலகில் நடக்கிறது என்றால் உலகில் அநியாயங்களும், கொடுமைகளும் எப்படி நடக்கும்? ஆனால், எல்லா கொடுமைகளும் நடக்கின்றன. நல்லவர்கள் அழிய, கொடியவர்கள் சுகமாய் வாழ்கிறார்கள்! கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா?
கடவுள் என்று ஒன்று இருந்தால் இந்தச் சாமியார்கள் ஏமாற்றி வாழ்வார்களா? அரசனின் நோய் என்னைப் பலி கொடுப்பதால் தீரும் என்றால், அந்தப் பலியை ஏற்று, நோயைக் குணமாக்குவது எப்படி கடவுள் ஆகும்’’ என்று கேட்டான்! ஞானிகளே! அறிஞர்களே! மேதைகளே! பக்தர்களே! பதில் சொல்ல முடியாவிட்டால் ‘கடவுள் இல்லை’ என்று சொல்லுங்கள்! அதுதான் அறிவு நாணயம்! பதில் சொல்வீர்!
– நுண்ணோக்கி
Leave a Reply