சூரியன் விசுவகர்மாவின் மகள் ஸம்ஜ்ஞாவை மணந்தார். அவர்களுக்கு யமன் என்ற புத்திரனும், யமுனா என்ற பெண்ணும் பிறந்தனர். ஸம்ஜ்ஞாவால் சூரியனின் ஒளியைத் தாங்க முடியாமல் சாயா (நிழல்) என்றொரு பெண்ணைத் தோற்றுவித்து சூரியனுக்குத் தெரியாமல் தனக்குப் பதிலாக இருக்கச் செய்து அவள் தாய்வீடு சென்றுவிட்டாள். இதனை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சாயாவிடம் கூற அவள் தனக்குச் சாபம் எதுவும் ஏற்படாத வரை வெளிப்படுத்துவதில்லை என்று வாக்களித்தாள்.
பெண்கள் நதிகளாக முடியுமா?
சில நாட்கள் கழிந்தன. விசுவகர்மாவுக்கு தன் மகள் செயலில் ஐயப்பாடு எழ அவள் தந்தை வீட்டை விட்டு வெளியேறி உத்தரகுரு நாட்டில் ஒரு பெண் குதிரையாகித் திரிந்து வந்தாள். நிழலை நிஜம் என்று கொண்டு சூரியன் சாயாவுடன் வாழ்ந்து வருகையில் அவர்களுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என மூன்று குழந்தைகள் பிறந்தன. பிற்காலத்தில் ச்ருதஷர்வ சவர்ணி மனு ஆனான். ச்ரதசர்ம சனி கிரகமானது. ஒரு நாள் தபதி, யமுனை இருவர்க்கும் ஏற்பட்ட சண்டையில் உண்மை வெளிப்பட்டது. அப்போது தபதி, யமுனையையும், யமுனை தபதியையும் நதியாகச் சபிக்க இருவரும் நதி ஆயினர். இதனால் கோபமுற்ற சாயாவை யமன் காலால் உதைக்கப் போக யமனின் பாதத்தைப் பூச்சிகள் அரிக்கும் என சபித்தாள். அவ்வமயம் அங்கு வந்த சூரியன் சாபத்தை தான் மாற்ற முடியாது என்றும், அதனால் பாதத்திற்கு ஒன்றும் ஏற்படாது என்றும் கூறியதுடன், தபதி, யமுனை புண்ணிய நதிகளாயின.
சூரியன் ஆண் குதிரையாக ஆக முடியுமா?
உத்தரகுரு நாட்டில் சஞ்சனா பெண் குதிரையாக இருப்பதை அறிந்த சூரியன் அங்கு ஆண் குதிரையாக மாறி இருவரும் இணைந்திட அவர்களுக்கு அச்வினி குமாரர்கள் என்ற இரட்டையர் பிறந்தனர். அவர்கள் பின்னர் தேவலோக மருத்துவர் ஆயினர். குதிரைகள் முன் உருவைப் பெற்று வாழும்போது ரேவந்தா, அரஜ்வநிதா என்ற மகன் பிறந்தான். அவன் குஷ்யகர்களின் அரசன் ஆனான்.
அறிவியல் ஆய்வின்படியும் உண்மையாகவும் சூரியன் ஒரு நெருப்புக் கோளம். 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே கொளுத்துகிறது. சூரியன் பூமியைவிட பல மடங்கு பெரியது. அப்படிப்பட்ட நெருப்புக் கோளம் ஒரு பெண்ணோடு உடலுறவு கொண்டு பிள்ளை பெற்றது என்பதைவிட ஒரு மூடக்கருத்து உலகில் இருக்க முடியுமா? இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத கருத்தைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
பிரமன் படைத்தவை
பிரமன் உலகைப் படைத்தார். அடுத்து சுமேரு, கைலாயம், மலயம், ஹிமாலயம், உதயசலம், அஷ்டாசலம், சுபேலம், கந்தமாதனம் என்று மலைகளாய் படைத்தார். பல ஆறுகளையும், நகரங்களையும், ஊர்களையும் படைத்தார். லவண, இக்ஷு, சுரா, சர்பி, ததி, துக்த, ஜல சமுத்திரங்களையும், ஜம்புத்வீபம், சுகத்வீடம், குசத்வீபம், பிலக்ஷத்வீபம் என்ற ஏழு நிலப்பிரிவுகளையும் உருவாக்கினார். அடுத்து பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பவற்றையும், அதல, விதல, சுதல, தலாதள, மஹாதள, பாதாள, ரஸதல நரகங்களையும் சிருஷ்டித்தார். இவை அனைத்தும் கூடியே பிரம்மாண்டம் எனப்படும்.
என்கிறது இந்துமதம். இதுதான் அறிவியல் கருத்தா? இப்படிதான் உலகம் வந்ததா? இப்படிக்கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?.
காதிலும், கழுத்திலும் பிள்ளை பிறக்குமா?
பிரம்மனது வலது செவியிலிருந்து புலஸ்தியரும், இடது காதிலிருந்து புலஹரும், வலது புறத்திலிருந்து கிரதுவும், வலது நாசித்துவாரத்திலிருந்து அரணியும், இடது துவாரத்திலிருந்து அங்கிரசரும், வலது பக்கத்திலிருந்து பிருகுவும், இடது பக்கத்தி-லிருந்து தக்ஷனும், நிழலிலிருந்து கர்தமரும், உந்தியிலிருந்து பஞ்சசிக்ஷவும், மார்பிலிருந்து வதுவும், கழுத்திலிருந்து நாரதரும், புஜங்களிலிருந்து மரீசியும், திரும்ப கழுத்தி-லிருந்து அபந்தரதமனும், நாவிலிருந்து வசிஷ்டரும், கீழுதட்டிலிருந்து பிரசேதரும், இடது அக்குளிலிருந்து ஹம்சரும், வலது அக்குளிலிருந்து யதியும் தோன்றினர்.
நதியென்பது மலையில் பெய்யும் மழை நீரால், சுனை நீரால் உருவாகி ஓடிவரக் கூடியது. இது அறிவியல் உண்மை. ஆனால், இரு பெண்கள் தான் நர்மதையாகவும், தபதியாகவும் ஆனார்கள் என்பது அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானது அல்லவா? இப்படிக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
பாற்கடலைக் கடைய ஆயத்தம்
இந்திரனுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, “பாற்கடலைக் கடைந்தால் அகண்ட ரத்தினங்களும், மற்றும் அபூர்வ பொருள்களும் கிடைக்கும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்’’ என்று கூறினான். உடனே அனைவரும் பாற்கடல் உள்ள இடத்தில் ஒன்று கூடினர். அரக்கர் கூட்டத்தையும் அனுப்பி வைக்குமாறு பாதாள லோக பலிச்சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அசரீரி கூறியவாறு மந்தர மலைக்கெதிரில் விசித்திர நிறங்களுடைய ஆமை உள்ளது. அதனைக் கொண்டுவந்து கடலில் விட்டனர். உடனே அது மிகப்பெரிய உருவெடுத்து மந்திர மலையைச் சுற்றிக் கொள்ளுமாறு விஷ்ணு கூற, அது தான் தூள் தூளாகி விடுவேன் என அஞ்சிக் கூறிட, பகவான் உலகையே தாங்கும் உனக்கு இது ஒரு பொருட்டல்ல என்று கூறினார். உனக்கோர் ஆபத்துமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இவ்வாறு பாற்கடல் கடைவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற, வாசுகி மந்திர மலையைச் சுற்றிக் கொள்ள அதன் தலைபக்கம் ராக்ஷசர்களும், வால்பக்கம் தேவர்களும் இருந்து பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர்.
கடலைக் கடைந்தால் ஆணும் பெண்ணும் கிடைப்பார்களா?
தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் விண்ணிலிருந்து பாற்கடலைக் கடைவதைக் காணலுற்றனர். இடையில் கடைவதில் ஈடுபட்டவர்கள் களைப்புற்றனர். அவர்களுக்கு இயலாமை ஏற்பட்டது. எல்லோரும் தேவையான பலம் தந்து இந்தக் கடைவதை வெற்றிகரமாக்குமாறு ஸ்ரீஹரியை வேண்டினர். அப்போது மகாவிஷ்ணு, தேவர்களே, தானவர்களே, இதற்குப் போய் அலுத்துக் கொள்ளலாமா? இது மிக அற்பப்பணி. சமுத்திரம் உள்ளது; மத்து உள்ளது; கயிறு உள்ளது; நானிருக்கிறேன். மேலும் முயற்சி செய்யுங்கள் என்றார். அவர்கள் மறுபடியும் புது உற்சாகம், பலம் கொண்டு கடைய ஆரம்பித்தனர். அப்போது மலை பலவிதமாக அசைய ஆரம்பித்தது. அப்போது மகாவிஷ்ணு மலையைக் காலால் அழுத்தினார். பின்னர் முழுமனதுடன், முழுமூச்சாய் மதனம் நடைபெற்றது. சிலநேரம் வரை ஒன்றுமே பலன் கிடைக்காததால் பிரம்மா ஜாம்பவானை ஓஷதிகளைக் கடலில் சேர்க்குமாறு கூறினார். பிறகு கடலிலிருந்து ஒரு வெள்ளை ரசம் வெளிவர அதனை பிரம்மா ஒரு தங்கக் கலசத்தில் போட்டு வைத்துக் கொண்டார்.
மேலும் கடைந்திட அதிலிருந்து ஐராவதம் என்னும் யானை தோன்றியது. பிறகு மதுரசம் தோன்றியது. அதன் நாற்றம் பொறுக்க முடியாமல் அதனை வெறுத்தனர். அடுத்து சந்திரன் தோன்றினான். உடனே மகாலக்ஷ்மி பிறந்தாள். அவளுக்குப் பின்னால் ரம்பை, மேனகை, திலோத்தமை, கிருதாசி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை முதலிய தேவலோக நடன மாதர்கள் தோன்றினர். பிறகு நிதிகள் தோன்றின. தினமும் ரத்தினங்கள் சிந்தும் உடலுள்ள இரண்டு திவ்விய புருஷர்கள் வெளிப்பட்டனர். பிரம்மா அவர்களிருவரையும் லக்ஷ்மி சந்ததியில் இருக்கச் செய்தார். அவர்கள் குபேரனுக்கு நவநிதிகள் முழுவதும் கிடைக்கச் செய்தனர். பின்னர் உச்சைச்சிரவம் என்னும் வெண்குதிரை தோன்றியது. அதன் பின் ஒரு தாமரை மொட்டு குடைபோல் தோன்றியது. அதிலிருந்து ரத்தினங்கள் கொட்ட ஆரம்பித்தன. அது தான் பிரம்ம தண்டலம். அடுத்து பிரம்மாவுக்கேற்ற கமண்டலம் வெளிப்பட்டது. பின்னர் கல்பதரு, காமதேனு, சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம் ஆகியவை தோன்றின.
கடல் என்பது உப்பு நீர். பாற்கடல் என்று ஒன்ற உலகில் இல்லை. அப்படியே பாற்கடல் இருந்து அதைக் கடைந்தால் வெண்ணெய்தான் வரும்! ஆனால், பாற்கடலைக் கடைந்ததும் பெண்களும், ஆண்களும், பொருட்களும் வந்தன என்பது அறிவுக்குப் பொருந்தும் கருத்தா? இப்படிக் கூறும் இந்துமதத்திற்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
(சொடுக்குவோம்…)
– சிகரன்