அந்திப்பொழுதில் ஆற்றங்கரையில் வந்து அமர்ந்தார் கலைமணி. ஆற்றில் உதாரணம் சொல்வதற்குக்குகூட சொட்டுத் தண்ணீர் இல்லை. சற்றுத் தொலைவில் ஆற்றின் குறுக்கே வாகனங்கள் செல்லும் பாலம் காணப்பட்டது. பாலத்தின் அடிப்பாகங்களில் நிறைய பள்ளங்கள் இருந்தன. இருந்த மணலையெல்லாம் சுரண்டி திருடப்பட்டு கட்டாந்தரையாகி அதில் முட்செடிகள் வளர்ந்து புதர்களாகக் காட்சியளித்தது.
சிறுவயதில் நண்பர்களோடு இந்த ஆற்று மணலில் குட்டிக்கரணம் அடித்தது, சடுகுடு ஆட்டம் ஆடியது போன்ற காட்சிகள் எல்லாம் அவர் நினைவில் கொண்டுவந்து பெருமூச்சு விட்டார். தற்போதைய இளைஞர்கள் இங்கு வந்து விளையாட முடியாதே! காரணம் ஆறானது மிருகங்கள் வாழும் புதர்களாக அல்லவா மாறிவிட்டது!
அப்போது அங்கு அவரது இளம் பருவத்திய நண்பர் பால்ராஜ் வந்தார்.
“கலைமணி, என்னடா ஆற்றையே வெறிக்க பாத்துகிட்டு இருக்க?’’ எனக் கேட்டார் பால்ராஜ்.
“வாடா பால்ராஜ், நாம சின்ன வயசில ஓடியாடி விளையாண்ட இந்த இடம் இப்போ எப்டி இருக்குது பாத்தியா?’’ என்றார் கலைமணி.
“அது ஒரு கனாக்காலம்தான். இப்ப அதை நெனைச்சா பெருமூச்சுதான் வரும். இப்ப ஆறு இருக்கு. ஆனா, தண்ணீர் இல்லை; மணலும் இல்லை’’ என்று விரக்தியுடன் கூறினார் பால்ராஜ்.
“ஆமாம், நமது பேரப் பிள்ளைகளை இங்கு அழைத்து வந்து காட்டினால் தண்ணீரும் மணலும் இல்லாத இந்த ஆற்றை ஆறு என்று ஒப்புக்கொள்ளவே மாட்டாங்க’’ என்றார் கலைமணி.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது அவர்களின் பேச்சு எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை நோக்கித் திரும்பியது. பால்ராஜ்தான் பேச்சை ஆரம்பித்தார்.
“கலைமணி, தீபாவளிக்கு ஊரில் இருக்கப் போறீயா அல்லது சென்னைக்கு மகன் வீட்டுக்குப் போகப் போறீயா?’’
“என் மகன் வரச் சொல்லி போன் பண்ணினான். எனக்கும் என் பேத்தி இனியாவைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. பார்த்து ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சி’’ என்று பதில் கூறினார் கலைமணி.
“தீபாவளின்னா எனக்கு ரொம்ப உயிரு. ரொம்ப விரும்பி கொண்டாடுவேன். உனக்கும்தான் தெரியுமே! இப்பகூட பட்டாசு கொளுத்துவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’’
“நீ ஒரு ஆளு பால்ராஜ்! அது சரி, தீபாவளி எதுக்காக கொண்டாடுறாங்க தெரியுமா?’’
“நரகாசுரன் செத்துப்போனதை கொண்டாடத்தானே தீபாவளி!’’
“எல்லாம் புராணக் குப்பைகள். பகுத்தறிவுக்கு பொருந்தாத கதைகள். அதைக் கொண்டாடுவது சரியல்ல.’’
இவ்வாறு கலைமணி கூறியதும் அது ஏன் அறிவுக்கு பொருத்தமில்லாதது எனத் தெளிவாக அறிய விரும்பினார் பால்ராஜ்.
“கலைமணி, நீ எப்பவுமே இப்படித்தான். தீபாவளியை ஏன் கொண்டாடக் கூடாது என்கிறாய்? விளக்கமாய்ச் சொல்லு?’’ எனக் கேட்டார்.
கலைமணி சொல்லத் தொடங்கினார்.
“தீபாவளியில் முக்கிய கதாபாத்திரங்கள் நரகாசுரன், கிருஷ்ணன், சத்தியபாமை ஆகியோர். இந்தத் தீபாவளிக் கதை என்பது மிகவும் இழிவானதும் ஆபாசமானதுமாகும். விஷ்ணு என்னும் கடவுள் பல அவதாரம் எடுத்திருக்கிறானாம். ஒருமுறை அசுரர்கள் அமிர்தத்தை கடைந்து எடுத்தனர். அதை வஞ்சமாகப் பறித்து தேவர்களுக்குக் கொடுக்க விஷ்ணு விரும்பினான். அதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தான். அவன் அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்து முடித்தவுடன் சிவன் என்ற கடவுள் அந்த மோகினியைப் பார்த்தான்.’’
“அப்புறம் என்னாச்சு?’’ என்று ஆவலாகக் கேட்டார் பால்ராஜ்.
“சிவன் மோகினி மேல் காதல் கொண்டு அவளை விரட்டினான். அவளை பலாத்காரம் செய்தான். அப்போது சிவனின் இந்திரியம் பூமியில் கொட்டியது. அந்த இந்திரியம்தான் இப்போது பூமியில் தங்கமும் வெள்ளியுமாக மாறிவிட்டதாம்.’’
“படு அசிங்கமாக உள்ளதே’’ என்று கூறியபடி முகத்தைச் சுழித்தார் பால்ராஜ்.
“இன்னும் சொல்கிறேன் கேள்’’ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார் கலைமணி.
“வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தவன்’’ என்று கேள்விப்பட்டிருக்கிறாயா பால்ராஜ்.’’
“ம். கேள்விப்பட்டிருக்கேன் கலைமணி. ஆனால், அதன் முழுக் கதையும் தெரியாது.’’
“சொல்கிறேன் கேள். பத்மாசூரன் என்று ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் சிவனிடம் வேண்டி ஒரு வரம் வாங்கினான். அதாவது தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் தலை வெடித்து இறந்துவிட வேண்டும் என்பதே அந்த வரம். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்து விட்டானாம். அதை சோதித்துப் பார்க்க சிவன் தலையிலேயே கை வைத்துப் பார்க்க பத்மாசூரன் முயன்றபோது சிவன் பயந்துகொண்டு ஓடினான். அப்போது விஷ்ணு அழகான மோகினி வேஷம் பூண்டுவந்து தந்திரமாக பத்மாசூரனை அழித்தானாம். ஆனால், சிவனைப் பற்றி நமக்குத் தெரியாதா! மோகினி வேஷத்தில் இருந்த விஷ்ணு மேல் காமம் கொண்டு அவளைப் புணர்ந்தானாம். அதில்தான் அய்யப்பன் பிறந்தானாம்.’’
“அசிங்கத்திலும் அசிங்கமாக இருக்கே கலைமணி’’
“இன்னும் இருக்கு பால்ராஜ். சொல்றேன் கேள். ஒருமுறை விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்தான். அந்தப் பன்றி பூமா தேவியைப் புணர்ந்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி நரகாசூரன் என்பவன் பிறந்தானாம். அந்த அசுரன் பெரியவனாகி தேவர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்தானாம். உலகையே அழிக்க நினைத்தானாம். இதனால் தேவர்கள் கிருஷ்ணனிடம் முறையிட்டார்களாம். கிருஷ்ணன் உடனே ஓடிவந்து நரகாசூரனைப் பிடித்து வதம் செய்து கொன்றானாம். சாவதற்கு முன் அவன் கேட்டபடி அவன் செத்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறதாம். இதில் ஏதாவது அறிவு நாணயம் இருக்கா பால்ராஜ்.’’
“சுத்தமா இல்லை. தேவையில்லாத பண்டிகை கலைமணி.’’
“எவ்வளவு செலவுகள்! கடன் வாங்கி பலர் செலவு செய்றாங்க. பட்டாசைக் கொளுத்தி காசைக் கரியாக்குறாங்க. வெடி விபத்தில் பல பேர் செத்துப் போறாங்க பால்ராஜ்.’’
“அது மட்டுமல்ல கலைமணி, பலபேர் தீபாவளி இனாம் கேட்டு சுயமரியாதையை இழக்குறாங்க. தேவையில்லாமல் பயணம் செய்வது, ஒரே நாளில் நிறைய தின்பண்டங்கள் செய்து வீணாக்குவது போன்ற செயல்களும் நடந்துகிட்டுத்தானே இருக்கு.’’
“உனக்கும் இப்பத்தான் சரியா புரிஞ்சிருக்கு பால்ராஜ். ரொம்ப சந்தோஷம்.’’
“அதெல்லாம் சரிதான் கலைமணி, உன் பேத்தி இனியாவுக்கு தீபாவளியை முன்னிட்டு ஏதும் செய்ய மாட்டியா? அவ சின்னப் பொண்ணாச்சே. பட்டாசு வெடிக்க ஆசைப்படுவாளே!’’
இவ்வாறு பால்ராஜ் கேட்டதும் கலைமணி சில வினாடிகள் தாமதித்து விட்டு பதில் கூறினார்.
“நீ சொல்றது சரிதான் பால்ராஜ். இனியாவுக்கு பட்டாசு கொளுத்துவதில் ஆர்வம்தான். என்கிட்ட பட்டாசு கேட்ப்பா. ஆனா, நான் வாங்கித்தர மாட்டேன். இருந்தாலும் என் மகன் பட்டாசு வாங்கி நான் அனுப்புனதா பொய் சொல்லி பேத்திகிட்ட கொடுத்திடுவானாம். அவளும் தாத்தாதான் வாங்கி அனுப்பினார்னு நம்பிடுவாளாம். அவளுக்கு உண்மையைப் புரிய வைக்கணுமே.’’
“கலைமணி, அடுத்த மாசம் தீபாவளி வரப் போவுது. இந்த வருஷமும் உன் மகனே பட்டாசு வாங்கிக் கொடுத்து நீ அனுப்பினதா சொல்லிவிடுவானா?’’ எனக் கேட்டார் பால்ராஜ்.
“ஊகூம். இந்த வருஷம் அப்படி செய்ய வேணாம்னு சொல்லிவிட்டேன். அதுக்குப் பதிலா நான் நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்கி வைச்சிருக்கேன். அதை பார்சல் பண்ணி இனியாவுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்’’ என்றார் கலைமணி.
“அப்படியா! உன் பேத்தி அதை ஒத்துப்பாளா? சின்னப் பிள்ளையாயிற்றே. பட்டாசுகளைத்தானே விரும்புவா!’’ என்றார் பால்ராஜ்.
“ஏதோ துணிஞ்சுதான் செய்றேன். பார்ப்போம்’’ என்றார் கலைமணி.
மறுநாளே குழந்தைகளுக்கான கதைகள், பொம்மைப் படங்கள், பகுத்தறிவு சிறுகதைகள் அடங்கிய புத்தகங்கள் பலவற்றை இனியா பெயருக்கு பார்சலில் அனுப்பி வைத்தார் கலைமணி. அது பற்றிய தகவலையும் மகனிடம் தெரிவித்தார்.
ஆனால், அவரே எதிர்பாராத நிலையில் அய்ந்து நாட்களில் அவர் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை சென்ற அவர் தனது பணிகளை முடித்துக் கொண்டு மகன் வீட்டிற்குச் சென்றார். வீட்டருகே சென்றதும் அவருக்கு ஒரு அச்சம். இனியா என்ன சொல்வாளோ? பட்டாசுகளுக்குப் பதிலா புத்தகங்கள் அனுப்பி வைத்தோமே! என்மீது கோபித்துக் கொள்வாளா? கோபித்துக் கொண்டால் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்ற சிந்தனையுடன் மகன் வீட்டிற்கு வந்த அவர் அழைப்பு மணியை அழுத்தினார்.
கதவு திறந்தது. இனியாதான் கதவைத் திறந்தாள். தாத்தாவை உற்றுப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. உள்ளே வந்து அமர்ந்தார். இனியாவை ஏறிட்டு நோக்கினார்.
அடுத்த வினாடி இனியா ஓடிவந்து தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“தாத்தா, நல்லாயிருக்றீங்களா தாத்தா?’’ என அன்பொழுகக் கேட்டாள்.
கலைமணி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். திடீரென அவருக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை பார்சல் இன்னும் கிடைத்திருக்காதோ!
அதைத் தெரிந்துகொள்ள இனியாவிடம், “இனியா, நான் அனுப்பிய பார்சல்…’’ என இழுத்தார்.
“கிடைச்சது தாத்தா. ரொம்ப நன்றி தாத்தா’’ என்று உற்சாகத்துடன் பதில் சொன்னாள் இனியா.
“நான் உனக்கு பட்டாசு அனுப்பலையே. அது பற்றி உனக்கு வருத்தமாக இல்லையா?’’ என்று தயங்கியபடியே கேட்டார் கலைமணி.
“அதெல்லாம் நீங்க அனுப்பிய புத்தகங்களை படிச்சத்துக்கு முன்னாடி. புத்தகங்களை படிச்சப்புறம் நான் மாறிட்டேன் தாத்தா’’ என்றாள் இனியா.
“அப்படியா? ரொம்ப நல்லது இனியா. நான் எதிர்பார்க்கவே இல்லை.’’ என்றார் கலைமணி.
“நீங்க அனுப்பிய புத்தகங்களில் தீபாவளி பற்றியும் எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சப்புறம் நான் திருந்திட்டேன். இனிமே பொங்கலை மட்டும்தான் கொண்டாடுவேன் தாத்தா’’ என்றாள் இனியா.
“அது சரி இனியா, நான் அனுப்பிய புத்தகங்களில் உனக்கு பிடிச்ச புத்தகம் எது?’’ எனக் கேட்டார் கலைமணி.
“பெரியார் பிஞ்சு புத்தகம்தான் தாத்தா’’ எனக் கூறிவிட்டு கலகலவென சிரித்தபடியே வீட்டிற்குள் ஓடினாள் இனியா.அவள் மனம் மாறியதை நினைத்து மிகவும் மகிழ்ந்தார் கலைமணி.
– ஆறு. கலைச்செல்வன்