நூல் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாமா?
ஆசிரியர்: குமார் ராமசாமி
வெளியீடு: பகுத்தறிவு பதிப்பகம்,
7/4, முதல் குறுக்குத் தெரு,
வெங்கீஸ்வரர் நகர்,
வடபழனி, சென்னை – 26
செல்பேசி: 89392 27100
பக்கங்கள்: 216 விலை: ரூ.100/-
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற ஓராண்டின் வரலாறு விளக்கப் பட்டுள்ளது. இந்தக் கொள்கை முழக்கத்தின் உண்மையான நிலை, வருட வரிசையில் விளக்கப்பட்டு, பெரியாரின் பார்வையில் பகுத்தறிந்து, களைவதற்கான வழிமுறை காட்டப்பட்டுள்ளது.
ஆகமங்களை விளக்கி, அதனை உருவாக்கிய சிவாச்சாரியார்கள் மனநோயாளிகள் என்று சாடப்பட்டுள்ளனர். ஜாதி ஒழிய அம்பேத்கர் கூறிய ஆலோசனைகள் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. ஆகம விதியினை விளக்கி, அது என்னதான் ஆணையிடுகிறது என்பது அலசி ஆராயப்பட்டுள்ளது.
ஆகம விதிகளை மீறியுள்ள செயல்கள் 5 பிரிவுகளில் சொல்லப்பட்டு சிந்தனையைத் தூண்டியுள்ளன. கடவுள்கள் பிரபலமடையும் விதம் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது.
பரம்பரைக் கலாச்சாரம் என்ற பெயரில் நடைபெறும் அவலம், ப்ராச்சி என்ற அர்ச்சகர்களின் பரிபாஷைச் சொல்லின் அடிமைமுறை அவலம் விளக்கப்பட்டு தமிழக அரசுக்கு ஆணையிட்டிருக்கும் முறை அருமை!
இனி நாம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களையும் விளக்கி, வருங்கால சந்ததியினருக்கும், நாட்டுக்கும் நல்வழி காட்டியிருப்பதே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாமா?
நூல் : கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்
ஆசிரியர்: நா. சுப்புலட்சுமி
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை – 11
செல்பேசி: 94446 40986
பக்கங்கள்: 80 விலை: ரூ.50/-
செம்மொழிக்கு வணக்கம் கூறி, வள்ளுவர் நெறியில் வீரம் பேசி, பெரியாரை நினைந்து கவிதையினைக் கொண்டு சென்றுள்ளார் நூலாசிரியர்.
இலங்கைத் தமிழருக்காக இரங்கி, கொதிக்கும் இரத்தத்தை / அடக்கி அடக்கி / நோயை வாங்கியவனுக்கு / இரவுகள் விடியுமா?/ என வினா எழுப்பி, அவர்களின் நிலையை விளக்கி தென்திசைக் கடல் மட்டும் / ஓயாமல் துப்புகிறது / தமிழகத்து முகத்தில்… /என்று குமுறப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை விளக்கப்பட்டுள்ளது. எழுதுவதன் இன்றியமையாமை எடுத்து இயம்பப்பட்டுள்ளது. இன்றைய பிள்ளைகளின் மனநிலையும் அதனால் முதியோர்கள் படும் வேதனையும் விளக்கப்பட்டுள்ளது. பெருந் தன்மை என்ற தலைப்பில் இன்றைய சமுதாய நிலையினை விளக்கி, திரைகடலோடி திரவியம் தேடு என கூறியுள்ளமை சிந்திக்க வேண்டியது.
இப்படிப் பொதுவான தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றிருப்பினும், கறுப்புப் பக்கங்கள் கிழிக்கப்படட்டும், அகதிகள், பனியும் சுடுகிறது, பதினெட்டே கல், என்ற பெரும்பாலான தலைப்புகள் இலங்கைத் தமிழர்களின் நிலைக்காக வருந்தியதோடு போர் முடியட்டும் என்ற அறைகூவலையும் விடுத்துள்ளதே கிழிக்கப்பட வேண்டிய கறுப்புப் பக்கங்கள்.
– செல்வா