குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

செப்டம்பர் 16-30

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கொயில்

– தகவல் : மு.நீ.சிவராசன்

(பிடில் கோவிந்தசாமி பிள்ளை பிடில் வாசிப்பதில் நிகரற்ற பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்.  காலம்சென்ற அவரின் துக்கக் கூட்டமொன்று மார்ச் 25,. 1931 இல் தஞ்சை ராவ்பகதூர் இராமநாதஞ் செட்டியார் அவர்கள் மண்டபத்தில் நடைபெற்றது.  அக்கூட்டத்திற்குப் பார்ப்பன, பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் பலரும் வந்திருந்தனர்.  ஊர்வலத்தில் பிள்ளை அவர்களின் படத்தோடு தியாகய்யரின் படமும் வந்தது.  அதிலும் அய்யரைப் பூஜித்தே பிள்ளையின் படத்தை எடுக்க வேண்டுமாம்.  என்னே கொடுமை! அப்பொழுது நிறைவேற்றிய தீர்மானமொன்றில் பிள்ளை அவர்கள் நடத்தி வந்த தியாகய்யர்வாள் உற்சவத்தை அவர் நினைவு தினத்தில் விடாது நடத்திவர வேண்டும் என்று ஏகமனதாய் நிறைவேற்றினார்கள். பிள்ளை அவர்களின் பெயரைச் சொல்லி தியாகய்யரின் உற்சவத்தை நடத்தும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு நம் மக்கள் பலியாவது அறிவுடைமை ஆகுமா?  அதுபற்றிய நிகழ்ச்சியைக் குடிஅரசு நமக்குத் தெளிவாகக் காட்டுவதைப் படித்துப் பாருங்கள்.)

சுயமரியாதை நன்னிலையுற்று வருமின் னாளில், நாம் ஏமாற்றுவதினின்றும் தப்ப வழியில்லை.  காலஞ்சென்ற திருவாளர் பிடில் கோவிந்தசாமி பிள்ளை அவர்களின் துக்கக்கூட்டமொன்று தஞ்சை ராவ்பகதூர் இராமநாதஞ் செட்டியார் அவர்கள் மண்டபத்தில் 25 ஆம் நாள் புதன்கிழமையன்று நடைபெற்றது.  அக்கூட்டத்திற்குப் பிராமண, பிராமணரல்லாத சங்கீத வித்வான்கள் பலரும், சங்கீதப்பற்றுடையார் பலரும், மற்றுமனேக ஊர்களிலிருந்தும் சங்கீத வித்வான்களும் சங்கீதத் தேர்ச்சியுற்ற பெண்மணிகளும் வந்திருந்தனர்.

பிள்ளையவர்களின் துக்கக் கொண்டாட்டத் தினத்தன்று தியாகய்யரின் படத்தைப் பூஜைசெய்த பின்னர் கோவிந்தசாமி பிள்ளை அவர்களின் படத்தையும், தியாகய்யரின் படத்தையும் ஊர்வலம் செய்தனர்.  இதில் அய்யரின் படமும் ஊர்வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.  சோடசக்கிரிகைகளிலும் பார்ப்பனர் கலப்பதுபோல், திரு. பிள்ளை அவர்களின் படத்திலும் தியாகய்யரின் படம் கலந்துகொண்டது போலும்! செத்த உயிர்களுக்குப் பிரதிநிதியாக வரும் பார்ப்பனப் புரோகிதர்கள்போல் பிள்ளை அவர்களின் துக்கக் கூட்டத்திலுமா அய்யரின் படம் கூடவே வரவேண்டும்?  அதிலும் அய்யரைப் பூஜித்தே பிள்ளையின் படத்தை எடுக்கவேண்டுமாம். அய்யரின் படம் கூடவந்ததற்குக் காரணம் கேட்கப்புகின், பிள்ளை அவர்கள் தியாகய்யரை பூஜைபண்ணியதே காரணமாம்.  ஏன் பிள்ளை அவர்கள் பூஜித்த ஏனைய தேவதைகள் வரவில்லை?  இத்துடன் நின்றதா?  படத்தைக் குறிப்பிட்டயிடத்தில் இறக்கியதும் பிள்ளை அவர்களைப் பற்றிய புகழ்ச்சியான கட்டுரைகள் நிகழ்த்தப்பட்டன.  இவ்விஷயம் சொல்லாமலே உலகறிந்தது.  பிள்ளை அவர்களைப்பற்றி எவ்வளவு தூரம் உயர்த்திப் பேசமுடியுமோ அவ்வளவு தூரம் உயர்த்திப் பேசியபின் பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தம் சாசுவதமாக யிருக்க வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.  தீர்மானத்தை யோசிக்கும்கால் சொலல் நாவெழாது, எழுத இடம் தராது.  தீர்மானத்தின் சுருக்கமாவது:

திருவையாற்றில் ஸ்ரீ தியாகய்யர்வாள் உற்சவத்தை வெகுசிறப்பாக கோவிந்தசாமி பிள்ளை நடத்தி வந்ததை விடாது நடத்திவரவும், அதற்குச் சங்கீத வித்வான்கள் முன்வர வேண்டுமென்றும் அதுவே அவரது ஞாபகார்த்தத்தை நிலைநிறுத்துவதாகும், என்று ஓர் பார்ப்பன வித்வான் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாய் நிறைவேற்றினார்கள்.  பிராமணரல்லாதாரும் கூடி நிறைவேற்றியது வருந்தத்தக்கது.

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.  பிள்ளையவர்களின் துக்கக் கொண்டாட்டம், தியாகய்யரின் உற்சவ நிறைவேற்றம். பிள்ளை அவர்களின் உற்சவத்தை ஏன் தனியாகக் கொண்டாடக் கூடாது?

மோக்ஷத்திற்கு வழிகாட்டவும், பிதிர்கள் நற்கதியடையவும், மக்கட்பேற்றிற்கும், தீட்டு விலகவும், பெண்டுபிள்ளைகள் நற்கதியடையவும் தரகு கொடுத்து ஏமாற்றுவதும், ஏமாந்து கொண்டிருப்பதும் போதும்.  நாம் அறிவினால் செய்யும் உண்ணல், உடுத்தல், உறங்கல், படித்தல் முதலியவைகளுக்குத் தரகு கொடுத்ததும், கொடுத்துக் கொண்டிருக்கிற ஏமாற்றமும் போதும்.  பிள்ளையவர்களின் பெயரைச் சொல்லி, தியாகய்யர் உற்சவத்தை நடத்தும் ஏமாற்றமும் போதும்! போதும்!! இதற்குமுன் அய்யரின் உற்சவகாலங்களில் ஏமாந்ததும், சுயமரியாதையை யிழந்ததும் போதும்.  பிள்ளை அவர்களின் உற்சவத்தைத் தனியாக நடத்த முயலுங்கள்.

– குடிஅரசு – 05.06.1939 – பக்கம்:9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *