பேரா. ஜி.ராஜூ M.A.. M.Sc., M.Ed., Ph.D.,
பேராசிரியர் மற்றும் அறிவியல் துறைத் தலைவர், பிராந்தியக் கல்வி நிறுவனம்
(தேசியக் கலாச்சார, கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்)
ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்களும் நானும் கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தையையும், இரு மூத்த சகோதரர்களையும் நானறிவேன். பெரியார் கோட்பாடுகளின் தீவிரப் பற்றாளரான திரு. திராவிடமணி அவர்களால் கவர்ந்திழுக்கப்பட்ட டாக்டர் கி.வீரமணி, அவரது இளம் வயதிலேயே சிறந்த மேடைப் பேச்சாளராகப் பாராட்டப்பட்டவர். பேச்சுக் கலையில் தனக்கென ஒரு தனி பாணியை அவர் உருவாக்கிக் கொண்டார். அவரது பண்பு நிறைந்த பழகு முறை, சிறிய தோற்றம் காரணமாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரின் அன்பினைப் பெற்றவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நாங்கள் இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் கடலூர் முதுநகரிலிருந்து சிதம்பரத்துக்கு தினமும் இரயிலில் சென்று வந்து படித்த மாணவர்கள். எங்கள் பயணக்குழு ரயில் பயணத்தின் போது, ஆசிரியர் வீரமணி அவர்கள் கூறும் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும், எடுத்துக்காட்டுகள், பழ மொழிகளையும் கேட்டுக் கொண்டு எங்களது ரயில் பயணத்தை மகிழ்ச்சியுடன் நாங்கள்அனுபவித்து வந்தோம்.
எங்கள் பயணக் குழுவில் சந்திரசேகர் என்ற தோழர் உரக்க வாதிடுபவராக இருந்தது, எங்கள் குழுவினரை எரிச்சல் கொள்ளச் செய்ததால், சலிப்பு சந்திரசேகர் என்ற புனைப் பெயரை அவருக்குச் சூட்டினோம். பின்னாட்களில் அவர் புலனாய்வு அறிவியல் துறை இயக்குநராக ஆனவர். ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் அரிய பணியாற்றியதற்காக இந்திய அரசால் அவருக்கு பத்மபூஷன் பட்டம் வழங்கப்பட்டது. நாங்கள் மூவரும் இவ்வளவு காலமும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தோம். டாக்டர் சந்திரசேகர் ஒரு சில மாதங்களுக்கு முன்தான் காலமானார். நமது நாட்டின் பல மாநிலங்களிலும், கல்வித் துறையின் பல்வேறுபட்ட பதவிகளை வகித்த நான் இப்போது பணி ஓய்வில் இருந்து வருகிறேன். எங்களுக்குப் பொதுவான குடும்ப நண்பராக விளங்கும் டாக்டர் ஏ. ராஜசேகரன் அவர்கள், கி. வீரமணியின் அற்புதமான பேச்சுக்களைக் கேட்பதற்கான நல்லதொரு வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்தார்.
நல்ல உடல் நலமும், மகிழ்ச்சியும், சோர்விலா ஆற்றலும், ஆர்வமும் பெற்று தமிழர்களின் நலனுக்காக உழைப்பதற்காக இன்னமும் பல ஆண்டுகள் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் வாழவேண்டும் அதன்மூலம் இந்த மக்களும், நாடும் மானமும், அறிவும், நலமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்!