
அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் நான் பயின்றபோது, ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் இனம்புரியாத ஓர் ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டு, ஏறத்தாழ எழுபது ஆண்டுகாலம் எங்கள் நட்பு தொடர்கிறது. அன்று முதல் சந்திப்பில் கண்ட அதே எளிமை, அன்பு, பாசம், பற்று, துடிப்பு, உழைப்பு இன்றும் தொடர்ந்து என்னை வியப்படையச் செய்கிறது.
அவரைவிட இரு வயது மூத்தவன் நான். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியில் நான் தங்கிப் படித்தேன். இவர் கடலூரிலிருந்து தொடர்வண்டியில் வந்து படித்தார். மதிய உணவை வீட்டிலிருந்து கொண்டு வரும் அவர் எனது அறையில்தான் வைத்து உண்பார்.
நான் இஸ்லாமியராய் இருந்தும் சைவ உணவு உண்பேன். எனவே, என்னை, உஸ்மான் அய்யர் என்று தோழமையோடு அழைப்பார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அதில் கவனம் செலுத்துவார். வீண் அரட்டை, ஆரவாரங்கள், உல்லாசக் கூத்துகள் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.

நான் பெரியார் பற்றாளன். என் வீட்டின் வாசலுக்கு மேல் பெரியார் படம் இருக்கும். இவர் பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியைச் செய்து வந்ததால், எங்கள் நட்பு மேலும் இறுகியது.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறருக்கு உதவுவதில் எப்போதுமே முந்தி நிற்பவர். ஆனால், அதை பிறருக்கு வெளிப்படுத்தாது செய்யும் பெரும் உள்ளம் உடையவர்.
அவர் கொண்ட கொள்கையில் என்றும் உறுதியுடன் நிற்கும் சிறப்புடையவர். சோதனைகளை வென்று சாதனை படைப்பதையே தன் வாழ்வாகக் கொண்டவர்.
மனிதநேயம் மிக்கவர். அவருக்கு சட்டென கோபம் வரும். ஆனால், அதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. சுயநலம் சிறிதும் இல்லாது தூய்மையான தொண்டு செய்யக் கூடியவர்.
பேச்சில் சிறு வயது முதலே சாதனை படைத்து வருபவர். வாழ்நாளெல்லாம் பேசி வருகிறார். ஓயாது பயணம் மேற்கொள்கிறார். எப்படி முடிகிறது! என்று வியப்பேன். இவரைத் தவிர ஒருவரும் இப்படிச் செய்ய இயலாது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்!
தமிழில் பேசுவது போலவே ஆங்கிலத்திலும் சிறப்பாகப் பேசக் கூடியவர். பேசுவது போலவே எழுதுவதிலும் வல்லவர். ஏராளமாய் எழுதி வருகிறார். எப்படி இது சாத்தியப்படுகிறது என்று என்னைப் போலவே எவரும் வியப்பர்.
சிறந்த நிர்வாகி, சிறந்த ஆய்வாளர். கீதையின் மறுபக்கம் நூலே அதற்குச் சான்று. அவர் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள் அவர் உலக மக்களுக்கு அளித்துவரும் கொடை என்றே கூறலாம். அதில் அவர் அனைத்துத் துறை சார்ந்தும் சிந்தனைகளை வழங்குவது, அவரது அறிவுத் தேடலையும், ஆழ்ந்த சிந்தனையையும் காட்டுகிறது.
இவர் ஒரு பல்துறை ஆற்றலாளர் (Versatile Genius). இப்படிப்பட்ட, இந்த ஒப்பற்ற உயர்ந்த தலைவர் இன்றளவும் எனது குடும்ப நண்பராக உள்ளார். இவரது வாழ்விணையர் மோகனா அம்மையார் சிறந்த பண்பாளர். விருந்தோம்பல் மிக்கவர். அவர் வழங்கிய காலைச் சிற்றுண்டியைப் பல நாள் உண்டிருக்கிறேன்.
தந்தை பெரியார் அவர்கள் தனக்கான வாரிசாக ஆசிரியரைத் தேர்வு செய்ததுபோல, இவரின் வாழ்விணையராக மோகனாவைத் தேர்வு செய்ததும் யாரும் வியந்து போற்றுதற்குரியதாகும்!
எளிய நிலையில் இருந்து இவ்வளவு ஏற்றம் பெற்று, உலகம் வியக்கும் ஒரு தலைவராய் உயர்ந்த நிலையிலும் எல்லோரிடமும் எளிமையாய்ப் பழகும் பண்பாளர். தலைவர்களுக்கு இவர் ஓர் எடுத்துக் காட்டானவர். இளைஞர்களுக்கு இவர் பாடமானவர். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்று உளம் நெகிழ வாழ்த்துகிறேன்.


Leave a Reply