ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்களுடனான எனது தொடர்பும், தோழமையும் 1948 ஆம் ஆண்டு முதற்கொண்டது. கடலூர் முதுநகர் எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பிலிருந்தும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் கல்லூரியிலேயே முதல் மாணவனாக முதுகலைப் பட்டம் பெற்ற அவர் பல பதக்கங்களையும், பரிசுகளையும் வென்றுள்ளார். சென்னை பிராட்வே பகுதியில் இருந்த சட்டக் கல்லூரியில் அவர் பயின்றபோதும், எங்களது நட்பு நீடித்தது. மருத்துவப் பட்டப்படிப்பை நான் படித்த சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரியின் அருகில் இருந்ததால் அது வாய்த்தது. 10ஆவது வயது முதல் பொது மேடைகளில் பேசத் தொடங்கிய அவரை, திரு. திராவிடமணி சரியாகக் கற்பித்து வழி நடத்தி வந்தார். பெரியார் சிந்தனைகளையும், பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளையும் பிரச்சாரம் செய்யும் ஒரு திறமையான மேடைப் பேச்சாளராக அவர் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். பசுமை நிறைந்த வாழ்வினைத் தேடி பெரியாரைப் பின்பற்றி வந்த பலரும் அவரை விட்டு விலகிச் சென்ற நேரத்தில், திரு. கி. வீரமணி மட்டும் பெரியாரை விட்டு விலகிச் செல்லவில்லை. திராவிடர் இயக்கப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கப் பேச்சாளர் இவர். அந்த அளவிற்கு அவர் தன்னை ஆக்கிக் கொண்டார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தவை அனைத்தும் தந்தை பெரியார் அவர்களுடன் அவர் கொண்ட தொடர்பை உறுதிப்படுத்தின.
பரந்த அறிவு, உண்மை, நேர்மை, சமூகப் பணிகளின்பாலான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை திரு. கி.வீரமணியிடம் இருப்பதை பெரியார் கண்டார். கடலூரில் வெற்றிகரமான வழக்கறிஞராக அவர் தொழில் செய்து கொண்டிருந்தபோது, தனது விடுதலை ஏட்டுக்கு ஒரு சரியான ஆசிரியர் வேண்டும் என்று பெரியார் மிகத் தீவிரமாக தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட திரு.கி.வீரமணி, எந்த மதிப்பூதியமும் இன்றி அந்தப் பணியை ஏற்று இன்றுவரை சோதனைகளுக்கிடையே சாதனைப் படைத்து வருகிறார். எழுத்தாளர், பேச்சாளர், புரட்சியாளர் என்று பன்முகச் சாதனையாளராகத் தன்னை உருவாக்கிக் கொண்ட இவர் பெரியார், மணியம்மையாருக்குப் பிறகு, பெரியாரின் கருத்துகளை, சிந்தனைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பை ஏற்று அதைச் சிறப்பாகச் சாதித்து வருகிறார். உயர்ந்த தரம் வாய்ந்த பல கல்வி நிறுவனங்களையும், கல்வி வளாகங்களையும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தையும், அதனுடன் இணைந்துள்ள அமைப்புகளையும் அவர் உருவாக்கி அவற்றைச் சிறப்புடன் நிர்வகித்து வருகிறார். விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்டு ஆங்கில மாத இதழ் இவற்றின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட அவர், குழந்தைகளுக்கான மாத இதழான பெரியார் பிஞ்சு இதழையும் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்து நடத்தி வருகிறார். இந்த அளவுக்கு இயக்கத்தின் செயல்பாடுகள் உயர்ந்து நீடித்து நிலைத்திருப்பதைப் பெரியாரே இன்று கண்டாலும் பெருமைப்படுவார், பாராட்டுவார் என்ற அளவுக்கு அவரது பணிகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. துல்லியமாகத் திட்டமிடுதல், அடக்க உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவையே திரு. கி. வீரமணி அவர்களிடம் காணப்படும் அரிய பண்புகளாகும். தமிழ்நாட்டில் உள்ள சமகால அரசியல்வாதிகள், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிடையே இவர் தன்னை சுடர்விடும் தலைவராக சிறப்பாக அடையாளப்படுத்திக் கொண்டு நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
பள்ளிப் பருவம் முதல் நீண்ட காலமாக திரு.கி.வீரமணி அவர்களின் நெருங்கிய தோழனாக நான் இருந்து வருவதால், எங்களது குடும்பங்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது சிறுநீரகக் கோளாறுக்காக வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் எச்.எஸ். பட் அவர்களிடம் தந்தை பெரியார் சிகிச்சை பெற்றபோது, சிறுநீரக சிறப்பு மருத்துவராக எனது பங்களிப்பும் அதில் இருந்தது. இயல்பாக உடலில் இருந்து சிறுநீர் பிரிந்து செல்லாத நிலையில், செயற்கை முறையில் அதனை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டச் சிகிச்சையின்போது, தனக்கு ஏற்பட்ட அசவுகரியங்களையும், உடல் வேதனையையும் பொருட்படுத்தாமல், பெரியார் அவர்கள் தன்னுடன் ஒரு சிறுநீர்ப்பையைச் சுமந்து கொண்டே பயணம் செய்து கொண்டும், பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டும் இருந்தார். வேறு எவராக இருந்தாலும் சரி, மேடையில் இது போன்ற சங்கடம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நிகழ்வதைத் தவிர்த்தே இருப்பார்கள்; ஆனால் தந்தை பெரியார் அவர்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலே இறுதிவரை தொண்டு பணியாற்றினார்.
எங்களது குடும்பத்தின் இளைய, மூத்த உறுப்பினர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களிடம் பேரன்பு கொள்வதற்கு ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்கள்தான் காரணம். நாங்கள் எல்லாம் அன்போடு வரவேற்கப்பட்டோம். சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் உள்ளுறை காப்பாளராக நான் இருந்தபோது, எங்களது அழைப்பின் பேரில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் எங்களது இல்லத்துக்கு வந்திருந்து பகலுணவு அருந்தியது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. குடும்ப மலர் ஒன்றை எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த போது, அதனைப் பாராட்டிய தந்தை பெரியார் அவர்கள் எங்களது முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணம் 26 பக்க முன்னுரை எழுதித் தந்தார். எங்களது குடும்ப உறுப்பினர்களின் பால் தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். பொது மேடைகளில் வெகு நேரம் அவர் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அவர் எப்போதுமே தயங்கியது இல்லை. இது, எங்களது வாழ்க்கையில் பெரிய சாதனைகளைச் செய்வதற்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. எனது சகோதரர் ராஜ்மோகன் திருச்சி காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தபோது, மேல் ஜாதியினரின் தொந்தரவுகளுக்கு ஆளான போது, அத்தகைய அநியாயங்களைக் கண்டித்த தந்தை பெரியார் விடுதலை நாளிதழில் அது பற்றி ஒரு தலையங்கமே எழுதியது அரிதினும் அரிதான செயலாகும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தபோது, திருச்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் எனது நண்பர் கி.வீரமணி அழைத்துச் சென்றதால், அவரது ஆலோசனையின்படி திரு ஏ.என். சாத்தப்பன் அவர்கள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்த திரு கி. வீரமணி, நவீன அச்சுத் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பத்திரிகையின் தோற்றத்தையே நவீனமாக மாற்றிக் காட்டினார். வரி பிரச்சினைகளால் பெரியார் அறக்கட்டளைக்கு சோதனைகள் வந்தபோது, அவற்றைக் களைந்து அறக்கட்டளையின் சொத்துக்களைப் பாதுகாத்து வளர்த்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற தந்தை பெரியார் அவர்களை நினைவு கூர்வதற்காக பெரியார் உலகம் என்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சியை ஆசிரியர் தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் அளவிலேயே அறியப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் இயக்கம் இன்று உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட இயக்கமாகத் திகழ்கிறது. ஒரு மாபெரும் எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளர், அமைப்பாளர், நிர்வாகி என்ற நிலைகளில் சிறந்தோங்குவதோடு, அனைத்துக்கும் மேலாக தனது செயல்பாடுகளில் நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவராகவும் ஆசிரியர் திரு.கி.வீரமணி விளங்குகிறார்.
அவரது 85 ஆவது வயதில் நல் உடல் நலத்துடனும், வளமான மன ஆற்றலுடனும், எதிர்கால சந்ததியினரை வழிநடத்திச் செல்வதற்காக, தந்தை பெரியார் அவர்களின் வயதினையும் கடந்து ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள் வாழவேண்டும் என்று நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.