முயற்சியே வெல்லும்!

நவம்பர் 16-30

“கால் வயிறு கஞ்சிக்குக் கூட வழியில்லை. படிச்சுட்டு கலைக்டராகப் போறாளாம். கொல்லைக்கு போயி கள பறிச்சி நாலு காசு சம்பாதிச்சி வயித்த கழுவப் பாருடி.’’

இந்தக் கடுஞ்செல்லை வேறு யார் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பெற்ற அம்மாவே சொன்னது அலமேலு உள்ளத்தை வாட்டி வதைத்தது.

அலமேலு உள்ளூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து முதல் தகுதியில் இருப்பவள். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். அவளது அம்மா கனகு, பாட்டி தங்கப்பாப்பு ஆகியோருடன் ஒரு சிறு குடிசையில் வாழும் அலமேலு படிப்பில் அதிக கவனம் செலுத்தினாள்.

ஆனால், அவள் படிப்பதை அம்மா கனகுவும், கனகுவின் அம்மாவும் அலமேலுவின் பாட்டியுமான தங்கப் பாப்புவும் கொஞ்சமும் விரும்பவில்லை. அற்குக் காரணமும் உண்டு.

பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கு முன் கனகு ஒரு நாள் அதிகாலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டி ருந்தாள். அப்போது ஒரு குடுகுடுப்பைக்காரன் அவள் வீட்டைக் கடந்து செல்லும்போது சில கெட்ட செய்திகளை சொல்லிக் கொண்டே சென்றான்.

அதைக் கேட்ட கனகு மிகவும் பயந்துவிட்டாள். அவள் பயந்ததுபோலவே ஒரு நாள் அவள் கணவன் திடீரென உடல்நலம் குன்றி இறந்துவிட்டான். அதற்குப் பிறகு வருமானம் ஏதுமின்றி அவளும் அவள் அம்மாவும் நல்லமுத்து என்பவரின் வயலில் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். அலமேலுவும் தங்களோடு வந்து வேலை செய்தால் நல்லது என கனகு நினைத்தாள். ஆனால் அலமேலுவோ படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தினாள். சில நேரங்களில் கனகுவின் தொல்லை தாங்காமல் வேலைக்கும் செல்வதுண்டு.

இந்நிலையில் ஒரு நாள் அந்த ஊர் ஜோசியர் குருச்சந்திரன் கனகு வீடு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த கனகு அவரை வீட்டிற்கு அழைத்து அலமேலுவின் சாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுமாறு கேட்டாள். கைரேகையும் பார்க்கச் சொன்னாள். கனகுவிற்கு கணவன் இறந்தபின் ஜோசியத்திலும் குறி கேட்பதிலும் அதிக நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. குடுகுடுப்பைக் காரன் சொன்னது பலித்ததுபோல் இப்போதும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாள்.

குருச்சந்திரன் சாதகத்தையும், அலமேலுவின் கைரேகையையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்.
“கனகு, உன் பெண் அலமேலுக்கு படிப்பு வராது. அவள் படிப்பை உடனே நிறுத்த வேணும். படித்தாலும் குடும்பத்துக்கு ஆகாது” என்று தெளிவான குரலில் கூறினார் குருச்சந்திரன்.
இதைக் கேட்ட அலமேலுக்கு கோபம் கோபமாக வந்தது.

அதோடு அவர் விடவில்லை.

“நாளைக்கே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சி பிழைப்பைப் பாருங்கள்’’ என்று புத்திமதியும் கூறிவிட்டுக் கிளம்பினார்.

அவர் போனபின் கனகு அலமேலுவிடம் பொரிந்து தள்ளினாள்.

“கேட்டாயா ஜோசியர் சொன்னதை? நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போகாம என்கூட வேலைக்கு வரணும்’’ என்றாள்.

“ஏம்மா பள்ளிக்கூடம் போகக் கூடாது?’’ என்று கேட்டாள் அலமேலு.

“நீ படிச்சா குடும்பத்துக்கு ஆகாதாண்டி. ஜோசியர் சொன்னதை கேட்கலியா?’’

“இப்ப மட்டும் என்னம்மா நம்ம குடும்பம் டாப்புல இருக்கா? இனிமேதான் ஆகாம போயிடப் போவுதா? நான் படிச்சி வேலைக்குப் போயி சம்பாதிச்சி நம்ப குடும்பத்தை முன்னேற்றி காட்டறேன். போயி உன் வேலையைப் பாரு’’ என்று கோபமாகக் கூறிவிட்டு அலமேலு புத்தகத்தை கையில் எடுத்தாள்.

ஆண்டுகள் சென்றன. அலமேலு பத்தாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் படிப்பில் தீவிர கவனம் செலுத்தினாள். அவ்வப்போது பல இடையூறுகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்து தன் பணியைத் தொடர்ந்தாள்.

மார்ச் மாதம் தேர்வுகள் தொடங்கிவிட்டன. தேர்வின் முதல் நாளன்று அவளது வீட்டிற்கு அருகில் சிலர் ஒலி பெருக்கிகளை கட்டிக் கொண்டிருந்தனர். அவள் வீட்டிலிருந்து சிறிய இடைவெளிகளில் பக்கத்தில் உள்ள கோயில்வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டன.

“என் ரேடியோ கட்டுகிறார்கள்?’’ என்று அலமேலு அந்தப் பக்கமாக வந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டாள்.

“உனக்குத் தெரியாதா? நல்லமுத்து அய்யாவுக்கு ஏதோ வேண்டுதலாம். பிள்ளையாருக்கு விழா எடுக்கிறார். ஒரு வாரம் உற்சவம், திருவிழா. ஊரே கிடுகிடுக்கப் போவுது’’ என்றார் அந்தப் பெரியவர்.

சற்று நேரத்தில் உச்சகட்ட ஓசையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் அலறின.

அலமேலுவால் புத்தகத்தைக் கையில் எடுக்கவே முடியவில்லை. காதை செவிடாக்கும் பயங்கர இரைச்சல். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீரைத் துடைத்தபடி வெளியே பார்த்தாள். இரண்டு போலீஸ்காரர்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்களுக்கு தேர்வுக் காலங்களில் இப்படி இடையூறு செய்வதைத் தட்டிக் கேட்க வேண்டிய காவலர்களே இதற்கு ஆதரவாக செயல்படுவதை நினைத்து வேதனைப்பட்டாள். அதோடு அவள் ஒரு உறுதியும் எடுத்துக் கொண்டாள். “தான் படித்து ஒரு காவல்துறை அதிகாரியாகி இப்படிப்பட்ட கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டும்’’ என மனதிற்குள் உறுதி எடுத்தபோது அங்கே ஜோசியர் குருச்சந்திரன் நமட்டுச் சிரிப்புடன் அந்த வழியே சென்றார். அவரைப் பார்த்ததும் அலமேலு முகம் இறுகியது.

தேர்வு முடிவுகள் வந்தவுடன் யாருமே எதிர்பார்க்கவில்லை. அலமேலு பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள்.

ஆனால், அவளை பாராட்டியவர்கள் ஊரில் சிலரே. பொறாமைப்பட்டவர்களே அதிகம்.

அன்று மாலை குருச்சந்திரன் அலமேலு வீட்டிற்கு யாரும் அழைக்காமலேயே வந்து சேர்ந்தார்.

“கனகு, உன் பொண்ணை இதோடு படிப்பதை நிறுத்திக்கச் சொல்லு. இப்ப எப்படியோ பாஸ் பண்ணிட்டா. இது நிலைக்காது. தேவையில்லாம பணத்தை செலவு பண்ணாதே. வேலைக்கு அனுப்பி நாலு காசு சம்பாதிக்கச் சொல்லு’’ என்று கனகுவுக்கு புத்திமதி சொன்னார்.

“நான் சொன்னா கேக்க மாட்டேங்கிறாளே’’ என்று அலுப்புடன் பதில் சொன்னார் கனகு.

அப்போது அங்கு அலமேலு வருவதை அறிந்த குருச்சந்திரன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அலமேலு பக்கத்து கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். வெறிபிடித்தவள் போல் படித்தாள்.

மேல்நிலைத் தேர்விலும் நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாள்.

ஊரில் பலரும் அவளது வெற்றியைப் பற்றியே பேச ஆரம்பித்தனர். அதோடு மட்டுமல்லாமல் குருச்சந்திரனின் ஜோசியமும் பொய்யாகிவிட்டதையும் ஊர் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

அலமேலு கல்லூரியில் சேர விண்ணப்பித்தாள். பணத் தேவைக்கு அம்மாவிடம் கேட்டாள். கனகுவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முதன்முதலாக எண்ணத் தொடங்கினாள்.

பணத்திற்காக மகளை அழைத்துக் கொண்டு நல்லமுத்து வீட்டிற்கு வந்தாள்.

“அய்யா, அலமேலு காலேஜில்சேரப் போறாளாம். அதுக்கு பணம் தேவைப்படுது. நீங்கதான் அய்யா மனசு வைக்கணும்’’ என்று நல்லமுத்துவிடம் வேண்டிக் கொண்டாள்.

“சரி, அதுக்கென்ன பணம் தர்றேன். வேலை செய்ஞ்சி கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுடு’’ என்றார் நல்லமுத்து.

“சரி’’ என்று தலையசைத்தாள் கனகு. அப்போது நல்லமுத்துவை யாரோ அழைத்தார்கள். நல்லமுத்து வீட்டிற்குள் சென்ற சற்று நேரம் கழித்து திரும்பி வந்தார்.

வந்தவர் கனகுவைப் பார்த்து,

“கனகு உனக்கு என்னால் பணம் தரமுடியாது. நீ போகலாம்’’ என்று கண்டிப்புடன் கூறினார்.

கனகுவைவிட அலமேலு கடும் அதிர்ச்சி அடைந்தாள். “யாரோ நல்லமுத்துவை வீட்டிற்குள் அழைத்து பணம் தரவேண்டாம் என கூறியிருக்கிறார்கள்’’ என அலமேலு நினைத்தாள். அவள் எதிர்பார்த்தபடி வீட்டிற்குள் யாரோ நடமாடிக் கொண்டிருந்ததை அலமேலு பார்த்தாள். நன்றாக உற்று நோக்கினாள். அவர் யாரென தெரிந்துவிட்டது.

ஜோசியர் குருச்சந்திரன்தான் உள்ளே இருந்தார்.

நான்கு ஆண்டுகள் கடந்தன.

அலமேலு தன் முயற்சியில் வெற்றிபெற்று விட்டாள். ஆம். இபபோது அலமேலு ஒரு காவல்துறை அதிகாரி. கடும் இன்னல்களுக்கிடையே படித்துப் பட்டம் பெற்று காவல்துறை பதவிக்கு தேர்வெழுதி வென்று அதிகாரி ஆகிவிட்டாள். போலீஸ் உடையில் அவளை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். கனகுவுக்கும், பாட்டி தங்கப்பாப்பு விற்கும் உள்ளம் பூரித்தது. இதையெல்லாம் பார்க்க அவள் அப்பா உயிருடன் இல்லையே என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.

அலமேலு தான் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டாள். முதலில் மாணவ மாணவிகள் படிப்பிற்கு இடையுறு செய்யும் இரைச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும். வழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைத்து காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவதற்குச் சமமாக விடிய விடிய பாட்டுகளைப் போட்டு படிப்பை பாழ் செய்வோரை ஒழுங்குபடுத்த வேண்டும் என முடிவு செய்தாள்.

தான் பட்டப்படிப்பு படிக்கும் வரையிலும் தன்னைப் படிக்க விடாமல் தொல்லைசெய்த கோயில் நிர்வாகிகளை நினைத்து வேதனைப்பட்டாள். குறிப்பாக இதில் ஜோசியர் குருச்சந்திரன் அதிக அளவு ஈடுபட்டதையும் அவள் நன்கு அறிந்திருந்தாள்.

இப்படி சிந்தனை செய்துகொண்டே காரில் சென்றுகொண்டிருந்த அலமேலு சற்று தூரத்தில மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் தடாலென கீழே விழுவதைப் பார்த்தாள்.

அருகில் சென்று காரிலிருந்து கீழே இறங்கி விழுந்து கிடந்தவரைத் தூக்கியவள் அப்படியே அதிர்ச்சியடைந்தாள். ஜோஜியர் குருச்சந்திரன்தான் கீழே விழுந்து கிடந்தார். ஆயுத பூசைக்காக எதிரே இருந்த கடைக்காரர் உடைத்த பூசணிக்காய் வழுக்கி கீழே விழுந்துவிட்டார். வலியால் அய்யோ, அம்மா எனக் கதறி அழுதார். உடனே அலமேலு அவரைக் காரில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாள்.

சில நாட்களில் ஓரளவு குணமாகி படுக்கையில் கிடந்த அவரை அலமேலு சென்று பார்த்தாள்.

குருச்சந்திரன் உணர்ச்சி வசப்பட்டு கம்மிய குரலில் பேசினார்.

“அம்மா அலமேலு, நெறைய பேருக்கு நான் ஜோசியம் சொல்லியிருக்கேன். ஆளுக்கு தகுந்தால்போல மாற்றி மாற்றி சொல்வேன். பலரும் நான் சொன்னதை நம்பி முயற்சி ஏதும் பண்ணாம கெட்டுப் போயிடுவாங்க. நான் சொன்ன ஜோசியமும் பலிச்சது போலாயிடும். உன்னை படிக்கவிடாம நான் நெறைய கொடுமைகள் செய்ஞ்சேன். ஆனா, நீ ஜோசியத்தை நம்பாம முயற்சியே வெல்லும் என்கிற உண்மையை நிரூபிச்சுட்டே. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு கெட்டது செஞ்ச என்னையும் ஆஸ்பத்திரியிலே சேத்து உதவி பண்ணினே. ரொம்ப நன்றிம்மா. என்னை மன்னிச்சுடு.’’

அலமேலுவின் கைகளைப் பற்றிக்கொண்டு பேசிய அவரை அலமேலு தேற்றினாள்.

“அம்மா, இப்ப உனக்கு ஒரு உறுதியும் தர்றேன். இனிமே இந்த ஜோசியம் பார்க்கிற பொய்யான பிழைப்பைச் செய்ய மாட்டேன். ஜோசியம் பொய் என்பதை நீ நிரூபணம் பண்ணிட்ட. ஊர்மக்கள் கிட்டேயும் இதை எடுத்துச் சொல்லப்போறேன்.

மனம் மாறிய அவரை மகிழ்வுடன் பார்த்து விடைபெற்றாள் அலமேலு.

– ஆறு.கலைச்செல்வன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *