சுதேசியே விதேசியாமே!

நவம்பர் 16-30

 

 

மாநிலச் சுயாட்சி என்னும் கோரிக்கை இந்தியத் தேசியத்துக்கு வைக்கப்படும் வேட்டு என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தியத் தேசியத்தை மட்டும் அல்லாமல் இந்தியாவையே நிர்மூலம் ஆக்குவதற்காகப் புதைத்து வைக்கப்படும் கண்ணி வெடியே இது என்று, இதே குற்றச் சாட்டையே மேலும் கூர்மைப்படுத்திக் கூறுகிறவர்களும் உள்ளனர். எனவே, இந்தியா என்பதற்குப் புவியியல் அடிப்படையில் மட்டும் அல்லாமல் _ தத்துவ அடிப்படையிலும் சரியான பொருளை நாம் நம் மனத்தில் பதிய வைத்திருப்பது அவசியம் ஆகிறது. இந்தப் பொருள் ஆராய்ச்சியில் இறங்குபவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது, தேசியத்தின் அடித்தளமாக அமைந்திருக்கும் “இந்தியா’’ என்னும் சொல்லே தேசியச் சுதேசிச் சொல் இல்லை; விதேசிச் சொல்தான் என்பது அந்த அதிர்ச்சியான செய்தி. இந்த அதிர்ச்சி வெறுமனே மேலேழுந்தவாரியிலான அதிர்வு அல்ல; மாறாகப் பூமி அதிர்ச்சி போன்ற பேரதிர்ச்சியும் கூட! ஏன்!

இந்தியா என்பது இத்தனை நீண்டநெடும் காலத்திற்குக் கட்டுக்குலையாமல் நீடித்துக் கொண்டிருப்பதற்கு அடிப்படையான காரணம் என்ன? இந்துச் சமயம் என்னும் மத அடிப்படையே காரணம் என்பதை அறிஞர் உலகம் அட்டியின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்து மதமோ இந்திய மண்ணின் மதம்; இந்தியத் துணைக் கண்ட மண்ணுக்கு வெளியே வேர் ஊன்றாத மதம். இப்படிப்பட்ட சுத்தச் சுதேசியான மதம் ஒன்றைக் குறிப்பிடும் சொல் இந்த மண்ணின் சுதேசிச் சொல் இல்லை; விதேசிச் சொல் என்பது அதிர்ச்சியான சங்கதிதானே. சரி, “இந்தியா’’ என்னும் சொல் எப்படித்தான் உருவானது?

இந்துவைத் தேடுவோம்

இந்துச் சமயத்திற்கு ஆதாரமாகத் திகழும் வேத இலக்கியங்களில் “இந்தியா’’ என்னும் சொல் இடம் பெறவில்லை. வேத இலக்கியங்கள் என்றால் என்னென்ன? “வைதீகச் சாகித்தியங்கள்’’ என்று இவற்றை வடமொழிப் பண்டிதர்கள் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் வருமாறு: 1. வேதங்கள் _ 4 (ரிக், யஜூர், சாம, அதர்வ). இவை 1183 கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் “சாகைகள்’’ என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்:-_ ரிக்_25; யஜூர் _ 108;  சாம _1000; அதர்வ _ 50. வேதங்களை அடுத்து வருபவை பிரம்மாணங்கள். அவற்றை அடுத்து வருபவை ஆரண்யகங்கள். நாலாவதாக _ அதாவது, இறுதியாக வருபவை உபநிஷதங்கள். இறுதியாக வருவதால், இவை “வேதாந்தம்’’ என்றும் அழைக்கப்படுகின்றன. மொத்தம் பல நூறு உபநிஷதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 108 உபநிஷதங்கள்தான் பிரபலமானவை. இங்கே நாம் கவனத்தில், இருத்த வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதாவது -_
இந்துச் சமயத்தின் ஆணிவேராக இருக்கும் வைதீகச் சாகித்தியங்களில் இந்து என்னும் சொல்லையும் காணவில்லை; இந்தியா என்னும் சொல்லும் காணப்படவில்லை. காரணம் “இந்தியா’’ என்னும் சொல் இந்திய மொழிச் சொல் இல்லை! இதுதான் பலருக்கும் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. அப்படியானால் அந்தச் சொல் எங்கே இருந்து வந்தது? எப்படி வந்தது? _ இவை நல்ல கேள்விகள்தான். ஆனால், இவற்றுக்கும் இந்த நூலின் கருப்பொருளுக்கும் என்ன தொடர்பு?

வாய்க்குள் நுழைகிறதா?

மாநிலச் சுயாட்சி என்பதே இந்தியாவை உடைத்து நொறுக்கக் கூடிய சங்கதி என்று சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது அல்லவா? இந்தியத் தேசியம் எவ்வளவு தேசியமானது / சுதேசியானது என்னும் உண்மையையும் நாமெல்லாம் நன்றாக உணர்ந்திருப்பது அவசியம் அல்லவா? எனவேதான், இந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இனி, அந்த “இந்திய’’ ஆராய்ச்சியின் உள்ளே நாம் அடி எடுத்துவைப்போம். மேலும், மாநிலச் சுயாட்சிக் கோரிக்கை இந்தியத் தேசியத்துக்கு மட்டும் ஆபத்தை விளைவிப்பது இல்லை; இந்துச் சமயத்துக்கும்கூட ஆபத்தைத் தேடித் தரக்கூடியது என்றும் கூடச் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறதே. எனவே, இந்தப் பெயர் ஆராய்ச்சியில் அக்கறையுடனேயே நாம் இறங்குவோம்:-_

“இந்தியா’’ என்பது கிரேக்க மொழிச் சொல் என்றுதான் சர்வதேச மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். எப்படி? மத்திய ஆசியப் பகுதியில்இருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறத் தொடங்கினார்கள். அவர்கள் முதலில் குடியேறிய பகுதி சிந்து நதித் தீரம் ஆகும். எனவே, அந்தப் பகுதி “சிந்து’’ என்று பெயர் பெற்றது. ஆரியர்கள் வயிறு பிழைப்பதற்காகத் தான் இங்கே வந்தார்கள். ஆனால், இவர்களை அடுத்துப் பாரசீகர்கள் நாடு பிடிக்கும் நோக்கத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். அவர்களின் வாய்க்குள் ஆரியர்களின் “சிந்து’’ நுழைய மறுத்தது. இத்தனைக்கும் பாரசீகத்தின் மற்றொரு பெயர் “ஈரான்’’ என்பதுதான். “ஈரான்’’ என்பதற்குப் பொருள் “ஆரியர்களின் இருப்பிடம்’’ என்பதுதான். என்றாலும், சுத்த ஆரியர்கள் சூட்டிக்கொண்ட பெயர் பாரசீக ஆரியர்களின் வாய்க்குள் நுழைய மறுத்ததால், “ஹிந்து’’ என்று சொல்லத் தொடங்கினார்கள்.

மீண்டும் களப்பலி தேவையா?

“இந்து’’ என்பது மதத்திற்குச் சூட்டப்பட்ட பெயர் இல்லை; ஒரு நிலப்பகுதிக்குச் சூட்டப்பட்ட பெயரே.  இப்படிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்குக் காரணம் கூடச் சமய அடிப்படையிலோ அல்லது தத்துவ அடிப்படையிலோ இல்லை. மாறாக, வெறும் உச்சரிப்பு அடிப்படையில்தான்! சரி, “இந்து’’ என்னும் சொல்லின் கதை இப்படித் தொடங்கியது என்றால், “இந்தியா’’ என்னும் சொல்லின் கதை எப்படித் தொடங்கியது? பாரசீகர்களை அடுத்து, இந்தியாவிற்குள் படை நடத்தி வந்தவர்கள் கிரேக்கர்கள். பாரசீகர்களாவது அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லையை ஒட்டிய நிலப் பகுதியில் வாழ்ந்தவர்கள். கிரேக்கர்களோ கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைபோல எங்கோ அய்ரோப்பாக் கண்டத்தில் இருந்து ஆசியாக் கண்டத்திற்குள் பாய்ந்து வந்தவர்கள் ஆயிற்றே! ஆகையால்தான்_

இப்படிச் சில ஆயிரம் மைல் தாண்டி வந்து இந்தியாவுக்குள் நுழைந்த கிரேக்கர்களுக்கு இந்தியாவின் மொழியும் பெயர்களும் வாய்க்குள் நுழைவது பெரும் பாடாகவே இருந்தது. எனவே, இதற்காகப் புதிய சிரமங்களை ஏற்பதைத் தவிர்த்து ஒரு காரியம் செய்தார்கள். இது விஷயத்தில்தான் பாரசீகர்கள் ஏற்கெனவே களப்பலியாகியிருந்தார்களே அவர்கள் விட்ட இடத்தில் தாங்கள் தொடர்வதுதான் புத்திசாலித்தனம் என்று கிரேக்கர்கள் முடிவு செய்தார்கள். விளைவு? ஆரியர்களின் “சிந்து’’வைப் பாரசீகர்கள், “ஹிந்து’’ என்று ஆக்கி வைத்திருக்க _ அதைத் தொடர் கதை ஆக்குவது போலக் கிரேக்கர்கள், “இந்தியா’’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
ஸ்நானப் பிராப்தியும் இல்லாதவர்கள்

110 கோடி மக்களின் நாடான இந்தியாவுக்கு அதன் பெயரைத் தானம் கொடுத்தவர்கள் இந்தியாவுக்கு எந்த ஒட்டும் உறவும் இல்லாத கிரேக்கர்கள்! 100 கோடி மக்களின் சமயமான இந்துவுக்கு அதன் பெயரைத் தானம் கொடுத்தவர்கள் இந்துச் சமயத்துக்கு எந்த ஸ்நானப் பிராப்தியும் இல்லாத பாரசீகர்கள். எனவே, மாநிலச் சுயாட்சிக் கோரிக்கை வெற்றி பெறுமானால்கூட, அதன் விளைவாக இந்தியா என்னும் தேசியத் தத்துவத்துக்கும் _ இந்து என்னும் சயமத் தத்துவத்துக்கும் எந்தக் கேடும் சூழ்ந்துவிடாது. இந்த அடிப்படைகளை மனத்தில் இருத்தியபடியே _ இந்தியா என்னும் ஆட்சியியல் நிதர்சன நடப்பை அலசிப் பார்ப்போம்; அதாவது நவீனக்கால வரலாற்று அடிப்படையில்.  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *