உங்களுக்குத் தெரியுமா ?

நவம்பர் 01-15

                                            ஆட்சி மொழிக்காவலர் கீ.இராமலிங்கனார்

                                                           (பிறப்பு: 12.11.1899)

ஆட்சி மொழிக்காவலர் என அன்புடன் அறிஞர்களால் அழைக்கப் பெற்றவர். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வடமொழிச் சொற்களாலும் புரைமண்டிக்கிடந்த ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல்கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சிமொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் ஆர்வலர். தெ.பொ.மீ மற்றும் திரு.வி.க. ஆகியோரின் சீடர். தமிழ் திருமண வழிபாட்டு முறைக்கெனத் தனியே ஒரு நூலை எழுதி தொடர்ந்து பலருக்கும் தமிழில் திருமணம் செய்வித்தவர்.

சென்னையை அடுத்த திருவள்ளூருக்கு அருகே கீழச்சேரி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை இரத்தினம், தயார் பாக்கியம்மாள். இருவருக்கும் அய்ந்து பிள்ளைகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக மரணிக்க ஆறாவது மகவாய்ப் பிறந்தவர் இராமலிங்கனார். கீழச்சேரியிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தன் தமிழ்க் கல்வியைத் துவக்கிய இராமலிங்கனார் பின் மாதா கோவில் பள்ளியில் பயின்றார். சென்னை வந்தவர் அங்கு சிந்தாதிரிப்பேட்டை சீயோன் பள்ளியிலும் இராமலிங்கர் மடத்திலுமாகப் படித்துத் தேறினார். தேவாரப் பாடவகுப்புகளிலும் கலந்துகொண்டு பயின்றார். வெஸ்லி கல்லூரியிலும் பின் பச்சையப்பன் கல்லூரியிலுமாகப் படித்துப் பட்டம் தேர்ந்தார். பின் அரசுப் பணியில் இருந்துகொண்டே தொடர்ந்து தேர்வுகள் எழுதி தன்னை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார். பின் முதுகலைப் பட்டமும் முதுகலைஞர் பட்டமும் பெற்றார். அரசுப் பதவிகளில் அவர் சாதாரண எழுத்தர் பதவிகளில் பணிபுரிந்தபோதும் அதில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த பல ஆங்கில மற்றும் வடமொழிகளுக்குத் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்கும் பணியில் அவரது தமிழ் ஆர்வம் அவரை உந்தித் தள்ளியது.
அவர் வகித்த பதவிகள் அனைத்தும் மக்களோடு நெருங்கிய தொடர்புடைய பதவியாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். சிதம்பரம் நகராட்சியில் இவர் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில் அனைத்து வடமொழி மற்றும் ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் மாற்றினார்.

கலெக்டரை ஆட்சியர் என்றும், கமிஷனரை ஆணையர் என்றும், முனிசிபாலிட்டியை நகராட்சி, சேர்மனை தலைவர், கவுன்சிலரை நகர் மன்ற உறுப்பினர் என்றும் மாற்றிக்காட்டிய பெருமை கீ.இராமலிங்னாரையே சாரும். இசைச் சக்ரவர்த்தி நயினார் பிள்ளை வரலாறு, நகராட்சி முறை, தமிழ் ஆட்சிச் சொற்கள், ஆட்சித்துறைத் தமிழ், ஆட்சிச் சொல் அகராதி, தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தமிழ்த் திருமணம் போல பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதில் தமிழ்த் திருமணம் எனும் நூலை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.

(நவம்பர் 12 இவரது பிறந்தநாள்)

                                          பொருளாளர் கோ.சாமிதுரை

வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் திராவிடர் கழகத்தில் பழையகோட்டை ந.அருச்சுனன், தஞ்சை கா.மா.குப்புசாமி ஆகியோருக்குப் பின் பொருளாளராகப் பணியாற்றியவர் ஆவார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். தன்னுடைய மாணவர் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் பணியாற்றி வந்தவர்.
சென்னை சட்டக் கல்லூரியில் ஆசிரியருடன்(கி.வீரமணி) படித்து, புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றியவர்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவர்.

திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் எனப் பொறுப்புகளை வகித்து கழகத் தோழர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் உறுதுணையாக இருந்தவர்.

தொடர்ந்து ‘விடுதலை’, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழ்களிலும், விடுதலை தந்தை பெரியார் பிறந்த நாள் மலர்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம் போன்ற பெரியார் அறக்கட்டளைகளில் பொறுப்பாளராகவும் கழகத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகியாகவும் இருந்து கழகத் தலைவருக்கு தோன்றாத் துணையாக விளங்கியவர்.

தமது இறுதி மூச்சு அடங்கும்வரை பெரியார் திடலில் பணியைத் தொடர்ந்தவர்.

இறப்பு: நவம்பர் 09, 2013

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *