பா.ஜ.க. அரசு தமிழகத்தில் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதிலேயே குறியாக உள்ளது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு:
நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் 25 சதவீத காலிப் பணியிடங்களே உள்ளன. தமிழகத்தில் மட்டும் இது 50 சதவீதம் இருப்பதன் நிலையை நோக்குமிடத்து தமிழகத்திற்கென தனியே ஒரு கொள்கை நிலை உள்ளதோ என்ற அய்யப்பாடு தோன்றுகிறது!
தமிழ்நாட்டில் 44 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் 55,000 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். மொத்தம் அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்கள் 1858 ஆகும். இவற்றில் 898 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது 48.33 சதவீதம் ஆகும். அதிகப்படியான காலிப் பணியிடங்கள் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வித் தர வீழ்ச்சிக்கு வித்திடுவதாகவே உள்ளது.
இதனால் 9ஆம் வகுப்பில் 40% மாணவர்கள் தேர்வு பெறவில்லை. ஒரு மாணவனின் பெற்றோர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். திருவாரூர் மத்திய தமிழ்ப் பல்கலை வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர்.
டெல்லியில் உள்ள மேல்நிலை அலுவலர் களுக்கு இந்நிலை நன்கு தெரிந்திருந்தும் அவர்கள் இதை ஒரு பிரச்னையாகவே கருத்தில் கொள்ளவில்லை. புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு பிரச்னை போன்றவற்றோடு இதையும் சேர்த்துப் பார்க்கும்போது பா.ஜ.க. அரசு பல துறைகளிலும் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பது கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போன்று தெற்றெனத் தெரிகின்றதன்றோ!
தமிழக மக்கள் காலம் கனியும்போது பாடம் புகட்ட வேண்டுமன்றோ! நினைவில் நிறுத்துங்கள்.
தகவல்: கெ.நா.சாமி ஜிளிமி – 02.08.2017