ஆடிமாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல், அலகு குத்தி, வேல்சொருகி, வேப்பிலையோடு சாமியாடுதல் என்று எத்தனையோ சடங்குகள். இவைகளினால் வேண்டிய பலன்களைப் பெற்றோமா என்று ஒரு நாளேனும் மக்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. முன்னோர்கள் செய்தார்கள், நாமும் செய்வோம் என்கிற முடிவில்தான் ஆண்டாண்டுக்காலமாக இவை நடக்கின்றன.
ஆவணி மாதத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா. இந்தப் பிள்ளையார் யார்? இவரை எப்படிக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டோம்? இவரை வணங்குவதால் என்ன பலன்? என்பதையெல்லாம் பக்தர்கள் சிந்திப்பதில்லை.
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள், “பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்று பளிச்சென்று கூறினார்கள்.
‘நம் மூளையில் இட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டியதன் அவசியத்தையும் தன் வாழ்நாள் முழுவதும் தன்நலம் கருதாது, உடல் வேதனைகளையும் பொருட்படுத்தாது பிரச்சாரம் செய்தும், இன்னும் இந்நிலை என்பது வெட்கக்கேடானது.
பிள்ளையார் பிறந்த தினம் என்று கொண்டாடுகிறீர்களே! எந்தப் பிள்ளையார் பிறந்த தினத்தை என்று சொல்ல முடியுமா? பிள்ளையார் பிறப்பைப் பற்றிக் கூறுகின்ற (புராணக் கதைகள் தனியே தரப்பட்டுள்ளன.) அவை அறிவியலுக்கு ஏற்புடைய கருத்துதானா?
உடலில் உள்ள அழுக்கால் ஒரு ஆளை உருவாக்க முடியுமா? உடலில் அவ்வளவு அழுக்கு இருக்குமா? சிந்திக்க வேண்டாமா? இப்படிப்பட்ட புராணங்களைத்தான் அறிவியலுக்கு அடிப்படை என்கிறது ஆர்எஸ்எஸ்., பிஜேபி கூட்டம்.
அடுத்து விலங்குகள் உறவு கொண்டதைப் பார்த்து காமம் மிகுந்து விலங்காக மாறி கூடினால் விலங்காகவே தானே பிறக்கும். பாதி விலங்காகவும் பாதி மனித உருவிலும் பிறந்தது என்பது ஏற்புடையதா?
அரக்கன் காற்று வடிவமாக கருப்பைக்குள் சென்றான் என்றால் எந்த வழியாகச் சென்றான்? மூக்கின் வழி சென்றால், கருப்பைக்குள் எப்படிப் போக முடியும்?
சிவன் மகனை தக்கனுடைய யாகத்தை அழிக்க அனுப்பினான் என்றால் யானைத் தலையை ஒட்டவைக்கும் சிவசக்தி இருந்த இடத்திலிருந்தே தக்கன் யாகத்தை அழித்திருக்கக் கூடாதா? அறிவுக்குப் புறம்பான கதை அல்லவா?
கி.பி.641க்கு முன் தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி என்பதோ, பிள்ளையார் வழிபாடோ கிடையாது. இதற்கான ஆதாரம் கேட்கப்புகின் தொல்காப்பியத்தில்கூட மாயோன், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை குறித்து பேசப்படுகிறதே தவிர பிள்ளையார் இல்லை. சங்க நூல்களிளேகூட கதிரவன், காளி, கூளி, காற்று, காடுகாத்தாள், நம்பின்னை, பலராமன் போன்றோர் பேசப்படுகின்றதே தவிர தும்பிக்கை கடவுள் இல்லை. கி.பி.641இல் நரசிம்மவர்மன் வாதாபியின் மீது போர் தொடுத்து இரண்டாம் புலிகேசியை வென்றபோது அவன் படைத்தலைவனான பரஞ்சோதிதான் அங்கிருந்த யானைத்தலை மனித உடலுடன் கூடிய பொம்மையை எடுத்துவந்து காட்சிப் பொருளாக வைத்தான். அதன் பிறகு புராணக் கதை எழுதி பார்வதிக்கு மகனாக்கினர், முருகனுக்கு அண்ணனாக்கினர்.
அடுத்து பிள்ளையார் பிரம்மச்சாரி என்றும், அவர் தன் தாயைப் போன்றே அழகான பெண் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும், அதனால் தான் பெண்கள் நீர்முகந்து செல்லவும், குளிக்கவும், உடைகள் தூய்மை செய்யவும் வரும் நீர்நிலை ஓரங்களில் அரச மரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் அவர் சிலைகள் அமைந்துள்ளன என்று கதை கூறுகின்றனர்.
ஆனால், வடநாட்டில் அவர் ஒரு இல்லறவாசியாகவே காணப்படுகிறார். அவருக்கு சித்தி, புத்தி என்று இரு மனைவிகள் உள்ளதாகக் கூறப்படுவதோடு அவருடைய திருமண விழா வைபோகங்களைப் பல புராணங்கள் பக்கம் பக்கமாகக் கூறுகின்றன.
ஆனால், சில புராணங்களில் பிள்ளையாருக்கு 10 மனைவிகளுக்கு மேல் உள்ளதாகத் தகவல்கள் உள்ளன. அவரது மனைவியின் பெயர்கள் 1.சித்தி, 2.புத்தி, 3.மோதை, 4.பிரமோதை, 5.சுமனகசுந்தரி, 6.மனோரமை, 7.மங்கலை, 8.கேசினிகாந்தை, 9.சாருக்கானகை, 10.சுபத்திமை, 11.நந்தினி, 12.மாமதை, 13.வல்லபை என்று அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ளது.
உண்மை என்றால் அது எப்போதும் ஒன்றாகவே இருக்கும். கற்பனை, கட்டுக்கதைகள் என்பதால் தானே இப்படிப் பலர் பலவிதமாக தான்றோன்றித்தனமான கதைகளைக் கூறுகின்றனர்.
இந்த உண்மைகளை ஊருக்கு உணர்த்தத்தான் தந்தை பெரியார் அவர்கள், 1953ஆம் ஆண்டு பிள்ளையார் சிலையை வீதிகளில் போட்டு உடைப்போம் என்று அறிவிக்க, தமிழ்நாடெங்கும் பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டனவே! பிள்ளையார் ஏன், என்ன? என்று கேட்கவில்லையே! இவ்வளவு தானே பிள்ளையார் சக்தி! இந்த இலட்சணத்தில் வினைதீர்த்த விநாயகன், வெள்ளந்தாங்கி விநாயகன், வரம்கொடுக்கும் விநாயகன், வாழ்வளிக்கும் விநாயகன் என்று தொடங்கி கிரிக்கெட் வினாயகன் வரை வந்தாச்சி!
இந்த இலட்ச ணத்தில், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற பித்தலாட்டப் பிரச்சாரம்! தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசளிக்கிறேன் என்று அறிவித்தாரே. இன்றுவரை எவரும் முன்வரவில்லையே!
இந்தப் பிள்ளையார்தான் மதக் கலவரங்கள் உண்டாக்குவதிலும் முன்னணியில் நிற்கிறார். பாலகங்காதரத் திலகர் என்ற மகாராட்டிப் பார்ப்பனர்தான் முதன்முதலில் பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று இந்து முஸ்லிம்களிடையே இருந்த ஒற்றுமை உணர்வைக் குலைக்கச் செய்தவர். மும்பையிலே மட்டும் இருந்த இந்த நிகழ்வு இன்று தமிழகத்திலும் சில ஆண்டுகளாகத் தலைவிரித் தாடத் தொடங்கியுள்ளதே. தமிழ்நாட்டில் இன்று நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களில்கூட பனியாக் கூட்டத்தாலும் பார்ப்பனக் கூட்டத்தாலும் பண உதவி செய்யப்பட்டு எங்கெங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு நீர்நிலைகளும் சுற்றுச் சூழலும் மாசுபடுவதோடு இனக்கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சத்தகுந்த அளவுக்கு அராஜகங்களும் அரங்கேறுகின்றனவே! அந்த நாட்களில் காவல்துறையினர் சந்திக்கும் சங்கடங்களுக்கு அளவுண்டா? இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டாவா? தவிர்க்கப்படும் விதத்தில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டாமா?
பரஞ்சோதி காட்சிப் பொருளாகக் கொண்டுவந்த பிள்ளையார் சிலையை தெருதோறும் காட்சிப் பொருளாக்கி, பின் கடலில் தள்ளி கட்டையால் அடித்து நொறுக்குவதுதான் பக்தியா? இதைவிட காட்டுமிராண்டிச் செயல் வேறு உண்டா?
– கெ.நா.சாமி