திரு.வி.க. தோற்றம் : ஆகஸ்டு 26 – 1883
தந்தை பெரியாரின் நண்பராய், தமிழறிஞராய், தொழிற்சங்க மேதையாய் பல்வேறு பரிணாமங்களில் இந்த நாட்டிற்கு தமது பங்களிப்பைத் செலுத்தியவர் திரு.வி.க.
தற்போது சென்னை நகராக விரிவு கண்டிருக்கும் போரூரை அடுத்த துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது தந்தையார் விருத்தாசலம், தாயார் சின்னம்மாள், தந்தையின் பூர்வீகமான திருவாரூரையும் அவரது பெயரான விருத்தாசலத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதால் கலியாணசுந்தரனார் திரு.வி.க. ஆனார்.
வெஸ்ஸி கல்லூரியில் படிக்கும்போதே அவரது தமிழ் ஆசிரியரான யாழ்ப்பானம் நா.கதிரைவேற் பிள்ளையின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
தான் படித்த வெஸ்ஸி கல்லூரியிலேயே சிறிதுகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்த திரு.வி.க. காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார். உடன் அவரது ஆங்கில உரைகள் சிலவற்றையும் காந்தியின் வேண்டுகோளுக் கிணங்க மொழிபெயர்த்துள்ளார். உரைநடை இலக்கியத்தை வளப்படுத்தியது இவரது சாதனை.
ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுள் அடிக்கடி உள்முக பயணம் செய்து, தன்னைத்தானே சுயவிமர்சனத்திற்கு ஆளாக்கிக் கொண்டு, பாம்பு சட்டையை உரித்துக் கொள்வதுபோல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி எழுத்தாளன் எத்தகையவராக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். உரைநடையைப் போலவே பேச்சுத் தமிழிலும் அவரது ஆற்றல் அளப்பரியது. பேரறிஞர் தெ.பொ.மீ. அவர்கள் இவரை பேச்சுக்கலையின் தந்தை என்றும், சிறு வாக்கியங்களின் ஆசான் என்றும் புகழும் அளவிற்குத் தூய தமிழில் அழகுறப் பேசி தமிழை வளர்க்கப் பாடுபட்டார்.
அன்னிபெஸண்ட் அவர்களின் தன்னாட்சி அறப்போர் இயக்கத்தில் சிலகாலம் ஈடுபாட்டுடன் இருந்தவர், பின் பெரியாருடன் இணைந்து சமூகப் பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். குறிப்பாகப் பெண் கல்வி, விதவைத் திருமணம் போன்றவற்றிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்தார். தமிழகத்தில் முதன்முதலாகத் தொழிற்சங்கங்களைத் துவக்கி தொழிலாளர்களின் நலனுக்காகப் போராட்டங்களை நடத்தியதும் இவரது சமூகப் பணிகளில் குறிப்பிடத் தகுந்தது. தேசபக்தன் மற்றும் நவசக்தி ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அச்சுக்கூடத்தையும் நடத்தி தமிழில் பழந்தமிழ் நூல்களை அச்சிடுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய திரு.வி.க அவர்கள் தமது இறுதிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் வகுப்புரிமை, திராவிட நாட்டு உரிமை, இந்தி எதிர்ப்பு கொள்கைகளுடனே பயணித்தார்.
திராவிடர் கழக மாநாடுகளில் முழங்கினார்.
கலைவாணர் என்.எஸ்.கிருட்டினன்
மலர்ந்தது: 1908-11-29 உதிர்ந்தது: 1957-08-30
கலைவாணர்! ஏன் இவருக்கு மட்டும் இப்பெயர் வந்தது? கலை என்கிற பெயரால், நாட்டில் அடிமை புத்தியையும், ஆண்டைத்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும், ஊட்டுவதுதான் கலையாக நமக்குக் காட்டப்பட்டது! அப்படிப்பட்ட படங்களில் நடித்துக்கொண்டே சிரிக்க வைத்து உடனே அதைப்பற்றி சிந்திக்க வைத்த மாமேதை கலைவாணர் அவர்கள்! கலைவாணரின் நகைச்சுவை பகுதி படங்களில் இல்லாவிட்டால் அப்படம் வெறும் பப்படம்தான்! அவர் காலத்தில் திரைப்படத்துறையில் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம்! அந்தக் காலத்தில் அவர் சிந்தனையில் தெனாலிராமன் கதைகள் கவனத்திற்கு வந்தது! தெனாலி இராமன் ஒரு பார்ப்பனர்தான்!
ஆனால், கிருட்டின தேவராயருக்கு ஆஸ்தான குரு தாத்தாச்சாரியும், அவர் அடிப்பொடிகள் சொல்வதுதான் வேதவாக்கு! மன்னன் கள்ளம், கபடு அற்றவன்! அதேநேரம் அரச குருவினை மீறி எதையும் செய்ய அச்சம்! மன்னன் குருவிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதை, பார்த்த தெனாலி இராமன், தாத்தாச்சாரி குழுவினரை மூக்குடைத்து அவமானப்பட வைத்த சம்பவங்கள்தான் தெனாலிராமன் கதைகள்!
கலைவாணர் பார்ப்பனர் கதைகளை வைத்தே, பார்ப்பனர்களை கலங்க வைத்தார்! மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார்! இது எப்படி முடிந்தது? கலைவாணர் அவர்கள், அவருடைய நகைச்சுவைப் பகுதியை தன் நாடகக் குழுவினரை வைத்து தனியே படம் எடுத்து படத்துடன் இணைத்துவிட்டு, படத்தின் முக்கிய பாத்திரத்துடன் இணைந்து இவர் மட்டும் நடிப்பார்! படத்திற்கே இந்த நகைச்சுவை பகுதிதான், பெயர் சொல்லும்! வசூலை அள்ளித் தரும்! அதனால் இவரை எதிர்க்க வழி தெரியாமல் திண்டாடிய பார்ப்பனர், முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவதுபோல மஞ்சள் இதழ் கயவன் கொலையில் கலைவாணரையும், எம்.கே.தியாகராச பாகவதரையும் இணைத்து துன்புறுத்தினார்கள்! இந்தக் கொலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று ராண்டர்கை எனும் எழுத்தாளர் தமிழ்நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் ‘தினத்தந்தி’ நாளிதழில் சில ஆண்டுகளுக்கு முன் தொடராக எழுதினார்! அது மட்டுமல்ல! கொலை செய்த குடும்பம் இன்றும் உள்ளது என்று ஆணித்தரமாக அச்சமில்லாமல் பேட்டியும் கொடுத்தார்!
கலைவாணர் சிறையில் இருந்து வெளிவந்ததும், அறிஞர் அண்ணா அவர்களிடம் கதை எழுதித் தரும்படிக் கேட்டார்! அண்ணா அவர்கள் நல்லதம்பி கதையைத் தந்து உங்கள் கருத்துப்படி மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார்! அது கலைவாணருக்கு புனர்வாழ்வு அளித்ததுபோல் ஆயிற்று. கலைவாணரும் பாகவதரும் இருவரும் சிறைச்சாலையில் இருந்து மீண்டு வந்தவர்கள்! கலைவாணர் கதை கேட்டார்! பாகவதர் கேட்கவில்லை. இருந்தாலும் அவருக்காகவே சொர்க்கவாசல் எழுதித் தந்தார், ஆனால்,அந்த வாய்ப்பை தியாகராச பாகவதர் பயன்படுத்வில்லை! கலைவாணர், அய்யா தந்தை பெரியாரிடமும், பேரறிஞர் அண்ணாவிடமும் அளவற்ற பாசமும், நேசமும் கொண்டிருந்தார்! திரைப்படத்தில் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்த முதல் மனிதர் கலைவாணர் அவர்கள்!
வாழ்க கலைவாணர் என்.எஸ்.கே.வின் புகழ்!