13.02.1981 அன்று சைதை தேரடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். இந்தி ஆதிக்கத்தை வீழ்த்திட, கட்சி பேதமின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். நீங்கள் எந்த அரசியல் கட்சியிலே இருந்தாலும் சரி. அரசியல் போட்டிகளை தேர்தல் நேரத்தில் வைத்துக் கொள்ளலாம். எந்தக் கட்சித் தமிழர்களாக இருந்தாலும் இன உணர்ச்சியோடு இருங்கள்! இன்றைக்கு பார்ப்பனர்கள் பகிரங்கமாக வெளியே வந்திருக்கிறார்கள்!
24.12.1980 தேதியிட்ட ஒரு மொட்டைக் கடிதத்தை நமக்குப் பார்ப்பனர்கள் எழுதியிருக்கிறார்கள். அது எந்தத் தேதியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24இல் அந்த மொட்டைக் கடிதத்தைப் பார்ப்பனர்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறோம்! பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், முதலில் பார்ப்பானை அடி என்பது நாம் சொல்லிய கருத்து அல்ல. அது ஒரு வடநாட்டுப் பழமொழி. “இந்தியாவைப் பற்றி தீர்ப்பு” என்ற நூலில் பிவர்லி நிக்கோலஸ் என்பவர் அந்தப் பழமொழியைக் குறிப்பிட்டிருக்கிறார்! பாம்பைவிட விஷம் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் என்ற கருத்தைக் குறிப்பதற்குத்தான் அந்தப் பழமொழி சொல்லப்பட்டதே தவிர அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல! அந்த வடநாட்டுப் பழமொழியை நாம் எடுத்துச் சொன்னால், அதற்காக ஏன் எங்கள் மீது ஆத்திரப்படுகிறாய்? நீ வேண்டுமானால் இந்தப் பழமொழிக்கு எதிராகப் போராட்டம் நடத்து!
அதற்காக இந்த மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் தெரியுமா? “தமிழனையும் பன்றியையும் கண்டால் முதலில் தமிழனை அடி; உதை; என்று எழுதியிருக்-கிறார்கள். தமிழனை உன்னால் அடிக்க முடியுமா? எங்கள் சோணகிரித் தமிழன்கூட, உன்னிடம் அடி வாங்குவானா? அந்தச் சவாலை நாங்கள் விட ஆரம்பித்தால் என்னவாகும்? நாட்டிலே ரணகளம் ஏற்பட்டுவிடாதா?
ஆனால், அந்த வன்முறையிலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுபோன்றே “தமிழச்சியின் கற்பை சூறையாடுவோம்’’ என்று திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவருக்குப் பார்ப்பனர்கள் மொட்டைக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்!
“திருச்சியிலே உன்னால் ஊர்வலம் வர முடியுமா?’’ என்று சவால் விட்டிருந்தார்கள்! எந்த இடத்துக்கு உன்னால் ஊர்வலம் வரமுடியுமா? என்று பார்ப்பனர்கள் சவால் விட்டிருந்தார்களோ, அதே இடத்திலே, 09.02.1981 அன்று நமது தோழர்கள் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்திக் காட்டினார்கள். அதிலே இன உணர்ச்சியோடு எல்லா கட்சித் தமிழர்களும் வந்தார்கள்.
‘தமிழச்சிகளின் கற்பைச் சூறையாடுவோம்’ என்று சொல்லும் பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
பெண்கள் -_ அவர்கள் எந்த இனத்துப் பெண்களாக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதைத் தத்துவம்! மனிதர்களை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை! ஆனால், பார்ப்பான் மனிதனாக வாழ முடியாது; பிரச்சினையே ( Crux of the problem) அதுதான்!
“கற்பு’’ பற்றி பார்ப்பனர்கள் பேசுகிறார்களே! அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம் இதோ!
‘ஞானசூரியன்’ புத்தகம்! இது நாங்கள் எழுதிய நூல் அல்ல! சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதிய நூல்! இந்த நூலிலே ‘யக்ஞவல்கியர்’ கூறிய கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்து சட்டங்களுக்கு ஆதாரமாக யக்ஞவல்கியரை இன்றைக்கும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே அந்த யக்ஞவல்கியர் கூறிய கருத்துதான்! ஞானசூரியன் பக்கம் 82லே இருக்கிறது.
அதில், “தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதி இல்லாவிட்டால் புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரியானவள் பெரியோர்களின் அனுமதியைப் பெற்று ருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோதரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்’’ என்று யக்ஞவல்கியர் சொல்லியிருக்கிறார்.
விபச்சாரக் குற்றம் செய்தால் அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா? பக்கம் 83இல் யக்ஞவல்கியர் சொல்லியதைப் படிக்கிறேன்.
“விபச்சாரம் செய்தவளின் ஹிமையை (முடியை) எடுத்துவிட்டு, ஒரு உருண்டைச் சோறு மட்டும் கொடுத்து வெறுந்தரையில் படுக்கச் செய்ய வேண்டும். இவ்விதம் ஒரு ஆண்டுவரையில் செய்தால் குற்றமற்ற வளாவாள்!’’ இதுதான் விபச்சாரத்துக்குப் பரிகாரம்!
இப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்கள்-தான் பார்ப்பனர்கள்!
இப்படிப் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை அந்த மாபெரும் பொதுக்-கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். மாநாட்டுக் கூட்டம் போல் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள். கழகத் தோழர்கள் குடும்பங்குடும்பமாக இனவுணர்வுடன் கூடியிருந்தார்கள்.
வாணியம்பாடியில் நடந்த கோர இரயில் விபத்திற்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் டிரைவர்களாக பதவி உயர்வு கொடுத்ததற்கும் முடிச்சுப் போட்டு 15.02.1981 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஏட்டில் ““Vaniyambadi Smash linked to reservation policy” ” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இதனைக் கண்டித்து விடுதலையில், “வாணியம்பாடி ரயில் விபத்தும் வகுப்புவாரி உரிமை ரிசர்வேஷனும்’’ என்ற தலைப்பிட்டு நீண்டதோர் தலையங்கமாக எழுதியிருந்தேன்.
வாணியம்பாடி இரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய இரயில்வே கமிஷனர் விசாரணை செய்துகொண்டிருக்கும் போது திருவனந்தபுரம் இரயிலை ஓட்டிய டிரைவரின் திறமையின்மையால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று எப்படி முடிவு கட்டினார்கள் இந்தப் பார்ப்பன சூரர்கள்?
மத்திய இரயில்வே துணை அமைச்சர் ஜாபர் செரீப் அவர்கள், சிக்னலிங் முறையில் ஏற்பட்ட கோளாறுதான் விபத்துக்கு அடிப்படை என்று கூறியிருந்தார்.
சிக்னலிங் (Signalling) கில் இருந்தவரும் தாழ்த்தப்பட்ட பதவி உயர்வு பெற்றவர்தானா? முற்பட்டோர் என்ற முகமூடியில் ஒளிந்து-கொண்டுள்ள பார்ப்பனர்களே பதில் கூறுங்கள்! என்று அந்த அறிக்கையில் வினா எழுப்பியிருந்தேன்.
14.02.1981 அன்று பண்ருட்டியில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்பொழுது, அன்று அய்யா அவர்கள் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி உத்தியோகங்களில் 50 சதவீதம் வேண்டும் என்று போராடினார். காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டுபோனார். அன்று அது தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம். இறுதியில் தந்தை பெரியாரின் எண்ணமே இன்று வெற்றி பெற்றுள்ளது. அன்று 50 இடங்கள் வேண்டும் என்று அய்யா அவர்கள் போரரடினார். இன்று 100க்கு 50க்கு மேலாக 68 இடங்கள் பார்ப்பனரல்லாதவர்களுக்கு கிடைத்து இருக்கிறது’’ என்று வரலாற்றுச் சாதனையைப் பேசினேன்.
02.03.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “தாழ்த்தப்பட்டோருக்கு அதிக ஒதுக்கீடு விரைந்து செய்க!’’ என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், தமிழக அரசு ஆணைப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 சதவீதத்தை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தமிழக மேல் அவையில் கூறியிருப்பதை நாம் மனமார பாராட்டி வரவேற்கிறோம்.
மக்கள் தொகையில் 22 முதல் 25 சதவீதம் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி, ஒடுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இப்படி அதிக ஒதுக்கீடு தருவது மிக மிக அவசரமும் அவசியமானதுமாகும்.
50 சதவீதமாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டபோதே நாம் வற்புறுத்தியதுடன், அதற்குப் பிறகு நடைபெற்ற மாநாடுகள், மத்தியக் கமிட்டிகள் இவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தமிழக அரசு, முதலமைச்சர் இதில் துணிவுடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்த முடிவைக் காலந்தாழ்த்தாது அறிவிக்க வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
04.03.1981 பெரியார் திடலுக்கு முன் ‘மறியலுக்கு’ வரப்போவதாக அய்யங்கார் குரலின் தூண்டுதலோடு சிலர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த 2ஆம் தேதி ‘விடுதலை’யில் தான் வெளியிட்டிருந்தோம். செய்தியைப் படித்தவுடன் உணர்ச்சியுள்ள கழகச் செயல்வீரர்கள் அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டனர்!
தமிழக முழுவதுமிருந்தும் கருஞ்சட்டை மாவீரர்கள் திரண்டு வந்துவிட்டனர்! பெரியார் திடலுக்கு முன்பு மறியல் செய்வதற்கு “மூன்று கட்சித் தலைவர்கள்’’ திரளுகிறார்கள் என்று ‘அய்யங்கார்த்தனமாக’ அய்யங்கார் குரல் ஏடு செய்தி வெளியிட்டு வந்தது!
அய்யங்கார் கூறிய திருவாரூர் தங்கராசு, திருச்சி ஆணைமுத்து என்பவர்களோ, அவரது ஆதரவாளர்களோ இதில் கலந்துகொள்ள வில்லை! சிதம்பரத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமியின் ஆட்கள் சுமார் 50 பேர் மட்டும் இதில் கலந்துகொண்டனர். இவர் பின்னாளில் தனது செயலுக்கு வெட்கப்பட்டு இயக்கத்திற்கே திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மறியல்’ செய்யப்போவதாக சொல்லிக் கொண்டு 2 பெண்கள் உட்பட 52 பேர் எழும்பூர் கூட்ஸ் ஷெட் அருகே வந்து நின்று கொண்டிருந்தனர். சுமார் 10 நிமிடம் சத்தம் போட்டு விட்டு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
பெரியார் திடல் கழக நுழைவு வாயிலில் கழக வீரர்கள் இடி என கொள்கை முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர். நான் திடலுக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதுமிருந்து திரண்டிருந்த கழகக் குடும்பங்கள் ‘தமிழர் தளபதி’ வாழ்கவென, உணர்ச்சியோடு என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். கழக வீரர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து விட்டு அவர்களிடம் உணர்ச்சியான ஒரு உரையை நிகழ்த்தினேன். அப்பொழுது, என் குடும்பத்து உறுப்பினர்களாகிய உங்களை நான் அடிபணிந்து வேண்டிக் கொள்ளுவதெல்லாம் ஆவேசப்படாதீர்கள்! ஆத்திரப்படாதீர்கள்!
தந்தை பெரியார் மறைவுக்கு பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட நம்முடைய அருமை அன்னையார் தலைமை எற்றபோது நாம் எடுத்த சூளுரையை அடக்கத்தோடு உங்களுக்கு நினைவுபடுத்த கடமைப் பட்டுள்ளேன்.
“தமிழ்ச் சமுதாயத்தின் இமயமான தந்தை பெரியார் மறைந்த பிறகும்கூட விழிகளிலே வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நமது பணியைத் தொடர்ந்தோம். இங்கே நடைபெற்ற ‘இராவண லீலா’ இன்னும் நம் உள்ளத்தில் நீங்கா நினைவாக இருக்கிறது. நமது கெட்ட வாய்ப்பாக அன்னையாரையும் நாம் இழந்தோம்.’’
இளம் வயது முதல் உங்களின் தொண்டனாகவும் தந்தை பெரியாரின் நிரந்தர அடிமையாகவும் என்னை ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவன் நான்.
நமது லட்சியப் பயணத்தைத் தவிர நமக்கு வேறு குறிக்கோள் கிடையாது. என்னிடத்திலே திறமைக் குறைகள் இருக்கலாம்; ஆனால், அது நாணயத்தைப் பொருத்து இருக்க முடியாது; நேர்மையைப் பொருத்து இருக்க முடியாது.
தந்தை பெரியாரின் லட்சிய மறவர்களைக் கொண்ட இந்த தற்கொலைப் படையை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பை எனக்குத் தந்துள்ளார்கள்.
அறக்கட்டளைக்கும் சோதனை வந்தது. கொள்கைச் சொத்தான வகுப்புரிமைக்கும் சோதனை வந்தபோது நாம் அதைச் சந்தித்தோம்.
பிறவி இழிவை ஒழிப்பதற்காக நமக்கு தந்தை பெரியார் கருப்புச் சட்டையைத் தந்தார். ஆனால், அந்தச் சட்டையை இன்றைக்கு அய்யங்கார்களும் போடத் துவங்கி யிருக்கிறார்கள். நமது இனத்து “விபீஷணர்கள்’’ கருப்புச் சட்டையை அய்யங்காரிடம் அடகு வைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள்!
மறியலை வேடிக்கைப் பார்க்க வந்த டி.ஆர்.இராமச்சந்திர அய்யர் _ மக்களை _ கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தார்.
அவர்கள் பெரியார் சொத்துக்களை மீட்பது இருக்கட்டும், முதலில் அடகு வைத்த கருப்புச் சட்டையை மீட்கட்டும்.
ஒரு லட்சாதிபதிக்கு சமுதாயத்தில் இருக்கும் மதிப்பைவிட தந்தை பெரியார் தந்த இந்த கருப்புச் சட்டையைப் போட்டவர்களுக்கு மதிப்பு அதிகம். அதை மதிக்க கோடானுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.
சுயமரியாதைச் சுடரொளி மறைந்த பாவலர் பாலசுந்தரத்தின் துணைவியார் அம்மா பட்டம்மாள் அவர்கள் இங்கே எனக்கு கத்தியைப் பரிசாகத் தந்தார்கள். இந்தக் கத்தியை குத்துவதற்கு நாம் பயன்படுத்த மாட்டோம்’’ தற்காப்பு ஆயுதங்களாக மட்டும் இதைப் பயன்படுத்துவோம்.
துள்ளுகின்ற பார்ப்பனர்களுக்கு சொல்கிறோம். ‘ஆத்தூர் தீர்மானம்’ எப்போதும் எங்கள் கைவசம் இருக்கிறது. மறவாதீர்!
கிளர்ச்சி நடத்த வருகிறவர்களின் ‘சரக்கு’ என்ன என்பதற்கு அவர்கள் வெளியிட்டிருக்கிற சுவரொட்டியைப் பார்த்தாலே தெரியும்.
நம்மைப் ‘பொறுக்கிகள்’ என்று போட்டிருக்கிறார்கள். ஆம்! தந்தை பெரியார் அவர்களால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் தான் நாம்! அவர்கள் பார்ப்பனர்களால் பொறுக்கப்பட்டவர்கள் என்று உணர்ச்சிப்பிழம்பாக உரையாற்றினேன். ஒரு மணி நேரம் பெரியார் திடல் முன் மறியல் நடத்துவோம் என்று அறிவித்தார்கள். 10 நிமிடத்தில் கலைந்துசென்று விட்டனர். மறியல் செய்ய வந்த அவர்கள் சரணம்பாடிகள்.
05.03.1981 அன்று கிண்டி எஞ்சினியரிங் இலக்கிய மன்றத்தின் சார்பில் தந்தை பெரியார் விழா சிறப்புடன் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட தந்தை பெரியார் விழாவில் கலந்துகொண்டேன். அப்பொழுது, இங்கே இளம் தலைமுறை-யினராகிய நீங்கள் தந்தை பெரியார் பற்றி மிக அருமையான கவிதைகளைப் பாடினீர்கள். தந்தை பெரியாரைப் பார்க்காத தலைமுறையாக இருந்தாலும், அதற்காக அச்சமோ, அய்யமோ படத் தேவையில்லை என்பதற்கு ஆதார சுருதிகளாக உங்கள் அருமையான கவிதைகள் அமைந்திருந்தன.
தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருப்போமா? என்று நன்றி உணர்வோடு கேட்டீர்கள். இப்படிக் கேட்பதுதான் மிகவும் அதிசயம். இப்படிக் கேட்காமல் இருப்பது இந்தச் சமுதாயத்தில் ஒன்றும் அதிசயப்படக் கூடியதல்ல. இதைச் சிந்திக்க வேண்டிய இளைய தலைமுறையினர். சிந்தித்துக் கேட்டீர்களே! அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. அந்தக் கேள்வியை நானும் எனக்குக் கேட்டுக் கொள்கிறேன். தந்தை பெரியார் இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு வந்திருப்பேனா?
தந்தை பெரியார் பணி ஆழமான பணியாகும். இமயத்தைக் கீழே இருந்து பார்க்கும்போது சிலருக்கு பனிக்கட்டி மட்டும் தெரியும்; சிலருக்கு குளிர் தெரியும். மேலே கைலயங்கிரி இருக்கிறது என்று அச்சத்தால் நம்பிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அவரவர் அறிவுக்கு ஏற்ப இமயத்தைப் பற்றி அவரவர்கள் உணர்ந்து இருந்தார்கள். அத்தகைய இமயம் போன்ற மனவளத்துக்குரிய தந்தை பெரியார் அவர்களுக்கு இங்கே நீங்கள் தொடர்ந்து விழா எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
எதையும் ‘கிண்டி’ ‘கிண்டி’ கேட்ட தலைவர் என்பதால் இந்த கிண்டி கல்லூரி இடைவிடாது விழா எடுத்துக் கொண்டிருக்கிறது போலும்! ‘நம்பாதே’ என்று சொன்ன தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டார்: “நீங்கள் சொல்வதை நம்பலாமா?’’ என்று.
தந்தை பெரியார் சொன்னார்: “நான் சொல்வதையும் நம்பிவிடாதே? உன் அறிவுக்கு சரி என்று பட்டால் எடுத்துக்கொள்’’ என்றார்!
ஒவ்வொரு மதமும் என்ன சொல்கிறது? “அடுத்தவன் மதத்தை நம்பாதே, என் மதத்தை மட்டும் நம்பு’’ என்று சொல்கிறது. அதனால் இத்தனை மதங்கள் தோன்றியிருக்கின்றன என்று மாணவர்களிடையே பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினேன்.
08.03.1981 அன்று திருச்செந்தூர் பகுத்தறிவாளர் கழக துவக்க விழாவில் கலந்துகொண்டேன். பார்ப்பனர்கள் எனக்கு எழுதிய மிரட்டல் கடிதத்திற்கு அக்கூட்டத்தில் பதில் அளித்துப் பேசினேன்.
எதிர்ப்பு என்று வந்தால்தான் எங்களுக்கு உற்சாகம் பிறக்கும். எதிர் நீச்சலிலேயே வளர்ந்து பழக்கப்பட்டவர்கள்தான் பெரியார் தொண்டர்கள். பாராட்டுதலைக் கேட்க நேர்ந்தது எங்களுக்கு ஒருகால் சலிப்பு ஏற்படுமே தவிர எதிர்ப்பினைக் கண்டு உற்சாகம் குன்றக் கூடியவர்கள் அல்லர். காரணம் எப்போதும் ஈரோட்டை நோக்கிப் போகின்றவன் பாராட்டை எதிர்பார்க்க மாட்டான். நாங்கள் எந்த நீரோட்டத்தையும் நம்பிப் போகக் கூடியவர்கள் அல்லர்.
“ஈரோடு போனவன் ஒருபோதும் நீரோடு போகமாட்டான். அதுதான் முக்கியமானது. எனவே, அந்த வகையிலே முழுக்க முழுக்கச் செல்லக் கூடியவர்கள் நாங்கள்.
‘வெடிகுண்டு வீசுவோம்’ என்று சொல்லி இருக்கின்றார்கள். இந்த திருச்செந்தூரிலே வெடிகுண்டு சாலை எங்கே இருக்கின்றது. தெரிந்துகொண்டு போவோம் என்றுதான் வந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டேன்.
வெறும் விபூதி தயாரித்து வந்தவர்கள் இன்றைக்கு வெடிகுண்டு தயாரிக்கப் புறப்பட்டு உள்ளார்களாம். அவர்களின் தரத்திற்குத்தான் இந்தக் கடிதம்.
இதில் திருச்செந்தூர் அஞ்சல் முத்திரையே இருக்கின்றது. இது மிக முக்கியமானது. இந்தக் கடிதத்தை அப்படியே ‘விடுதலை’யில் 3ஆம் பக்கத்தில் சென்னையில் 4ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். ‘பார்ப்பான் எப்படிப்பட்டவன்?’
எது குச்சிக்காரரித்தனமோ அதனை ‘பத்தினித்தனம்’ என்று சொல்லுவான். எது பத்தினித்தனத்திற்கு அடையாளமோ அதனை ‘விபச்சாரத்தனம்’ என்று தலைகீழாகக் காட்டுவான்.
நாம் சாதியில் வேண்டுமானால் பிளவுபட்டு இருக்கலாம். ஊரினால், எல்லையால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், உணர்வால், இனத்தால், நம்முடைய கொள்கையால் நாம் அனைவரும் ஒரே குடும்பம் அல்லவா? இந்த உணர்வும் பாசமும் அந்தப் பார்ப்பன இனத்தில் நமக்கு ஏற்பட முடியுமா? முடியாது.
(நினைவுகள் நீளும்)