மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை வெளிச்சம்

ஜனவரி 16-31

கி.வீரமணி

மனித குலத்தில் _ பற்பல நாடுகளிலும், பல்வேறு சமுதாயங்களிலும் மூடநம்பிக்கை _ ஆதி பருவத்தில் அதாவது அறிவியல் அதிகமாக பரவாத காலத்தில், இயற்கையின் நிகழ்வுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் _ பயத்தின் காரணமாக _ எதையோ கடவுள் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை வல்லாண்மை எனவும் கருதி, அறியாமை இருட்டில் மனிதன் தன்னை முடக்கிக் கொள்ளும் நிலை காணப்பட்டது.

மூடநம்பிக்கை (Superstition) என்பது என்ன?

அகராதிகள் எப்படி வரையறுக்கின்றன? இயற்கைக்கு மேற்பட்ட சக்திகள் பற்றிய புரிதலின்மை, குருட்டு நம்பிக்கை, பகுத்தறிவுக்கு வேலைகொடாது கண்ணை மூடிக்கொண்டு மிகுந்த அச்சத்தோடு, பல்வேறு இயற்கை நிகழ்வுகளை எண்ணி கலங்கி வாழும் நம்பிக்கையுடையவர்களாக மனிதர்கள் இருந்தனர்.

சடங்குகள், சம்பிரதாயங்கள், ஏன், எதற்கென்று சிந்திக்காமல் பயத்தினால் அதிசயங்களாகப் பார்த்து அவைகளைக் கெட்டியாக, வழிவழியாகப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து மாறமறுக்கும் பிடிவாதம்; காரண காரிய விளக்கத்திற்கோ, ஆய்வுக்கோ இடம் தராத ஒரு கண்மூடி வழக்கம்! _ இதுதான் மூடநம்பிக்கை!

இந்தக் குருட்டு மூடநம்பிக்கைக்கும், மதங்களுக்கும், கடவுள்களுக்கும், மிக நெருங்கிய உறவு _ எளிதில் பிரிக்கப்பட முடியாத உறவு உண்டு.

அறிவியலின் உரசலால்தான் வெகு காலத்திற்குப் பின், இந்த மூடநம்பிக்கைகள் கெல்லி எறியப்படுதல் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக நடைபெற்றது!

மூடநம்பிக்கைகள் நிலைத்திருப்பதற்கு அடிப்படை எவை எவை?

1.    பயம்
2.    குருட்டு நம்பிக்கை
3.    பகுத்தறிவுப்படி ஆராயாமை
4.    பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கு (Attitude)  

இதற்கு நேர் எதிரானதும், மனிதகுலம் முன்னேற, வெளிச்சம் தர உதவிடுவது, உந்துவது அறிவியல் (Science) ஆகும்!

அறிவியல் என்பது என்ன?

1.    முறைப்படுத்தப்பட்ட, ஆதாரங்களையும், சான்றுகளையும் அனுபவ பரிசோதனை களுக்கும் உட்படுத்தப்பட்ட அறிவும் அனுபவமும்.

2.    காரண காரிய விளக்கத்தின் வெளிப்பாடு.

3.    முடிந்த முடிபு என்ற இறுதி இல்லை. மாற்றங்களை எப்போதும் வரவேற்கக் காத்திருக்கும் திறந்த மனப்பான்மை.

மூடநம்பிக்கை திறந்த மனப்போக்கிற்கு எப்போதும் எதிரி.

அ)    அறிவியலின் முக்கிய அம்சமே திறந்த மனப்பான்மை!

ஆ)    வெறும் நம்பிக்கை, பழக்கம், பிறகு வழக்கம் என்ற அடிப்படையிலேயே நம்பி விடாமற் பிடித்தொழுகுதல்.
அறிவியலோ, நேற்றைய கண்டுபிடிப்பு இறுதியானதல்ல; இதோ இன்றைய ஆய்வு அதை மாற்றி மேலும் புதியதோர் வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ள ஒன்று!
மூடநம்பிக்கை -_ அறியாமை பெற்றெடுத்த குழந்தை!

அறிவியலோ -_ அக்குழந்தையை அந்த அறியாமை நோயிலிருந்து விடுதலை செய்து புத்தறிவு புகட்டி, புதுமையை ஊட்டி புத்தாக்கத்தினைத் தரும் ஒன்று.

மூடநம்பிக்கை _ இருள்!
அறிவியல் _ வெளிச்சம்!

இலக்கணம் _ தத்துவார்த்த விளக்கம் போதும். இனி நடைமுறை. மனிதகுலம் முன்னேற அறிவியலால் எப்படியெல்லாம் உயர்ந்தது; முன்னேறியது பார்க்கலாமா?

இது கடல்போன்று பரந்த ஆழமான-தொன்று; மலைபோல் நெடிதுயர்ந்து சிகரம் எட்ட முடியுமா என்று வியக்கத்தக்க உயரம் கொண்டது!

என்றாலும், மூடநம்பிக்கையை விரட்டிய அறிவியல் சாதனைகளைப் பற்றி பல்வேறு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்திகள் அறிவியல் வரலாற்றில் ஏராளம் உண்டு!

மனிதர்களுக்குக் கிருமிகளால் நோய் ஏற்படுகின்றன; எனவே அவைகளை அழிக்க மருந்துகளை எடுத்து, சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பது இன்று சாதாரண நடைமுறை!

ஆனால் முன்பு _ சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை? எத்தகைய மூடநம்பிக்கை ஆட்சிபுரிந்தது தெரியுமா?
‘கடவுள் மனிதர்களைப் படைக்கிறார்; அவர்களின் பாவத்திற்குத் தண்டனையாக நோய்களைத் தருகிறார் அல்லது அனுப்புகிறார். அதை ஏற்று மடியவேண்டுமே தவிர, எதிர்த்து சிகிச்சை தருவது கடவுளுக்கு விரோதமான ஒன்று.

எனவே, நோய் தீர்க்க முன்வந்த மருத்துவர்கள் சாத்தானின் ஏவுகள். எனவே கொல்லுங்கள். அவர்களை விரட்டியடியுங்கள் என்று வேட்டை யாடப்பட்டனர் மருத்துவர்கள் ஒரு காலத்தில்.

இதன்படி கடவுள் நோயை அனுப்பி மனிதர்களைத் தண்டிப்பது நியாயம். அதனை அப்படியே மாறாமல் நம்பி பின்பற்ற வேண்டும். எனவே இது ஆத்திகம்!

இதற்கு மாறாக _ மருந்துகள், ஊசிகள் மூலம் குணப்படுத்தும் மருத்துவர்கள் கடவுளுக்கு எதிரான சைத்தான் தூதுவர்கள்; இவர்களை உயிருடன் விட்டு வைப்பது ஆபத்து என்று கொல்வதை நியாயப்படுத்தினர்!

இதை வெகு அழகாக, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தந்தை பெரியார் டாக்டர்கள் தந்த அழைப்பிதழை ஏற்றுச் சென்று தனது உரையை எப்படித் துவக்கினார் தெரியுமா?

“டாக்டர்களாகிய உங்களைப் பின்பற்றியே நானும் நாத்திகனாக இருந்து அந்த அறிவுப் பிரச்சாரத்தை நாள்தோறும் நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்துவருபவன்.

கடவுள் அனுப்பிய நோயைத் தீர்த்து வைக்கும் நீங்கள் எப்படிக் கடவுளுக்கு எதிராளியோ அப்படியே அறிவுப் பிரச்சாரம் செய்யும் நானும் உங்களைப் பின்பற்றியே செல்கிறேன்’’ என்றார். ஒரே கைத்தட்டல் _ ஆரவாரம் அடங்கப் பல மணித்துளிகள்!
அது ஏதோ விளையாட்டுப் பேச்சு, கேலி, கிண்டல், நகைச்சுவை, நையாண்டி அல்ல!

கிரேக்கத் தத்துவ ஞானிகள் _ பிறகு ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) போன்றவர்-களுக்கு முன்பு _ அலக்மெயான் (Alcmacon) என்பவர்தான் உடற்கூறு பற்றிய பழைய மூடநம்பிக்கையிலிருந்து மக்களை விடுவிக்க முயற்சி எடுத்த முதல் மருத்துவ அறிஞர்.

அதற்கு முன் (கி.மு.500க்கு) பல நூற்றாண்டு களுக்கு முன் உடலைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அறுக்கக் கூடாது; காரணம், நோய்கள் என்பவைகள் தலைவிதிப்படி அனுப்பப் பட்டவை. ஜோசியத்தின் படியான எதிர்பாராத நிகழ்வு, இயற்கை சக்திக்கு மேலான ஒன்றினால் ஏற்பட்ட தாக்கம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர்.

“Men like Alcmaeon broke with the traditional train of thought, which regarded disease as a matter of fate, astrological accident or super natural influence.”  

– (Theories for everything – National Geographic Magazine publication )

  ஹிந்து மதம் என்ற பார்ப்பனிய மதத்தில் செத்த உடலை அறுத்துப் பார்ப்பதற்குப் பதிலாக ஒரு ஆற்றில் 7 நாள் வைத்திருந்து அதன் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து, அறுக்காமலேயே _ ஆய்வு செய்ய அனுமதிக்கப்-பட்டதும் உண்டு!

இன்று அதே மருத்துவ இயல் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிட்டதால், பல இளைஞர்கள் சாலை விபத்துக்களிலும் மற்ற சில எதிர்பாரா நோய்களாலும் மூளைச்சாவு அடையும் நிலையில், அவர்களது மற்ற உடல் உறுப்புகளை -_ கண், இருதயம், சிறுநீரகம் போன்ற பல உறுப்புகளை _ அவர்களது பெற்றோர்களோ, உறவினர்களோ கொடையாக மற்ற தேவைப்படும் நோயாளி-களுக்கு _ விமானத்தில் பறந்துகூட  விரைந்து கொண்டுவரப்பட்டு பொறுத்தப்படும் அளவுக்கு அறிவியல், மருத்துவ இயல் வளர்ந்துவிட்டது இந்த 21ஆம் நூற்றாண்டில்!

இதில் கவனிக்கப்பட வேண்டியது

1.    மனிதநேய ஊற்று மட்டுமல்ல.

2.    இந்த உறுப்புகள் பொருத்தப்படுவதற்கு ஜாதி, மதம், நாடு என்ற பேதம் ஏதும் பார்க்காமல் _ மனிதர்களே செயற்கையாக நீங்கள் உருவாக்கிக் கொண்ட மதமும், ஜாதியும் பேதச் சுவர்களும் இதோ எங்கள் மனித நேயத்திற்கு முன் இடிபட்டு சமத்துவம் _ அறிவியலில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது பார்த்தீர்களா? என்று பறைசாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய அறிவியல் சாதனை?

பகுத்தறிவு வாழ்க்கைதான் பண்பட்ட வாழ்க்கை; பயனுறு வாழ்க்கை!
சுயமரியாதை வாழ்வுதான் சுகவாழ்வு!

அறியாமை இருளிலிருந்து விடுபட அறிவியல் அடிப்படை வாழ்வுதான் வெளிச்சத்தைத் தரும், நமக்கான வெற்றி வாழ்க்கையையும் தரும்!

எனவே, ஜோதிடம், வாஸ்து, கைராசி என்று நம்புதல், கையிலே கயிறுகட்டி கோழை என்று தன்னைத்தானே அறிவித்தல், நெற்றியில் ‘டிராயிங்’ போட்டுக் கொள்ளல், பெண்களை அடிமைப்படுத்துதல், அறிவியல் படித்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமை _ காலம், நேரம் பார்த்து, காலத்தை வீணாக்குதல் செய்யாமல் விடுதலை வாழ்வு வாழுங்கள்!

எந்தவொன்றையும் பகுத்தறிவோடு செய்வோம்!
தந்தை பெரியார் காண விரும்பிய புது சமுதாயம் சமைப்போம்!  அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *