பேராசிரியர் க.அன்பழகன்
உலகம் சிறிதாகி வருகிறது. நெடுந் தொலையில் உள்ள நாடுகள் ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ‘பரப்பு’ குறுகுகின்றது. விஞ்ஞான அறிவு விரிவடைவதால், உலக மக்கள் ஒருவரோடொருவர் நெருங்கிக்-கொண்டே யுள்ளனர் ‘அறிவு’ வளர்வதால், உள்ளம்’ விரிவதால்.
படைகள் பலவற்றை யனுப்பிப் போர்க் களத்தில் சந்தித்த நாட்டினரும், வெற்றிபெற்ற வரும் வீழ்ச்சியுற்றவரும் வெவ்வேறு இனத்தின ரானாலும், வேற்றுமை மிக்கவரானாலும் இந்நாள் ஒன்று கூடுகின்றனர். ஒற்றுமைக்கான வழி தேடுகின்றனர். வேற்றுமைகள் முற்றும் ஒழிந்தபாடில்லை. அதனாலேயே ‘ஒற்றுமை’ முயற்சிகள் ஒழிந்தபாடில்லை.
வேற்றாரும், மாற்றாரும் ஓரிடத்தில் கூடுவதும், காண்பதும், உரையாடுவதும், உண்பதும், கைகுலுக்குவதும், கட்டித் தழுவுவதும், வெளி யுலகத்தைப் பற்றிய இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தின் காட்சியாக, இந்த நாட்டுப் பத்திரிக்கைகளி-லேயே பக்கம் பக்கமாகப் படங்களும், பத்தி பத்தியாகச் செய்திகளும் வெளிவரக் காண்கிறோம்.
இங்கேயோ, திராவிடத் திருநாடு மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்ட முழுவதும், ஒரே இனத்தவரிடையேயும், ஒரேநாட்டவரிடையேயும், ஒரே மொழி பேசுவோரிடையேயும், ‘ஒற்றுமைக்கு’ வழியின்றி வேறுபாடுகள் வளர்வதோடு ‘முரண்பாட்டை’ நிலைக்கச் செய்யும் ‘தீண்டாமை’ கோரத் தாண்டவமாடி வருவதைக் காண்கிறோம்.
வெளிநாடுகளிலேயோ, ‘ஒற்றுமைப் பயிர்’ ஓங்கி வளராவிட்டாலும், முளையிலேயே அழியாமலாவது ‘நாகரிக’ வரம்பும், ‘பகுத்தறிவு’ வேலியும் பாதுகாப்பளிக்கின்றன. இங்கேயோ நால்வகைச் சாதிப் பாகுபாடே நாகரிகமாகவும், “தீண்டாமை” பகுத்தறிவு நாட்டிய பாதை-யாகவும் பன்னெடுங் காலமாக அமைந்து-விட்டது. இந்தப் பாலையில் ஒற்றுமைப் பயிர் முளைப்ப தெங்ஙனம்? முளைத்தாலன்றோ வளருவதற்கு!
‘தீண்டாமை’ ஒரே நாடு, மொழி, கலை, நாகரிகம், உடைய மக்களைப் பிரித்து வைப்பதைப் போலத்தான், ஒத்த அறிவு, பண்பு, தொழில், வருவாய் உடையவர்களையும் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்துகின்றது.
ஒருவரையொருவர் தொடாமல் இருப்பது என்பது ‘தீண்டாமை’ என்ற சொல்லின் பொருளாம். தொடக்கூடாது என்பதினாலேயே, தொடக்கூடிய அளவில் ‘நெருங்கக் கூடாது’ என்பது சொற்பொருளின் விளக்கமாம். ‘நெருங்கக் கூடாது’ என்பதினாலேயே மேலும், ‘ஒதுங்கிச் செல்ல வேண்டும்’ என்பது சொல்லின் வழக்கப் பொருளாம். ஒதுங்கிச் செல்வது மட்டுமின்றிக் ‘ கண்ணால்பார்க்கவும் கூடாது’, என்பது அந்தச் சொல் வழங்கியதால் ஏற்பட்ட முறையாம். மற்றும் சில இடங்களில் “நடமாடவும் கூடாது” என்பவை போன்ற முறைகளெல்லாம் ஆதிக்கக்காரர் அந்தச் சொல்லினிடத்தில் தோற்றுவித்த ‘கட்டளை-களாம்’.
தீண்டாதார் _ மேல்சாதியினரை நெருங்கக் கூடாது; உண்பதைப் பார்க்கக் கூடாது; அப்படியின்றி நெருங்கினாலும், பார்த்தாலும் மேல் சாதியினருக்குத் ‘தீண்டல்’ (தீட்டு) ஏற்படுமாகையால், அவர்கள் தீண்டாதாரை விலகும்படி, ஒதுங்கி ஒடுங்கி நிற்கும்படி, அணுகி விடாமல் அகன்றொழியும்படி கட்டளையிட வேண்டும், என்பவைகளே ‘தீண்டாமை’யின் உருவமாம்.
‘தீண்டல்’ (தீட்டு) என்பதே தீண்டாமையின் உயிர். ‘தீண்டாதாரே’ தீண்டாமையின் உயிர் நாடிகள். ‘தீண்டாதார்’ _ தீட்டுடையவர்கள். அவர்களைத் தொட்டால் ‘தீட்டு’ பட்டு-விட்டால் பட்டவரைப் பற்றும் “அத்தீட்டு”.
“தீண்டல்” என்பது உண்மையா? தீண்டாதாரிடத்திலே _ பிறரிடத்திலே இல்லாத எத்தன்மை இருப்பதால் தீண்டப்படாதாராகக் கருதப்படுகின்றனர்?” என்ற கேள்விகள் தோன்றுகிற பொழுது _ தீண்டல் _ பொய் என்பதும் தீண்டப்படாதார் _ என்று பிரித்துக் காட்டப்படுகின்ற எவரிடமும் பிற எவரிடமும் இல்லாத எத்தன்மையும் இல்லை என்பதும் _ ‘தீட்டு’ தொடருவதற்கு எத்தகைய சான்றும் இல்லை என்பதும் தெளிவாக விளங்கும்.
“தீண்டப் படாதவர்கள் _ மிக்க அசுத்தமாக இருப்பதனாலேயே அவர்களைத் தொடக் கூடாது _ நெருங்கக் கூடாது என்று கருதியவர்கள், பிற்காலத்தில் அதனையே ‘தீட்டென்று’ கற்பித்துக் தீண்டாமல் இருக்கச் செய்தனர் என்றும், அதில் தவறென்ன?” என்றும் சிலர் கேட்கலாம்.
“தீண்டப்படாதவர் மட்டுமேதான் அசுத்த-மாக இருக்கிறார்களா? அசுத்தமாக உள்ள ‘எவரானாலும்’ தீண்டப்படாதாராகக் கருதப்படாததேன்? (தீண்டப்படாதாராகப் பிறந்த எல்லோரும் எப்போதும் அசுத்தமாகவே இருக்கிறார்களா? உழைப்பின் மிகுதியாலும், வறுமையாலும் பெரும்பாலோர் சுத்தமின்றியே இருப்பினும் உடல் முழுதும், அசுத்தம் என்றோ அவர் காற்று பிறர்மீது பட்டாலே அசுத்தம் என்றோ கூறமுடியுமா? அப்படியே இருப்பினும், சேற்றிலே புரளும் எருமையைத் தொடுபவர்-களும், குப்பை மேட்டிலேகிடக்கும் குக்கலை நடுவிட்டில் நடமாட விடுபவர்களும், மலத்தைத் தின்னும் பன்றி தெருவிலே ஓடுவதையும், நெருங்கிச் செல்வதையும் தடுக்காதவர்களும், அதைவிட அதிகமாகத் தீண்டாதவர்களை (ஆதித் திராவிடர்களை) அருவருப்பானேன்? வேறு அசுத்தப் பொருள்கள் (மலம், சாணி முதலியன) தம்முடல் மீது பட்டபொழு-தெல்லாம், அசுத்தம் பட்ட இடத்தை மட்டும் கழுவுகின்ற உயர்சாதி மக்கள், தீண்டப் படாதவரைத் தொட்டுவிட்டால் மட்டும் மனிதன்மீது பட்டுவிட்டதற்காக -_ உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நீரில் மூழ்கினால்தான் (அசுத்தம்) தீட்டு நீங்கும் என்று கருதுவதும், நடப்பதும் அறிவுக்குப் பொருத்தம்தானா? இன்றும் உடலில் பட்டுவிட்ட அசுத்தத்தை அகற்றாத நிலையிலேகூட, மலம் மிதித்தவரும், சாணி தெறித்தவரும், சாக்கடையில் நிற்பவரும், கக்கூசில் இருப்பவருமான, உயர்சாதி மக்கள் _ தீண்டாதாரைக் கண்டவுடனே “தூரப்போடா, எட்டி நில்லடா, ஓடித் தொலையடா” என்ற தொடர்களை அள்ளி வீசுவதைக் கண்டிருந்தும், அசுத்தம் காரணமாகவே “தீண்டாமையைக்” கற்பித்தனர் என்று தவறியும் கருதமுடியுமா?
‘அசுத்தம்’ காரணமாகவே ‘தீண்டாமை’ தோன்றியது என்பது உண்மையானால், தெருவில் வரக்கூடாது, கோவிலில் நுழையக் கூடாது, குளத்தில் இறங்கக் கூடாது, குடிதண்ணீர் பொதுக் க¤ணற்றில் எடுக்கக் கூடாது, பொதுப் பள்ளிக் கூடங்களில் ஒன்றாக உட்கார்ந்து படிக்கக் கூடாது என்றிழைக்கப்-பட்ட பலவாறான கொடுமைகளே யல்லாமல், குடைபிடிக்கக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, மேல்துணி போடக் கூடாது, முழங்காலுக்குக் கீழே இடுப்புத்துணி இறங்கக் கூடாது, என்ற உரிமையைப் பறிக்கும், வாழ்வைச் சிதைக்கும் கட்டளைகள் தோன்றுவானேன்?
தெருக்களில் _ நாய்களும், பன்றிகளும் நடமாடலாம்; கோவிலில் மாடுகள் சாணி போடலாம்; வௌவால்கள் புழுக்கை இடலாம்; கழுதைகள் சிறுநீர் கழிக்கலாம்; வீட்டில் பூனையும் கோழியும் வரலாம்; பெருச்சாளி புழுக்கையிடலாம்; குளத்தில் பறவைகளும் விலங்குகளும் தண்ணீர் குடிக்கலாம்; கிணற்றில் பறவைகள் கூடு கட்டலாம். ஆனால், இவைகளாலெல்லாம் அசுத்தப்படாத அந்த இடங்கள் ‘தீண்டப்படாதார்’ காற்றுப் பட்டாலும் அசுத்தமாகிவிடும் என்றால் நம்பமுடிகின்றதா?
குடை கிடைத்தால், மழையையோ வெய்யிலையோ மறைக்கப் பிடிப்பதில் தவறென்ன? ஒரு காலத்தில் உழவுத் தொழிலின் சிறப்பால் கொற்றக்குடை பிடித்திருந்த அந்தக் கூட்டத்தார், இன்று வெற்றுக் குடையும் பிடிக்கக் கூடாது என்று தடுக்கப் படுவானேன்? ‘தீண்டாதான்’ அணிகின்ற செருப்பு என்றைக்கோ ஒருநாள் உயர்சாதிக்காரன் தோலாக இருந்ததா? அன்றிக் கல்லிலும், முள்ளிலும், கரடுமுரடான நிலத்திலும், வயற்காட்டிலும் அந்த உழைப்பாளி மக்கள், செருப்புப் போடத் தொடங்கினால், “சில சமயங்களில் தங்களின் தடித்த உயர் சாதித் தோலும் பிய்ந்துவிட நேருமோ?” என்ற எண்ணத்தாலா?
முழங்காலுக்குக் கீழே ஆடை கட்ட வசதியும், கட்டித் திரிய நேரமும், இல்லாத அந்த மக்கள், என்றைக்கோ ஒரு நாள் கட்டினாலும் குற்றமாவானேன்? ஆடை, அசுத்தத்தை மறைக்கப் பயன்படுவது. ஆனால், அசுத்தம் மிக்கவராகக் கூறப்படும் தீண்டாதார் உடுத்திக் கொண்டால் மட்டும் கண்டனத்துக் குள்ளாவானேன்? “தீண்டாதார்” மேல்துணி போடுவதால் வரும் கேடென்ன? இன்றைய நிலையில் துணி கிடைக்காததுபோல் என்றும் கிடைக்காமல் இருந்ததால் தடுத்து வைத்தார்கள் என்று கூறமுடியுமா? அப்படியானால், மேல் சாதிக்காரரின் அடிவிழுகின்ற பொழுது அந்த அடியினால் வடியும் இரத்தத்தை மேல் துணியால் துடைத்துக்கொண்டு விடுவார்களே என்பதற்காகவா? அன்றி, உழைப்பின் மிகுதியால் கொட்டும் வியர்வையை அந்த மேல் துணியால், துடைத்துத் துடைத்து அதனால் ஓய்வு எடுத்துக்கொண்டு சோம்பேறிகளாக ஆகிவிடுவார்களே என்ற கருணையாலா? மேல் துணியில் துடைத்தெடுக்கும் வியர்வையைக் கண்ணெதிரே பிழிந்து பார்த்து, முறுக்காகிய உழைப்பு, ஈரத்துணியாகிய உடலில் ஏற ஏற, நீராகிய சுண்டிய இரத்தம், வியர்வையாகிக் கொட்டுகிறது என்பதை நேராகக் கண்டு, அந்த வியர்வையாகிய, சிந்திய இரத்தமே விளைபொருளாகி முதலாளியின் வீட்டில் நிறைந்து, அவனை வெறும் சதைப் பிண்டமாகக் கொழுக்கச் செய்யும் இரத்தமாகிறது என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டு, கொதித்தெழுந்து, அபகரித்துக்கொண்ட ஏகபோக வாழ்வைச் சுரண்டிய பொருளை, உறிஞ்சிய உழைப்பாளிகளின் இரத்தத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கிவிட்டால், இல்லை என்றாலும், இரத்தத்தையே எடுத்துக் கொள்ளத் துணிந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலா? அன்றி வேறெதனால் தீண்டாதார் மேல்துணி போடக் கூடாதென்று தடுக்கப்-படுகிறார்கள் என்பதையும், இவையெல்லாம் அசுத்தத்தாலா என்பதையும் எண்ணிப் பாருங்கள்! மற்றும் தீண்டாதார் சுத்தமாக இல்லாததற்குத்தான் காரணம் என்ன? அவர்களின் அளவு கடந்த உழைப்பும் எல்லையற்ற வறுமையும் அல்லவா? இவைகளாலல்லவா அவர்கள் பிறரைப்போல் சுத்தமாகவும், சுகமாகவும், வாழ வழியற்றுத் தவிக்கிறார்கள். அப்படித் தவிக்கச் செய்தவர்கள் யார்? தவிக்கும்படி விட்டு வைத்திருப்பவர்கள் யார்? தவிப்பதைக் கண்டும் தவிக்காத கல் நெஞ்சம் படைத்திருப்பவர்கள் யார்? தவிக்கும் மக்களுக்கு அளிக்கும் உதவியையும் தடுப்பவர்கள் யார்? அவர்கள் தவிப்பதைக் கண்டு அதுதான் அவர்களுக்கென ஆண்டவன் வகுத்த வழி என்று கூறுவோர் யார்? அதுதான் சாத்திர சம்மதமானது என்று வாதிடுவோர் யார்? இவரெல்லாம் மேல் சாதிக்காரர்களும் வைதீகர்களும், சாத்திரிகளுமேயன்றோ? இவர்களன்றோ தீண்டாதாரை அசுத்தப்-படுத்தியவர்கள்? அசுத்தமாகவே வைத்திருப்-பவர்கள்? அவர்களை அசுத்தத்தில் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக அசுத்தத்தையே காப்பாற்றி வருபவர்கள், மலக்குழியின் காவற்காரர்கள்.
தீண்டாதார் அசுத்தத்தை விரும்பவில்லை, என்பது மட்டுமல்ல. வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், சூழ்நிலை அவர்கள் அதைவிட்டு வெளியேறுவதைக் கடினமாக்கி யிருக்கிறது.
வைதீர்கள் தீண்டாதாரை ஏழைகளாகவே வைத்திருப்பதிலேயே தங்களுக்கு இலாபம் இருக்கிறது என்பதற்காக, அசுத்தத்தை விட்டு வெளியேறி விடாதபடி, தீண்டாமையைப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். எனவே, ‘தீண்டாதார்’ அசுத்தமென்ற காரணத்தால்தான் _ தீண்டாமை நிலவுகிறது என்று கருதுபவர்கள் அதற்குக் காரணம் யார் என்பதையும் குற்றவாளி யார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காட்டிய விளக்கம் போதுமானதாயிருந்தால், ‘மக்களின் மனத்தால் தீண்டப்படக் கூடாதவர் யார்? தீண்டாதாரா? வைதீகரா?’ என்பதையும் மக்களுக்குக் கூறுங்கள்.
மக்களின் மனக் கருத்து யாவும் வைதீகத்தின் நச்சுப் பற்களின் தீண்டலுக்குள்ளாகி இருக்கின்றன. எனவே, வைதீகவிடம் ஏறியுள்ள மக்கள் அனைவருக்கும் பகுத்தறிவு மருந்தை ஊட்டியாக வேண்டும். பகுத்தறிவு மூலிகை பெற்றுள்ளவர்களிடம், வைதீகவிடம் ஏறாது. பலிக்காது. அதுமட்டுமல்ல. பகுத்தறிவு மூலிகையுடையவர்கள் வைதீகப் பாம்பை எவ்வளவு வேண்டுமானாலும் நெருங்கலாம். வைதீகம் சீறும், கடிக்கும்; ஆனால் பகுத்தறிவின் வேகத்தால் அதன் விடமே நாளடைவில் கெட்டுவிடும். விடம் போய்விட்டால் வைதீகப் பாம்பு உயிர்வாழ்வ தெங்ஙனம்? எனவே, வைதீக உருவங்களைப் பகுத்தறிவு கொண்டவர்கள் தொட்டுப் பாருங்கள். தொடத் தொட வைதீகம் பறக்கும். தீண்டத் தகாது என்ற நிலையும் நீங்கும். தீண்டாமையும் மெல்லச் சாகும். தீண்டாதார்களும் மக்களாக வாழ முடியும்!
“தீண்டப்பட்டால் ‘தீட்டு’ நீங்கத் தலைமுழுக வேண்டும் என்று கருதுவதும் அப்படியே முழுகுவதும் ‘தீட்டு’ உண்மை என்பதைக் காட்டவில்லையா?” என்று சிலர் கேட்கலாம்.
கற்பிக்கப்பட்ட பொய்யான ‘தீட்டை’ மெய்போலக் காட்டுவதற்கும், நம்புதற்கும், தீண்டாமையை நிலைநாட்டுதற்கும் ‘சடங்கு’ தேவைப்படுகிறது. தீண்டடியதால், தீட்டு ஏற்படுகிறது என்றால், இன்னது செய்தால் அது நீங்குகிறது என்று ஏற்படுத்தினால்தான் தீட்டு என்ற கற்பனை ‘உண்மை’ என்று நம்பப்படும். அப்படித் தீட்டை நீக்கும் முறையாகத்தான், ‘தீண்டினால் _ தீர்த்தமாடியாக வேண்டும்’ என்று விதித்துள்ளனர். இதனால் ‘தீட்டும்’ விதித்ததாகி விடுகிறது.
அது மட்டுமின்றி _ நீரில் முழுக வேண்டும் என்ற கட்டளையால் _ தீண்டாமல் இருப்பதிலே கவனமும் வளருகிறது.
ஆனால், உண்மையிலேயே தீண்டத்தகாதவர்-களான வைதீகர்களைத் தீண்டியதற்காக, மற்றவர்கள் தீர்த்தமாடுவதில்லை. மற்ற மக்கள் அவ்வளவு மோசக்காரர்களுமல்ல, தந்திரக்காரர்-களுமல்ல, வைதீர்கள் மட்டுமே முழுகுகிறார்கள் தீண்டாமை நிலைக்க, உயர்வைக் காப்பாற்றிக் கொள்ள.
ஆனால் பகுத்தறிவு பரவிவிட்டால் வைதீகம் நீரில் முழுகிவிட்டுக் கரையில் ஏறும்போதே ‘தீண்டல்’ நடைபெறும். அப்படியாயின் வைதீகம் எப்பொழுதுமே நீரில் கிடக்க நேரிடுமே தவிர கரையிலே ஏற முடியாது. கரையேற வேண்டுமானால், வைதீக உருவத்தைக் களைந்தாக வேண்டும்; சமத்துவத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும்; பகுத்தறிவுக்குப் பணிந்தாக வேண்டும்.
வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளை தீண்டாமை, தீண்டாதாரின் தீராக பகை வைதீகம். சமுதாய வாழ்வின் _ ஒற்றுமையின் _ முன்னேற்றத்தின் _ தீராப்பகை தீண்டாமை. தீராப் பகையால் சமுதாயம் சீரழிகிறது _ மக்கள் பிளவுபடுகின்றனர். பகையும் பூசலும் வளருகிறது. சாதிக்குச் சான்று பகரும் சாத்திரங்களும், பேதம் வளர்க்கும் வேதங்களும் பிளவு வளர்க்கும் புராணங்களும் வைதீகத்தின் வாழ்விடங்களாக அமைந்து _ ‘தீண்டாமை’ நிலைக்கக் காரணமாக உள்ளன. இவைகளே சமுதாயத்தின் தீராப் பகை, பகுத்தறிவு வெற்றி பெற்றால் தீராப்பகையாம் தீண்டாமையும் வைதீகமும் வீழ்ச்சியுறும். இங்கேயும் மக்கள் ஒன்றாகக் கூடலாம். ஒற்றுமையைக் காணலாம்; கைகுலுக்கலாம்; கட்டித் தழுவலாம். எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாடலாம். பாட்டின் பொருளையும் உணரலாம், உணர்ந்ததை நேரிற்கண்டும மகிழலாம். எனவே, தீண்டாமையே நமது தீராப் பகை _ அதை வீழ்த்த வைதீகத்தை வீழ்த்துங்கள். பகுத்தறிவைப் பரப்புங்கள்!
(நன்றி-பொன்னி பொங்கல் மலர்,1948)