– நேயன்
இதற்குமுன் கருவுற்ற பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியவை எவை என்று பார்த்தோம். குழந்தை பிறந்தபின் தாய் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றை இங்குக் காணலாம்.
குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். கல்லீரல், இதயம், நுரையீரல், மூளை என அவளின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிகப்படியான வேலைகள் கொடுக்கப்பட்டு உடல் தளர்ச்சி ஆகியிருக்கும். அதை சரிசெய்ய ஒரு அருமருந்து இருக்கிறது. இது கருப்பையில் இருக்கும் பிரசவ அழுக்கு முழுமையாக நீங்க உதவி செய்யும். கர்ப்பம் ஆவதற்கு முன் கருப்பை இருந்தது போன்ற பழைய நிலைக்கு கருப்பை திரும்ப வரும். இந்த மருந்து தாய்ப்பால் சுரப்பைக் கூட்டும். தளர்ச்சியடைந்திருக்கும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். அதுதான் பிரசவ லேகியம்! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
சில மருந்துகளை வைத்து இந்த லேகியத்தை வீட்டிலேயே நாம் தயாரிக்க முடியும். இதை முறைப்படி எப்படிச் செய்வது என்று சொல்கிறார் சித்த மருத்துவர். செல்வசண்முகம். இந்த லேகியத்தைச் சாப்பிடத் தொடங்கும்முன்,
குழந்தை பிறந்த 3மணி நேரத்தில்….
நாட்டு மருந்து கடைகளில் கஸ்தூரி கிடைக்கும், இதைப் பிரசவம் ஆன 3 மணி நேரத்திற்குள் வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் கருப்பையிலுள்ள கழிவுகள் வெளியேறும்! பின்னர் சாப்பிட இருக்கும் பிரசவ லேகியத்தின் பலனும் முழுமையாகக் கிடைக்க உதவி செய்யும்.
உண்மையான கஸ்தூரி கறுப்பு மினுமினுப்பு நிறத்தில் இருக்கும். இதை எடுத்து பெருங்காயத்தில் தடவி விட்டு முகர்ந்து பார்த்தால் பெருங்காயம் வாசனை இருக்காது . கஸ்தூரி வாடைதான் வரும். சிறிது கஸ்தூரியை எடுத்துப் புதைத்து வைத்து சில நாட்கள் கழித்து எடுத்தாலும்கூட வாடை அப்படியே இருக்கும். போலி என்றால் வாடை போய்விடும். முதலில், செம்முள்ளி (காய்ந்த இலை) முருக்கு இலை, கரிசலாங்கண்ணி இலை, செருப்படை இலை, செந்தரா இலை… இந்த இலைகளின் சாறு முறையே 350 மி.லி. எடுத்துக் கொள்ளவும். சுக்கு 300 கிராம். சுக்கை தனித்தனியாக இந்த சாற்றில் ஊறப் போட வேண்டும். ஒவ்வொரு இலைச் சாறிலும் ஊறப் போடும்போது சுக்கு அந்த இலைச்சாற்றை உட்கிரத்துக் கொள்ளும். (மோரில் சுண்டக்காய் வற்றல் ஊறுவது போல) ஒவ்வொரு இலைச்சாறும் ஊறி உட்கிரகிக்க ஒரு நாள் ஆகும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையின் சாற்றைத் தயார் செய்து கொள்ளவும். இப்படிச் செய்வதற்கு பாவனம் பண்ணுவது என்று பெயர். இப்படிச் செய்த சுக்கை நிழலில் உலர்த்த வேண்டும். காய்ந்த சுக்கை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, கூகைக் கிழக்கு (ஆரோரூட் பவுடர்), கரியபோளம் (கற்றாழையை கீறிவிட்டால் பால் வரும். அதை காய வைத்து நாட்டு மருந்து கடைகளில் வைத்திருப்பார்கள்), தக்கோலம், வால் உழுவை, வாய்விடங்கம், தான்றிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி, திப்பிலி மூலம் (திப்பிலியின் காய்ந்த தண்டு) இவை அனைத்தையும் தலா 30 கிராம் எடுத்து ஒன்றிரண்டாய் பொடி செய்து இளம் வறுப்பாய் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பின், அமுக்கிரா, பொன்முசுப்பை வேர், கண்டங்கத்திரி வேர், நன்னாரி வேர், நிலப்பனைக் கிழங்கு போன்றவற்றை தலா 70 கிராம் எடுத்து வறுக்காமல் பொடி செய்து கொள்ளவும்.
பிறகு, ஒன்றரை கிலோ கருப்பட்டியை 2 லிட்டர் பசும்பாலில் சேர்த்து காய்ச்ச வேண்டும். பாகு பதத்தில் வரும்போது மேலே சொன்ன 3 நிலைகளில் கிடைத்த பொடிகளையும் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் தூவி கிளறிக் கொண்டே வர லேகிய பதத்தில் வரும். அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள். நன்றாக ஆறவைத்து சுத்தமான பாட்டிலில் அடைத்துப் பயன்படுத்துங்கள்.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
பிரசவமான 2ஆவது நாள் முதலே சாப்பிடலாம். உணவுக்கு முன் காலை, மாலை இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம். இந்த லேகியத்தை 8 மாதங்கள் வரை சாப்பிடலாம். சாப்பிடும்போது புளியைத் தவிர்த்து நாட்டுத் தக்காளி, நெல்லி, எலுமிச்சை சேர்க்கலாம். புளி, லேகியத்தின் வீரியத்தைக் குறைத்து விடும். தேவைப்பட்டால் குடம்புளி பயன்படுத்தலாம்.
இதோடு அலோபதி, சித்த மருந்துகளையும் எடுக்கலாம். பக்கவிளைவு எதுவும் வராது
இது சித்த மருந்துக் கடைகளில் சௌபாக்ய சுண்டி லேகியம் (இம்காப்ஸ்), பிரசவ நாடகாய லேகியம் என்ற பெயரால் (எஸ்.கே.எம்.) கிடைக்கிறது. இரண்டில் எது கிடைத்தாலும் சாப்பிடலாம்.
ஆண்கள் கூட இந்த லேகியத்தை சாப்பிடலாம். உணவு மாறுபாட்டால் வயிற்றில் ஏற்பட்ட மந்தத்தை, வாயுத் தொல்லையை நீக்கும். பிரசவ காலத்தில் மட்டுமில்லை… மற்ற காலங்களில் பெண்கள் இந்த லேகியத்தைச் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் மற்றும் கருப்பை தொடர்பான அனைத்துக் கோளாறு-களும் சரியாகும். இது, உடலின் ஹார்மோன் அளவை சரிசெய்து, அடுத்த குழந்தைப் பேறுக்காக கருப்பையைத் தயார்படுத்தும் ஒரு சிறந்த மருந்து.
மகப்பேறுக்குப் பின்…
மகப்பேறுக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தில் தாயை இன்னும் கனிவாய் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.
தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லாத மருத்துவர்கள் கிடையாது. குழந்தைக்குப் பாலூட்டும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைக்கும் உங்களுக்கும் தேவையான போஷாக்குக் கிடைக்க கீழ்கண்ட உணவு முறை அவசியம்.
சீரகத்தை வறுத்துப் பொடித்து சம அளவு வெல்லம் சேர்த்து வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுங்க. சில நேரங்களில் வெற்றிலை இல்லாமலும் சாப்பிடலாம்.
வெற்றிலையில் குங்குமப்பூ, பாக்கு வைத்து மென்று விழுங்கலாம். முருங்கைக் கீரை கட்டாயம் உணவில் அதிகம் இருக்க வேண்டும்.
இந்தச் சமயத்தில் பசும்பால் கூடுதலாகப் பருகுவது அவசியம்.
பூண்டை பாலில் வேகவைத்து உண்ணலாம்.
பால் பிடிக்காதவர்கள் பூண்டை ஆவியில் வேகவைத்து, வெல்லப்பாகை அதோடு கலந்து சற்று கொதிக்க வைத்து, ஆறவைத்து 5 மி.லி. வீதம் 3 வேளை பருக வேண்டும்.
பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்ப்பகங்களில் பற்றுப் போடலாம்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
பேரீச்சம்பழம் அதிகம் உண்ண வேண்டும்.
பப்பாளிக்காய் கூட்டு சாப்பிடலாம்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வரலாம். இலையை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
பிஞ்சு நூல்கோலை சமைத்துச் சாப்பிட பால் நன்றாய்ச் சுரக்கும்.
பால் பெருக்கி இலையை அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
அம்மான்பச்சரிசி இலையைக் கூட்டு வைத்து உண்ணலாம்.
பூண்டு சேர்த்த உருளைக் கிழங்குப் பொடிமாஸ், சுறாபுட்டு சாப்பிட பால் சுரப்பு கூடும்.
பால் கட்டிக்கொண்டால் செய்ய வேண்டியவை:
சில பெண்களுக்கு தாய்பால் அதிகம் சுரந்து மார்பில் தங்கி கட்டியாகி காய்ச்சல் வரும். வலி அதிகம் இருக்கும்.
இதற்கு, தேங்காய்ப் பூவை வதக்கி மார்பில் கட்டலாம்.
மல்லிகைப்பூவை மார்ப்பகத்தில் கட்ட பால் சுரப்பு 3 நாட்களில் வெகுவாய்க் குறையும்.
துவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர்விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.
இதமான மனதோடு காற்றோட்டமான அறையில் சூரிய வெளிச்சம் படும் படி இருந்து மேலே சொன்னவற்றைச் செய்தால் தாயும் சேயும் நலமும் வளமும் பெறுவர்.
வயிற்றுத் தழும்பு போக்க:
கருவுற்று வயிறு பெரிதாகி பின் கருப்பை சுருங்குவதால் வயிறும் சுருங்கி வரும் பாதிப்பு வரித்தழும்புகள். இதைப் போக்க, 8ஆம் மாதத்தில் இருந்து உளுந்து எண்ணெயை (சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்) வெதுவெதுப்பாக சூடு செய்து, தினமும் மிகவும் மென்மையாக 10 அல்லது 15 நிமிடங்கள் இடுப்பு, தொடை, பின்புறம் பகுதிகளில் இதமாக மசாஜ் செய்ய வேண்டும்.
8 மாதங்களுக்கு முன்பு வயிற்றுப் பகுதியில் அரிப்பு இருந்தாலும் உளுந்து எண்ணெயை தடவலாம். இதை உங்கள் பகுதி சித்த மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.