இவருக்குத்தான் புற்றுநோய் வரும். இன்ன பழக்கம் இருந்தால்தான் வரும் என்ற வரையறைகளை உடைத்தெறிந்து தாக்குகிறது புற்று. உலகப் புற்றுநோயாளிகளில் 40 சதவிகிதம் பேர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு.
இந்திய ஆண்கள் வாய், தொண்டை, நுரையீரல் மற்றும் இரைப்பைப் புற்றிலும், இந்தியப் பெண்கள் மார்பு, கருப்பை வாய் (Cervix) புற்றிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியப் புற்றுநோய்ப் பெருக்கத்துக்கு புகைபிடிப்பது 70 சதவிகிதக் காரணியாக இருந்தாலும், புகை மற்றும் மதுவின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காதவர்களும் இதில் சிக்குவதைப் பார்க்கையில், காரணி இன்னும் சிக்கலாக இருப்பதுபோல் தெரிகிறது.
மரபுக் காரணிகளைத் தாண்டி, சுவாசிக்கும் காற்றில் கலந்துவரும் பென்சீனிலும் டயாக்சினிலும் உண்ணும் உணவில் ஒட்டியிருக்கும் ஆர்கனோ பாஸ்பரஸ் துணுக்குகளிலும், உறிஞ்சும் பானத்தில் கலந்திருக்கும் நிறமூட்டி வேதிப் பொருட்-களிலும், உபயோகிக்கும் அழகூட்டிகளின் தாலேட்டுகளிலும், கடல் நீரில் கலந்துவிடும் அணுக்கதிர்வீச்சுத் தண்ணீரிலும் புற்றுக் காரணிகள் பொதிந்திருப்பது வெலவெலக்க வைக்கிறது. எய்தவன் எங்கோ இருக்க, வீழ்ந்து மாளும் கூட்டம் விரிந்துகொண்டே போவது மட்டுமே இதில் கூடுதல் வேதனை.
மொத்தத்தில், இந்தப் புற்று யாரைப் பிடிக்கும் என இன்னும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. அப்பா_அம்மா வழி மரபில், தன் மூத்த தலைமுறைகளில் ஒளிந்து இருக்கும் புற்றுநோய் மரபணு, வயோதிகத்திலோ வாழ்வியல் அழுத்தத்திலோ வெளிப்படுவது ஒரு காரணம். ‘இவை நிச்சயமாகப் புற்றைக் கொண்டுவரும், இவற்றால் புற்று உருவாகும் வாய்ப்பு இருக்கிறது, இவற்றைச் சந்தேகிக்கலாம்’ என மூன்று பிரிவுகளாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துச் சொல்லியிருக்கும் கேன்சர் காரணிகளின் அருகாமை இன்னொரு காரணம்… இன்றைய நகர்ப்புறத்து துரித வாழ்வியல் காரணமாகச் சிதையும் சூழலியலில், பெருகும் குப்பை உணவுகளின் மூலமாக நம் உடலில் நிகழும் வன்முறையில், புறக்காரணி-களால் மரபணு பாதிக்கப்படுவதில் (Epigenetic) அல்லது டி.என்.ஏ. மியூட்டேஷனின் விளைவாக என புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் நீள்கின்றன.
இந்தியாவின் மொத்த மரணங்களில் 6 சதவிகிதம் புற்றுநோயால் நிகழ்வது. அதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் 30_59 வயது உள்ளோர்தான் இதில் சிக்குகிறார்கள். கேன்சர் நோயாளிகளில் 90 சதவிகிதம் மக்கள் வறுமையில் உள்ளவர்கள்.
‘லான்சட்’ எனும் மிக முக்கிய மருத்துவ ஆய்வு இதழில், சமீபத்தில் இந்திய புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டு இருப்பவைதான் மேலே உள்ள புள்ளி விவரங்கள். 124 கோடி இந்தியக் கூட்டத்தில் வெறும் 18 கோடி மக்கள் மட்டுமே மருத்துவச் செலவை ஏற்க முடிந்தவர்கள். 66 கோடிக்கு மேலானோர் குடியில் கொண்டு கொட்டி, புற்றைப் பரிசாகப் பெறுகிறான்.
மதுவின் விளைவாக முதலில் வருவது ஈரல் சிரோசிஸ். அதன் மூலமாக ஈரல் புற்று. மதுவுடன் சேர்த்துப் புகைக்கும் புகையால் நுரையீரல்/தொண்டைப்புற்று. அத்துடன் சேர்த்துப் பொரித்துத் தின்னும் சிவப்பு ரசாயனம் தடவிய பிராய்லர் கோழிப் பொரியலால் இரைப்பைப் புற்று… என இந்தப் பட்டியல் நீளமானது. வருடத்துக்கு 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டும் அரசு, ஏழைகளுக்கு ‘விலையில்லா நோய்’களைப் பரிசாக அளிக்கிறது.
புற்றுநோய் பொருளாதார ரீதியாக ஒரு குடும்பதைச் சூறையாடிவிடுகிறது. எல்லா-வற்றையும் செலவழித்து கடைசியில் உயிரையும் காப்பாற்ற முடியாமல் போகும்போது, அந்தக் குடும்பத்தார் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.
எல்லா புற்றுநோய்களும் மரணத்தைத் தருகிறவை அல்ல. ஆரம்பகட்ட கணிப்பு, சில நேரங்களில் சரியான அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை, இன்னும் சில நேரங்களில் கீமோ எனும் மருத்துவ சிகிச்சைகள், சித்த, ஆயுர்வேத இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அல்லது கூட்டு சிகிச்சை போன்றவற்றால், புற்றின் வளர்ச்சியை நிறுத்துவதற்கான அல்லது தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன.
ஆனால், அறுவை சிகிச்சை, பிறகு கதிர்வீச்சு எல்லாம் மிக அதிகச் செலவு பிடிக்கக்கூடியவை. செலவைக் குறைக்க, நவீனமும் பாரம்பரியமும் ஒருங்கிணைந்த சிகிச்சையை எடுத்துக்-கொள்ளலாம்.
மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒருவர், தான் கேள்வியுற்ற சில மரபு சாத்தியங்களைத் தயங்கித் தயங்கி மருத்துவரிடம் கேட்டால், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. உயிர் பிழைக்க வேண்டும் என்றால், அடுத்த சிகிச்சைக்கு வரவேற்-பாளரிடம் தேதி வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆங்கில மருத்துவர்கள்.
தமிழ் மருத்துவத்தின் மகத்தான ஒரு பங்கை நாம் புறக்கணிக்கக் கூடாது. உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும், உறிஞ்சும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும், சுவாசிக்கும் ஒவ்வொரு துளி மூச்சிலும் புற்றுக் காரணி உள்ளது.
எனவே, இவற்றை இரசாயனமற்றதாக மாற்றி, பாரம்பரிய முறையை கடைப்பிடித்தால் புற்றை பெருமளவு தவிர்க்கலாம். ஸீ