சொன்னது சொன்னபடி

அக்டோபர் 01-15

மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்!

தமிழக மீனவர்களைத் தங்களது பாரம்பரிய பாக் சந்திப்பு பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் நோக்கில், அப்பாவியான, நிராயுதபாணியான 15 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றாக எப்போதும் விளங்கக் கூடிய கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

– ஜெ.ஜெயலலிதா, தமிழக முதல்வர்

சவாலை ஏற்கிறேன்!

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தமிழகக் காவல்துறைமீது நம்பிக்கையில்லை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை காவல் போடப்பட வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ள கருணாநிதி தயாரா என்று ஜெயலலிதா விடுத்துள்ள சவாலை நான் ஏற்கிறேன்!

– கலைஞர் மு.கருணாநிதி

மாற்றுப் பாதையில் சேதுசமுத்திரத் திட்டம் உறுதி!

மாற்றுப் பாதையில் திட்டத்தைச் செயல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அது சம்பந்தமான அறிக்கையை மத்திய அரசு தீவிரமாக ஆராய்கிறது. நீதிமன்றம் அளித்துள்ள ஆலோசனையையும் கருத்தில்கொண்டு, மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.

– நிதின் கட்கரி, மத்திய அமைச்சர்

ரிஷிகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் பணிவுடன் வாழ்வதே கற்றுத் தேர்ந்த ஒருவரின் முக்கியப் பண்பாகும். விஞ்ஞானிகளும் அத்தகைய குணத்தைக் கொண்டிருப்பது அவசியம். ரிஷிகள் பொறாமை, கோபம் ஆகியவற்றை வென்று பணிவுடன் வாழ்ந்தவர்கள். அவர்களிடம் இப்பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள்.

– மனோகர் பரிக்கர், மத்திய அமைச்சர்

பாடப்பகுதி திரும்பப் பெறப்படும்

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பெண்கள் வேலைக்குச் செல்வதே காரணம் என்று இருப்பதை திரும்பப் பெற சத்தீஷ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிப் பாடங்கள் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படும்.
– கேதார் காஷ்யப், கல்வி அமைச்சர், சத்தீஷ்கர்

கட்சிச் சின்னம் வேண்டாம்!

கல்வி அறிவு இல்லாதவர்-களுக்காக வாக்குச் சீட்டில் சின்னம் அச்சிடப்பட்டது. கட்சிச் சின்னங்கள் தற்போது தேவையில்லை. கட்சிச் சின்னங்களை நீக்குவது தேர்தலை நியாயமாக நடத்த உதவும். நாட்டு மக்களின் நலன் கருதி இத்தேர்தல் சீர்திருத்தத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும். இதற்காகப் பிரச்சாரம் செய்யவுள்ளேன்.
– அண்ணா ஹசாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *