அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு விதை, பாலகுருவின் 15 வயதில் முளைத்தது. அந்தக் கனவை மனதிலேயே தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தார். ஆனால், ஒன்றிரண்டு வருடங்களிலேயே முதல் தடை, மலை போல் எதிரே வந்து நின்றது. கூரை வீட்டில் வாழ்ந்த பாலகுருவின் படிப்பு பள்ளிக் கல்வியோடு நிறுத்தப்பட்டது. தினக் கூலி வேலை பார்த்த அவரது தந்தையால் அதற்கு மேல் பாலகுருவை படிக்க வைக்க முடியவில்லை. கல்லூரி வாழ்க்கை தொடங்காமலேயே கனவு வாடத் தொடங்கியது.
கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் கனவு நனவாவது சாத்தியம்தான் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் பாலகுரு. என்னிடம் இருந்தது கனவு மட்டுமே. என்னை உயர்த்தியதும் அதுவே எனச் சொல்லும் பாலகுரு, தனது கனவை மட்டுமே முதலீடாக்கி, இன்று அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். விரைவில் அய்.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் பாலகுருவின் வெற்றிக்கதை மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு பாடம்.
அவர் கூறுகையில்,
நான் பள்ளியில் படித்த -நாட்களில், எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் அளவிற்குப் பணம் கிடையாது. அதனால், என் வீட்டுப் பக்கத்தில் இருந்த முடி வெட்டும் கடைக்குச் சென்று படித்தேன். அந்தப் பழக்கம் விடாமல் தொடர்ந்தது. இரவு தூங்கும் நேரத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் கேள்வி – பதில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி வாசிப்பைக் கேட்பேன்.
அக்காலங்களில், நாட்டு நடப்புகளை நுனி விரலில் வைத்திருக்கிறாயே! என்று பள்ளி ஆசிரியர்கள் என்னைப் பாராட்டுவார்கள். நான் 8-ஆம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியை என்னைத் தமிழ்நாடு கிராமப்புற மாணவர் திறமை தேடல் தேர்வை எழுதச் சொன்னார். அதில் தேர்ச்சி பெற்றேன். அதனால், வருடத்திற்கு 1,000 ரூபாய் அரசாங்கப் பண உதவி கிடைத்தது. அந்தப் பணத்தால்தான் எனது பள்ளிப் படிப்பு சாத்தியமானது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பை முடித்து, கல்லூரி செல்ல குடும்ப வறுமை மற்றும் அக்கா திருமணம் தடையாக வந்தது என நினைவுகளில் மூழ்குகிறார் பாலகுரு.
ஆனால், மனம் தளராத பாலகுரு. அப்பாவால்தானே படிக்க வைக்க முடியவில்லை. தானே சம்பாதித்துப் படித்தால் என்ன என சிந்தித்தார். சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் தவணை முறையில் வீட்டுப் பொருட்களை வண்டியில் சென்று விற்கும் வேலை பார்க்கத் தொடங்கினார். முதலாளி இவரது தூரத்துச் சொந்தம் என்பதால் அருகில் வைத்து அரவணைத்துக் கொண்டார்.
உணவுக்குப் பிரச்சினையில்லை என்பதால் சம்பளப் பணத்தை வாங்கவில்லை. அது முதலாளியிடம் சேமிப்பாக வளர்ந்தது. இன்னொரு பக்கம், நாள் முழுவதும் உழைப்பு என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஆனாலும், உழைப்புக்கு நடுவே நேரம் கிடைக்கும் போதெல்லாம், அருகில் இருக்கும் அரசாங்க நூலகங்களைத் தேடிச் சென்று படித்து, தனது கனவை வாடாமல் பார்த்துக் கொண்டார்.
மேலும் அவர் தன் முயற்சிகளை விவரிக்கையில்,
வண்டியில் பொருட்கள் விற்ற நாட்களில் எப்போது, எங்கே இருப்பேன் எனத் திட்டமிட முடியாது. எனவே, எங்கே சென்றாலும் அதன் பக்கத்தில் அரசு நூலகம் எங்குள்ளது எனக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். இப்படி தினமும் நூலகம் சென்று செய்தித்தாள் வாசித்து விடுவேன். அப்படித்தான் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்படுத்திக் கொண்டேன். ஆனால், இது போதாது; சென்னைக்குச் சென்றால்தான் என்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள முடியும் எனத் தோன்றியது. வேலையை விட்டுவிட்டுச் சென்னை வர முடிவெடுத்தேன். என் முதலாளி, அதுவரைக்குமான என் சம்பளமாக 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். சென்னை வந்து தபால் முறைக் கல்வியில் பி.ஏ. வரலாறு சேர்ந்தேன்.
சென்னையில் தொடக்கத்தில் ஒரு நண்பனுடன் தங்கியிருந்தேன். ஆனால், அவனுடன் இருந்த மற்றவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை உணர்ந்து 600 ரூபாய் வாடகை கொடுத்து வெளியே தங்கினேன். அப்போது, பில்ரோத் மருத்துவமனையில் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் பார்த்து, அந்த வேலையில் சேர்ந்தேன். அங்கே உணவும் தங்கும் இடமும் கொடுத்ததால் எனக்கும் ஏற்ற இடமாக இருந்தது.
இரவுப் பணி என்பதால் பகலில் நூலகங்கள் சென்றுவிடுவேன். இதற்கு இணையாக ஆங்கில மொழி மற்றும் கணினிப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று கொண்டிருந்தேன். சிறிது நாட்களுக்குப் பிறகு பில்ரோத் மருத்துவமனையின் மெடிக்கல் கடையில் உதவிப் பணியாளர் பணிக்கு என்னை மாற்றினார்கள். எனவே, சம்பளமும் கொஞ்சம் கூடியது. ஆனால், தங்கும் இடம் பறிபோனது. மீண்டும் 600 ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையில் தங்கினேன் என்றார். தனது லட்சியப் பயணத்தில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை இதன்மூலம் உணர முடிந்தது.
2011_ஆம் ஆண்டு தனது பி.ஏ., வரலாறு படிப்பை முடித்த பாலகுரு, முதல்முறையாக யுபிஎஸ்சி தேர்வை 2011_ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். முதல் முயற்சியில் தோல்வியடைந்தார். ஆனால், அது சில பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்த அனுபவங்களுடன் மீண்டும் தயாராகத் தொடங்கினார். இரண்டாம் முறையும் பிஎஸ்சி தேர்வை எழுதியபோது ரெப்கோ வங்கியில் எழுத்தர் பணி கிடைத்தது. சம்பளம்: மாதம் 15 ஆயிரம் ரூபாய். அன்று பாலகுரு இருந்த நிலைக்கு இது பெரிய தொகைதான். ஆனால், அந்த வேலையில் சேர்ந்தால் தனது அய்.ஏ.எஸ் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால், அந்த வேலையை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து அய்ஏஎஸ் தேர்வுகள் எழுதிக்கொண்டே இருந்தார். மூன்று தோல்விகளுக்குப் பிறகு நான்காவது முயற்சியில் தனது கனவை எட்டிப் பிடித்தார் பாலகுரு.
தற்போது வெற்றிவாகை சூடியுள்ள பாலகுரு, அய்.ஏ.எஸ் தகுதிக்கான பயிற்சிக்காக முசோரி செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறார். விரைவில் அய்.ஏ.எஸ் அதிகாரியாக பாலகுரு அவர்களை நாம் காணலாம்.