பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மீதான தூக்குத் தண்டனை ரத்து:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானது – நியாயமானது – வரவேற்கத்தக்கதே!
சரியான சட்ட ஆலோசனைகளோடு விடுதலை செய்க!
முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பு சரியானதே என்று, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று (29.7.2015) காலை தீர்ப்பு அளித்தது வரவேற்கத் தக்கது என்றும், சரியாக சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு, பேரறிவாளன் உள்ளிட்டோரை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் 3 தமிழரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப் பட்டது சரியானதே என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்குவர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி சிறீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த உச்சநீதிமன்றம், மூவரின் தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களின் கருணை மனுக்கள் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழக ஆளுநரால் நிரா கரிக்கப்பட்டது. ஆனால் 2000ஆம் ஆண்டு சோனியா காந்தி வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனையை குறைக்க கோரி கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
தூக்குத் தண்டனை ரத்து!
இந்த கருணை மனுவை 11 ஆண்டுகாலம் கழித்து, குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதனையடுத்து 3 பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தது. கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் குடியரசு தலைவரால் கிடப்பில் போடப் பட்டதைக் காரணம் காட்டி தூக்குத் தண்டனை விதிக் கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை உச்சநீதிமன் றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதியன்று பேரறிவாளன் உட்பட 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை யாக மாற்றி உத்தரவிடப்பட்டது.
மத்திய அரசு மேல்முறையீடு!
மேலும் இந்த மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந் திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபை யில் தீர்மானம் மூலமாக அறிவித்தார். ஆனால், தமிழக அரசின் இந்த முடிவுக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது.
மத்திய அரசின் இந்த மனு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யக் கூடாது என்ற மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்தது. பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த விசாரணையை நடத்தி வந்தது. இந்த நிலையில் திடீரென மத்திய அரசு மீண்டும் ஒரு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், ராஜீவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு ரத்து செய்யப்பட்ட தீர்ப்பை திருத்தம் செய்யக் கோரப் பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று கூறி தூக்கு தண்டனை ரத்தை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கத்தக்க – சரியான தீர்ப்பே!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகி யோரது மரண தண்டனை ரத்து என்பது ஏற்கத்தக்கதே – சரியானதுதான் என்று இன்று காலை (29.7.2015) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகுந்த நியாயபூர்வ மான சட்டத்தீர்ப்பு மட்டுமல்ல; வரலாறு படைத்த மனிதாபிமானம் மிக்க தீர்ப்பும் ஆகும்.
நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரி தியாகராஜன் கூறியது என்ன?
பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி தியாகராஜனின், வாக்குமூலம் என்ன சொல்லுகிறது? பேரறிவாளன் கூறிய வாக்குமூலத்தை நான் சில வாக்கியங்களை விட்டு விட்டுத்தான் பதிவு செய்தேன் என்று தெரிவித்தாரே, அது ஊடகங்களிலும் வெளிவந்ததே – தனது மனச் சாட்சி உறுத்துதலைத் தெளிவாக்கினாரே!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வில் தலைமை வகித்த நீதிபதி கே.டி.தாமஸ், ஆயுள் தண்டனைக் காலத்தைவிட, அதிக சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உட்பட்டோர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கருத்து கூறியுள்ளதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் (24.2.2013).
செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா?
ராஜீவ் காந்தி கொலையை நாம் யாரும் நியாயப் படுத்துகிறவர்களோ அல்லர்.
ஆனால், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டு, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்ற பழமொழிக்கேற்ப, நடைமுறைகள் அமைந்து, ஏறத்தாழ கால்நூற்றாண்டுக்கு மேல் சிறையில் – அதுவும் இளமையைப் பலியிட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டியதே நியாயபூர்வமான மனிதநேயக் கடமையாகும்.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்!
தக்க சட்ட ஆலோசனைகளை சரியாக மேற் கொண்டு, உரிய நடைமுறைகளோடு, அவர்களின் விடுதலையை தமிழ்நாடு அரசு செய்யவேண்டுமென்று முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள மனிதநேய உணர்வாளர்கள், மனித உரிமைப் போராளிகள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
29.7.2015