அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.
அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.
இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.
பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.
கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.