மெட்ராஸ் : பாராட்டுக்குரிய இயக்குனர் ரஞ்சித்

சினிமா

மெட்ராஸ்..

நகரத்து சேரிகளுக்கும் கிராமத்து சேரிகளுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. நகரங்களில் ஒப்பீட்டளவில் பணப்புழக்கம் அதிகம். ஆண்டைகள் வெவ்வேறு விதமான முகமூடிகளோடு திரிவார்கள். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதில் மாற்றமில்லை. வடசென்னை மக்களை தலித், தலித் அல்லாதோர் என பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரம் இருக்கிறது.

பர்மாவில் இருந்து அகதிகள் வந்தபோது வியாசர்பாடியில் அவர்களுக்கென தமிழ அரசு இடம் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது. அத்தோ போன்ற பர்மா உணவு வகைகள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதன் மூலம் இதை சென்னைவாசிகள் அறியலாம்.

 

மெட்ராஸ் திரைப்படத்தில் என்ன தலித் அரசியல் இருக்கிறதென்ற கேள்விகளோடு பல விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தபோது யோசித்ததில் மேலே சொன்ன விஷயங்களோடு இன்னும் பல தோன்றின

படம் தொடங்கியதுமே அன்பு பேசும் வசனங்களிலும்,voice overலும் இது யாரைப் பற்றிய, யாருக்கான படமென தெளிவாக சொல்லிவிடுகிறார்கள்.முக்கியமாக, எந்த குறியீடுகளுமின்றி. அதிலென்ன சிரமம் என புரியவில்லை. “ஊர்ல யார் கொலையானாலும் போலீஸ் எங்க ஹவுஸிங் போர்டு ஆளுங்களதான் புடிச்சுட்டு போகும்” என்கிறார். இந்த ஒரு வரியை வைத்து புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் மெட்ராஸ் மற்றுமோர் பழி வாங்கும் படம் என்றளவில் மட்டுமே உள்வாங்கி கொள்ளலாம். பிற்பாடு சமூக நீதி குறித்த பதிவுகளை மட்டுமாவது எழுதாமல் இருந்தால் போதும். ஆனால் சமூக நீதி காவலர்களாக காட்டிக்கொள்ளும் சிலரும் கூட மெட்ராஸ் பேசும் முக்கிய விஷயத்தை அலசாமல்(அல்லது இன்னும் விரிவாக) விடும்போதுதான் வெறுப்பாகிறது.

அன்பு என்பவன் அரசியல் அதிகாரம் ஒன்றுதான் தன் மக்களின் விடியல் என தீவிரமாக நம்புகிறான். ஆனால் கல்வியறிவு அந்த மக்கள் எல்லோரையும் அதற்கு தயாராக்கும் என்பதை அறியாத கோபக்காரனாக இருக்கிறான். இதை இன்னும் எளிமையாக பதிவு செய்ய தன் மகன் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கட்சிக்காக செலவு பண்ணியதாக ஒரு காட்சி வைக்கிறார் இயக்குனர்.

காளி சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். நல்ல வேலை. அதனால் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சராசரி இளைஞன். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் அன்பும் காளியும் பேசும் வசனங்கள் ஒரு திரைப்படமாக தேவையற்ற இடைச்செருகலாக தெரியலாம். ஆனால் படித்த ஒரு இளைஞனின் அறிவும் அதே சமயம் மற்றவர்களை பற்றிய அலட்சியமும், அன்புவின் வேகமும் கோபமும் மிகச்சரியாக பதிவு செய்யப்படுகிறது. இம்மக்களுக்கு தேவை அன்புவும், காளியும் இணைந்த ஒரு கலவை என்பதை அழுத்தமாக சொல்லும் காட்சி அது.

மாரி ஒரு சுயநல அரசியல்வாதி. அவன் அப்பா காலத்தில் இருந்தே அதிகாரம் அவர்கள் கைகளில். இவர்கள் எப்படி தன் சொந்த மக்களையே பயன்படுத்தி குளிர்காய்கிறார்கள் என்பதும் வெளிப்படையாகவே சொல்லப்படுகிறது.

இன்னும் இருக்கும் கண்ணன், விஜி, அன்புவின் மனைவி மேரி என எல்லோரை பற்றியும் முதல் பார்வையிலே எந்த சிரமமுமின்றி புரிந்துக் கொள்ள கூடிய வகையில் திரைக்கதையும், வசன்ங்களும் அமைந்திருக்கின்றன. அதில் சிக்கல் என்றால் பிரச்சினை மெட்ராஸில் இல்லை. நாம் நம் சமூகத்தை புரிந்துக் கொண்ட லட்சணத்தில் இருக்கிறது என்பது என் துணிபு.

கலையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கையாள்வார்கள். பணம் சம்பாதிக்க, பொழுதுபோக்காய், தன்னிறைவுக்காக,வரலாறாக்க, இப்படி.. சிலர் அதை தான் நம்பும் புரட்சிக்கு தூண்டுகோலாய் பயன்படுத்துவார்கள். பாரதியை போல, பாப் மார்லியை போல. ரஞ்சித் அப்படிப்பட்ட ஒருவர். அட்டைக்கத்தியின் வணீக வெற்றியை மீறி ஒரு நல்ல படம் என்ற பெயர் கிடைத்ததும் அவருக்கு முன்னணி நாயகனின் படம் கிடைக்கிறது. நல்ல கதையும் வைத்திருக்கிறார். இரண்டாம் பாதியை அன்புவுக்காக காளி பழி வாங்க புறப்படுவதாய் திரைக்கதை அமைத்து, இறுதியில் அந்த சுவற்றில் அன்பு படத்தை வரைவது போல் மாற்றியிருந்தால் அன்பு பாத்திரத்தில் நடிக்க எந்த நடிகராய் இருந்தாலும் சம்மதித்து இருப்பார்கள். இன்னொரு நாயகன் சேரும்போது 20 கோடியில் கூட படமெடுக்கலாம். ஆனால் ரஞ்சித் தன் நோக்கத்தில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

ஜே.பி.சாணக்யாவை உடன்வைத்துக் கொள்கிறார். பாடல்களை அந்த மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்களை எழுத வைக்கிறார். சுவரை அரசியல் அதிகாரமாக்கி, அதில் முடிவில் இரட்டைமலை சீனிவாசனார் சொன்ன கல்வி பற்றொய வாசகத்தை எழுதி கல்வி விழுப்புணர்வோடு கூடிய அரசியல் அதிகாரமே நம் விடுதலைக்கான தீர்வு என்று தான் நம்பும் அரசியலை தீர்க்கமாக முன் வைக்கிறார்.

தமிழ்சினிமாவின் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் சினிமாவை தன் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திய இதை போன்ற ஒரு கலைஞனையாவது நாம் பார்த்திருக்கிறோமா?? எம்ஜிஆரை சொல்லி விடாதீர்கள். காலம் வேட்டைப்புலியை போன்றது என்ற வரி நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் படைப்பாளியை விட வாசகனின் பங்கு அதிகமாய் இருக்கிறது. தேவர் மகன் புள்ளைக்குட்டிகளை படிக்க வைக்க சொல்லி எடுக்கப்பட்டதாய் சொன்னாலும், அதில் நிலைப்பெற்றது போற்றி பாடடி பொண்ணேதான். இன்னமும் காது குத்து நிகழ்வில் இருந்து எல்லாவற்றிலும் தேவர் காலடி மண்ணேதான். இளையராஜா என்ற மகத்தான கலைஞனை நான் நிராகரிக்க இந்த ஒன்று எனக்கு போதுமானதாய் இருக்கிறது. சென்ற வருடம் வாணி மகாலில் இளையராஜாவும் தியாகராஜரும் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இன்னும் சில நிகழ்ச்சிகள். விஷயம் இதுதான். எதிர்காலத்தில் ராஜாவை பார்ப்பணாராக்கி விடுவார்கள். இளையராஜா அதற்கு எப்போதோ தயாராகிவிட்டார். ஆலமரம் பற்றிய கட்டுரையில் ஏன் பசுமாடு என கோவப்படாதீர்கள். ரஞ்சித்தின் அருமையை சொல்ல வேண்டியிருக்கிறது. இரண்டு படங்கள் என்பது போதுமான காலம் இல்லைதான். ஆனால் ரஞ்சித் எப்போதும் தடமாற மாட்டார் என்பதை அடித்து சொல்லும் படம்தான் மெட்ராஸ்.

மேலே சொன்ன விஷயங்கள் தாண்டி குறியீடாய் சில விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். தலித்தீயத்தின் நீல நிற வண்ணம் படம் நெடுகிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. காளியின் கால்பந்து அணி நிறம், இறுதியில் சுவரில் ஊற்றப்படும் பெயிண்ட்டின் நிறம், காலீயின் வீட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்காரில் நூல்கள், இன்னும் பல. இவையெல்லாம் இல்லாமலும் இது பேசும் விஷயம் நன்றாக புரிகிறது.

மதயானைக்கூட்டம் போன்று ஆதிக்கசாதி ஆவணப்படங்கள் சீரிய கால இடைவெளியில் வெளிவருவதை கவனிக்கலாம். சுந்தரபாண்டியனில் அமைந்த அந்த இமேஜை வைத்து தேவர் அல்லாத சசிகுமார் கூட அங்கே இடம் பிடிக்கிறார். இந்த மாதிரியான படங்கள் அந்த இன இளவட்டங்களை குறி வைத்து தற்பெருமை அடைவதற்காக மட்டுமே பயன்படுகின்றன. மதயானைக்கூட்டம் வெளிவந்த போது “அவங்கள பத்தி அவங்களே சொல்றாங்க.. இன்னொரு சாதியையா இழுத்தாங்க” என சாயம் வெளுத்ததை கூட அறியாமல் இணையத்தில் பேசிய சிலரை பார்த்து தெரிந்துக்கொண்டேன். ஆனால் மெட்ராஸை அந்த பட்டியலில் சேர்க்க முடியாது. கூடாது.

நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு மனிதனாக கூட வாழ விடாத ஒரு சமூகம் மெள்ள எழுச்சி பெற்றி எல்லா துறைகளிலும் கால்பதிக்கும் போது ஆண்டைகளுக்கு பற்றிக் கொண்டு தான் வரும். அதற்கு சமநிலை கிடைக்கும் வகையில் இணையத்தில் நாம்தான் மெட்ராஸை கொண்டாடியும்,அது குறித்து பேசியும் எழுதியும் ஆதரவு தர வேண்டும். அதை விடுத்து தலித் விடுதலை ஆதரவு நபர்களே மெட்ராஸை ஒரு திரைப்படமாக மட்டுமே அணுகி “வேகம் குறைவு.. செகண்ட் ஹாஃப் போர்” என்ற ரீதியில் எழுதுவது ரஞ்சித்திற்கு நாம் செய்யும் துரோகம்.

ஜானி பாத்திரம் குறித்து பேச எனக்கு ஒன்றுமில்லை. ரொனால்டோ போல அது இன்னொரு பதிவு. ஜானிக்கள் என் உயிர்த்தோழனிலே இருக்கிறார். மெட்ராஸ் பற்றி பேசும்போது புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் பற்றியெல்லாம் பேசினார்கள். எனக்கு என் உயிர்த்தோழன் மட்டுமே இணையான படமாக தோன்றியது. பாபு அளவிற்கு கார்த்தியோ, அன்புவாக நடித்தவரோ நடிக்கவில்லை என தோன்றியது.

மெட்ராஸ் – ஒரு தனிமனிதனின் போராட்டம்.. ரஞ்சித்திற்கு என் அளவில்லா அன்பும் முத்தங்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *