கேள்வி : மோடி – பா.ஜ.க.வின் 100 நாள் மத்திய ஆட்சி பற்றி தங்களது மதிப்பீடு?
_ நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்.
பதில் : மோடியின் 100 நாள் மத்திய ஆட்சி _ வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றம் என்பது உத்தரகாண்ட் இடைத்தேர்தல், மற்றும் உ.பி., பீகார்_கர்நாடகா முதலிய பல மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மூலமே சுவரெழுத்து.
குறிப்பாக விலைவாசி கட்டுப்படுத்தப்படாதது, 107 சதவிகிதம் பஞ்சப்படி அதிகரிப்பு, வேலைவாய்ப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏதும் இல்லை;
கேள்வி : விவசாயிகள் மகிழ்வடையும் நிலை இல்லையே! தமிழகத் தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்டுள்ளதாகத் தெரியவில்லையே? – ம.சிவகுமாரன், வேளச்சேரி
பதில் : தமிழகத் தேர்தல் ஆணையம் அரசின் விருப்பத்தினை நிறைவேற்றிடும் கருவியாகவே செயல்பட்டது என்பது பரவலான குற்றச்சாற்று ஆகும்.
கேள்வி : விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததில் இந்தியா முக்கியப் பங்கு வகித்ததை இலங்கை அரசு ஒருபோதும் மறக்காது என இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளாரே? – வி.தங்கமணி, திருமங்கலம்
பதில் : உண்மையைச் சொல்லியுள்ளார்; அத்துடன் முந்தைய அரசும், இன்றைய அரசும் இராஜபக்சேவுடன் எப்படி இணைந்து சிந்திக்கின்றனர் என்பது புரிகிறதா?
கேள்வி : தற்போதைய நாகரிக மனிதர்கள் அருகில் உள்ள தெருவிற்கு வாகனத்தில் செல்கின்றனர். ஆனால் பல மைல்கள் தொலைவில் உள்ள கோவில்களுக்கு பாத யாத்திரை என்ற பேரில் நடந்தே செல்கின்றனரே? – இயற்கைதாசன், கொட்டாகுளம்
பதில் : முந்தையதில் காலத்தின் அருமை போலும், பிந்தையதில் பக்தியின் பெருமை போலும், எல்லாம் வேடிக்கை! விசித்திரம்!
கேள்வி : ஆசிரியர் நாள்தான் குரு உத்சவ் ஆகி ஆணை வந்தது என்பதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மயமாக்கப்பட்ட ஆட்சி என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படாதா?
_ சே.அமுது, ஊற்றங்கரை
பதில் : கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?
கேள்வி : தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் தடம் பதித்த தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற எப்படி தைரியம் வந்தது?
_க.அருண், திருச்சி
பதில் : காங்கிரஸ் ஆட்சியின் அவலம் காரணமாக பா.ஜ.க. இந்தியாவின் இதர பகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. _ தமிழ்நாட்டில் அது வெற்றிபெறாத நிலை _ கூட்டணி அமைத்தும்கூட. அதனால் நம்பிக்கை இழக்க வேண்டாம்!
கேள்வி : ஈருடலும் ஓருயிருமாய் இருந்த எனது பெயருடைய 55 ஆண்டுகால இனிய நண்பனின் மறைவும், அவன் மறைந்த மூன்று திங்களுக்குள் 43 வயதுடைய என்னைக் காக்க வேண்டிய மூத்த மகளின் மறைவும், இழந்து ஓராண்டுக்கு மேலாகியும்கூட, அந்தத் துயரத்திலிருந்து இன்றுவரை என்னால் மீள முடியவில்லையே, அது ஏன்? முடிந்தால் உங்கள் வாசகன் இதிலிருந்து மீள ஒரு வழி கூறுங்களேன்? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : உங்கள் நண்பர்கள் _ நெருக்கமாக உள்ளவர்களிடம்
1. மனந்திறந்து பேசுங்கள்.
2. தொண்டுப் பணிகளில் _ பொதுப்பணிகளில் மும்முரமாக ஈடுபாடு கொள்ளுங்கள்.
3. நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.
4. பயணங்களை மேற் கொள்ளுங்கள்.
கேள்வி : கடவுள் நம்பிக்கையின் பெயரால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருள்களை வீணாக்குவது மனித குலத்திற்குச் செய்யும் கேடில்லையா? – பா.தீனா, அரியலூர்
பதில் : ஆம். பாலாபிஷேகம் மற்றும் நந்திக்குப் பழம் முதலிய பலவற்றை வீணாக்குதல் போன்றவைகளைத் தடுக்க சட்டம் மூலம் தடை செய்ய வேண்டும். சமூகச் சிந்தனை இல்லையே, என் செய்வது?
கேள்வி : தமிழகம் முழுதும் உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க.வினர் அதிக அளவில் சோரம் போவது பற்றி? -ந.சாந்தி, திருச்செந்தூர்
பதில் : வைட்டமின் ’ப’வின் சக்தியும், கொள்கைக்காக அவர்கள் பா.ஜ.க.வில் சேரவில்லை. எனவேதான் சோரம் என்பது அவர்களுக்கு அல்வா மாதிரி ஆகிவிட்டது போலும்!
கேள்வி : பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மிக மோசமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது குறித்து? – தில்லை சிகாமணி, கோவிந்தகுடி
பதில் : நூறாண்டு பேசும் அரிய சாதனை படைக்கும் ஆட்சியின் அடையாளம் போலும். மகா வெட்கக்கேடு.
கேள்வி : உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க.வுக்கும் நடக்கும் போட்டி என்பதே அரசியல் நாடகம் என கூறலாமா? – அ.குமார், தாம்பரம்
பதில் : இதற்கு பொறுத்திருந்துதான் பதில்கூற முடியும் _ எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகள் அரங்கேறும் வரை காத்திருக்கலாம்.
கேள்வி : நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பா.ஜ.க. சமீபத்தில் நடைபெற்ற உ.பி. தேர்தல்களில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்திக்கக் காரணம் என்ன? – கோ.ஸ்டாலின், திண்டுக்கல்
பதில் : மக்கள் மோடியிடம் இல்லாத சரக்கு இருப்பதாக எண்ணி ஏமாந்ததினால்தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இவரது ஆட்சி பழைய கள் _ புது மொந்தையாக இருக்கிறதே என்ற மக்களின் எரிச்சல் உணர்வு.
கேள்வி : சங்கரா சங்கரா என்றால் சட்டமும் வளைந்து கொடுக்கிறதே?
_ம.அசோக்குமார், சைதாப்பேட்டை
பதில் : சட்டம் சங்கரரிடம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துண்டே இருக்கு. தெரியாதோ நோக்கு?
கேள்வி : புத்தியில் பிள்ளையாரைப் போட்டு உடைச்சதுக்கும், பக்தியில் பிள்ளையாரைப் போட்டு உடைப்பதற்கும் (பிள்ளையார் தினத்தில்) உள்ள மாறுபாடு என்ன? – இ.பார்த்தசாரதி, வேலூர்
பதில் : அறிவுத் தேடலுக்கும், அநியாய அறியாமை மூடநம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு! புரிகிறதா?
கேள்வி : செய்யும் தொழிலே தெய்வம் என்றால் மலம் அள்ளுபவனுக்கு எது தெய்வம்?
– சின்ன வெங்காயம், சென்னை-_78
பதில் : இது என்ன கேள்வி _ மலம் என்றால் கேவலமா? மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் _ சிறீமுஷ்ணம் கோவிலில் பூவராகவ சாமியாக உள்ள அந்தக் கடவுளின் உணவு ஆயிற்றே அது!
கேள்வி : பெரியார் 136ஆவது பிறந்த நாள் நினைவாக பொதிகை தொலைக்காட்சி (செப்.17) சிறப்புப் பட்டிமன்றம் நடத்தி மகிழ்ந்தது. ஆனால், ஏதேதோ நாட்களில், ஏதேதோ தலைப்பில், பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தும் ஒருசில தொலைக்காட்சிகள் தந்தை பெரியாரின் நினைவாக, பேரறிஞர் அண்ணாவின் நினைவாக பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தாதது ஏன்? ஏன்? ஏன்? – க.குணசேகரன், எருக்கஞ்சேரி
பதில் : பெரியார் _ அண்ணா கண்ட கட்சி _ ஆட்சியினால் _ பலன் பெறுவதுதானே -_ பிசினஸ் சேனல்களின் குறிக்கோள். பெரியார் ஊட்டிய மான உணர்வு இல்லையென்றால் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்ற எண்ணம் இல்லையே! அந்த மகா கோடீசுவர பிரபுக்களுக்கு.
கேள்வி : ஏழை மக்கள் மரணமடைந்தால் மத்திய அரசு உருவாக்கியுள்ள இழப்புக் காப்பீட்டுத் தொகையானது விபத்தில் மரணமடைந்தோருக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக இயற்கையில் மரணமடைந்தாலும் வழங்கப்பட்டால் பெரும்பயன் தருமே?
_பெ.கூத்தன், சிங்கிபுரம்
பதில் : வசதியற்ற வாழ்வு வாழும் அனாதைகள் ஆக உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். பொதுவாக மரணம் அடைந்தவர்களுக்கு எல்லாம் வழங்கினால் அது அசல் கேலிக்கூத்தாகி விடும்.