வாழ்வைக் கெடுத்த ஜாதகம்!

அக்டோபர் 01-15

எனது கட்சிக்காரர் (Client) அவர்களுக்கு சுமார் 65,70 வயதிருக்கும். அவரின் ஒரே மகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பெண்ணின் ஜாதகத்தையும் பையனின் ஜாதகத்தையும், வயதும் அனுபவமிக்கவரும் கைராசிக்காரருமான ஜாதகக்காரரிடம் கொடுத்து ஜாதகத்தைக் கணிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். ஜாதகக்காரரும் இருவரின் ஜாதகத்தையும் பார்த்து பஞ்சாங்கங்களையும் புரட்டி கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு இருவர் ஜாதகமும் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அனைத்துப் பொருத்தங்களும் இருப்பதனாலும் இருவருக்கும் ஆயுள் மிக கெட்டியாக இருப்பதாலும் திருமணம் செய்யலாம் என்று நல்வாக்குக் கொடுத்துவிட்டார். ஜாதகக்காரரின் பேச்சை நம்பி பெண்ணின் தகப்பனார் ஏராளமாக செலவு செய்து பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான 6, 7 மாதங்கழித்து மாப்பிள்ளை தனியாக அடிக்கடி ஒரு புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்து ரகசியமாக சிகிச்சைப் பெற்றுள்ளார். ஒரு நாள் பெண்ணின் தகப்பனார் சந்தேகப்பட்டு, மாப்பிள்ளையைப் பின்தொடர்ந்து சென்றபோது மாப்பிள்ளை புற்றுநோய் மருத்துவரைச் சந்தித்தது தெரியவந்தது. மாப்பிள்ளை வெளியில் வந்த பிறகு, பெண்ணின் தகப்பனார் அந்த டாக்டரை விசாரித்தபோது, அவருடைய மாப்பிள்ளைக்கு இரத்தப் புற்றுநோய் (Blood Cancer)  இருப்பதாகவும், தான் அவருக்குச் சில ஆண்டுகளாக வைத்தியம் பார்ப்பதாகவும், அவருக்குத் திருமணமான விவரம் தனக்குத் தெரியாது என்றும் அவர் திருமணமே செய்திருக்கக் கூடாது என்றும் கூறினார். திருமணமான 11ஆவது மாதத்தில் மாப்பிள்ளை இரத்தப் புற்று நோயால் இறந்தார். அப்பொழுது அந்தப் பெண் 6, 7 மாத கர்ப்பிணி.

கணவன் இறந்து 2, 3 மாதத்தில் அந்தப் பெண்ணிற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் குழந்தையின் இரத்தத்தைப் பரிசோதித்ததில் அந்தக் குழந்தைக்கும் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இன்றுவரை (வயது 11) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் தன் சக்திக்கு மீறி பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து தன் பேரனுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். திருமணமான 11 மாதத்தில் விதவைக்கோலம் கொடுமையிலும் கொடுமை. ஜாதகக்காரனால் 10 பொருத்தம் பார்த்தவனால் பையனுக்குத் தீராத நோய் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. மாறாக, நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்லி உள்ளான்.

அவன் பேச்சை நம்பி திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனப் புரோகிதனை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்பட்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாகச் செய்யப்பட்ட மண வாழ்க்கையின் ஆயுள் வெறும் 11 மாதங்களே.

ஜாதகம் பொய்! பார்ப்பனப் புரோகிதன் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரம் பொய்!! இதை மக்கள் உணரும் நாள் எந்நாளோ?

-ஆர்.டி. மூர்த்தி, திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *