இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே ஓராண்டுக்கு முன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் காணொளியை, தனது இணையதளத்தின் பொழுதுபோக்குப் பக்கத்தில் ஓ மை காட்: தீபிகா படுகோனேவின் மார்புப்பிளவுக் காட்சி என்று தலைப்பிட்டு வெளியிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த தீபிகா, இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நாளேட்டுக்கு இது தான் முக்கியச் செய்தியா? வேறு எதுவுமில்லையா? என்று சூடாகக் கேட்டார்.
தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய தீபிகா, ஆம். நான் பெண்தான். எனக்கு மார்புகள் உண்டு. ஒரு மார்புப் பிளவும் (Cleavage) உண்டு.
அதனால் உனக்கெதுவும் பிரச்சினையா? என்று கொதித்துவிட்டார். அடுத்தடுத்து திரைப்பட நடிகர் நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களுக்கான முதல் குரலை நீ கொடுத்திருக்கிறாய் என்று பாராட்டினார் பிரியங்கா சோப்ரா. இதற்குப் பதிலளிக்கிறோம் என்று தீபிகா படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்த கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, இதற்கென்ன பதில் என்று கேட்டிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. கதாபாத்திரங்களுக்காக நான் நடிக்கும் போது அது என் தொழில்.
ஆனால், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதா? என்று கேட்டிருக்கிறார்.
அய்யய்யோ… ஆபாசமாக இருக்கிறார்களே என்று ஊளையிடும் ஊடகங்கள் அந்தப் படங்களைப் போட்டுத்தானே பிழைப்பு நடத்துகின்றன.
இந்தப் பிரச்சினையிலும் அதே தான் நடந்தது. அது எந்தப் படம், எந்தப் படம் என்று திரும்பத் திரும்பப் போட்டும் பிழைத்தன சில பத்திரிகைகள்.