எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மய்யப்படுத்தி மலையாளத்தில், ஆஷிக் அபு இயக்கத்தில் 2011இ-ல் வெற்றிப் படமாய் வெளிவந்த சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் உன் சமையலறையில்.
உன் சமையலறையில் திரைப்படத்தில் தமிழர்களின் உணவுச் சுவையுணர்வை மய்யப்படுத்தி அதன் ஊடே காதல் அரும்பச் செய்து சமூகப் பிரச்சினைகளை அலச முற்பட்டிருக்கிறார் திரைப்படத்தின் நாயகனும் இயக்குனருமான பிரகாஷ்ராஜ். இந்தப் பொறப்புதான் ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது என்கிற தலைப்புப் பாடலுடன் தொடங்குகிறது திரைப்படம். இளையராஜாவின் இசை ஆளுமையில் தமிழகத்தின் மிகப் பிரசித்திபெற்ற உணவுவகைகளின் காட்சிப்படுத்தலில் நாவில் நீர் ஊற வைக்கிறது.
காதல் தோல்விக்குப் பிறகு திருமணமே செய்யாமல் தனி மரமாகவே வாழ்ந்து வரும் நாற்பத்தைந்து வயதான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரகாஷ்ராஜ், செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்ற ஜாதக வில்லங்கங்களால் திருமணம் தள்ளிப்போன சினேகா… இந்த இரண்டு உணவுப் பிரியர்களிடையே ஏற்படும் மோதலும் அதைத் தொடர்ந்து ஏற்படும் நட்பும் காதலாய் மலருகிறது, சந்திக்க முடிவு எடுக்கிறார்கள். ஆனால், தாழ்வுமனப்பான்மையால் இருவருமே தங்களுக்குப் பதில் வேறு ஒருவரை அனுப்பிவைக்க, அது உண்டாக்கும் குழப்பங்களும் தடுமாற்றங்களுமே கதை!
ஒரு பிரெஞ்சுப் போர் வீரனுக்காகக் காத்திருந்து அவன் காதலி தொடர்ந்து நான்கு நாட்கள் கேக் செய்வதும், போர் முனையில் இருந்து திரும்பிய அவனுக்கு அதைக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தியதை இணைத்து, நாயகன் நாயகியின் காதலை வெளிப்படுத்துவது போன்ற காட்சியமைப்பும் அதற்கு அமைக்கப்பட்ட பின்னணி இசையும் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய முயற்சி!
செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு திருமண வயதைத் தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் காட்சியமைப்புகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஊர்வசியிடம், எனக்குக் கல்யாணம் ஆகவில்லை, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?ன்னு போற வர்ற எல்லார்கிட்டேயும் கேட்கவா முடியும்னு சொல்லி அழும் இடம் ஜாதகத்தால் சீரழிக்கப்பட்ட பெண்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது.
ஜக்கையா என்கிற பழங்குடி இனத்தைச் சார்ந்தவரை அவரது மூலிகைக் கண்டுபிடிப்புக்காக பன்னாட்டு நிறுவனங்கள் துரத்துவதும் அவர்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் துணைபோவதும், அந்த ஜக்கையாவைக் காப்பாற்ற முனைந்து, முடியாமல் நாயகன் தடுமாறுவதும் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தப் பிரச்சினையை இன்னும் ஆழமாய்ச் சொல்லி இருக்கலாம் என்கிற ஆதங்கம் தோன்றுகிறது.
காவேரி நதிப் பிரச்சினை அந்த நதி பொறந்ததுக்கு முன்னே இருக்கு, பூமிக்கு அடியில் நாம கண்டு எடுக்கிற கடவுள் சிலை கூட காதலிக்குது. நாமதான் கல்லா இருக்கோம் அவளை உனக்குப் பிடிச்சிருக்குங்கிற முடிவை நீ எடு. அவளுக்கு உன்னைப் பிடிக்காதுங்கிறதை அவளே எடுக்கட்டும் போன்ற செழுமையான வசனங்களை வழங்கியிருக்கிறது விஜி மற்றும் ஞானவேலின் கூட்டணி. இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இசைஞானி இளையராஜா தனது இசையால் ஆளுமை செய்கிறார்.
குறிப்பாக திரைப்படத்தின் இறுதிக்காட்சி வசனங்களைவிட இளையராஜாவின் இசையே முக்கியத்துவம் வகிக்கிறது. இத்திரைப்படத்தில் திரைக்கதை அமைப்பில் ஒரு சில குறைகள் இருந்தாலும் நல்ல தரமான படம் என்கிற வகையில் வரவேற்கலாம்!
– பழ.பிரபு