நான்கு வகை இரத்தப் பிரிவுகளில் நால்வர்ண தர்மமா?

ஏப்ரல் 01-15

(மதவாத நச்சுக் கருத்துகளுக்கு மறுப்பு)

–  பேராசிரியர் ந. வெற்றியழகன்

புத்தக நூலா? பூணூலா?

விஞ்ஞான அறிவுக்கு 60 வினா-_விடைகள் என்று ஒரு நூல் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் திரு வி.டி.சங்கர் பி.எஸ்சி. அவர்கள். இந்நூல், பார்ப்பன_வைதிக_ஜாதிய வர்ண தர்மத்தினை வலியுறுத்துகிறது. அந்நூலின் ஒரு கட்டுரையின் தலைப்பு பழைய தர்மமும் நமது கடமையும் என்பது.

 

அரும்பாடு – பெரும்பாடு

இந்த நூல், அர்த்தமற்ற, ஆதிக்க வர்ண தர்மத்துக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. வர்ண தர்மத்தை நியாயப்படுத்துகிறது. இதற்காக, இவர், அரும்பாடு, பெரும்பாடுபட்டிருக்கிறார். அதனை, இனிப் பார்ப்போம்!

ஆரம்பம் திருவிளையாடல்

பண்டைக்கால இதிகாசங்களும் வேத புராணங்களும் நெறிமுறைகளும் ஆசாரங்களும் இன்றுள்ள பகுத்தறிவாளர்களால் ஒதுக்கப்பட்டுள்ள விஷயங்கள் என்றாலும், இவற்றை ஆராயும் பொழுது வாழ்வின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பல அறிவியல் செய்திகளை நிச்சயமாகக் காணமுடிகிறது. கட்டுரையின் தொடக்கம் இது.

ஒதுக்க மாட்டார்கள், ஒழித்துக் கட்டுவார்கள்

இந்துமத வேத புராண இதிகாசங்களில் அறிவியல் இருக்கிறதாம்! இவற்றைப் பகுத்தறிவாளர்கள் ஒதுக்கிவிட்டார்களாம்! நிரம்பவே, சலித்துக் கொள்கிறார் நூலாசிரியர் சங்கர் அவர்கள். ஆதங்கப்படுகிறார் _ அங்கலாய்த்துக் கொள்கிறார். அறிவியல் மனப்பாங்கையும் (Scientific Temper) பகுத்தறிவு நெறியையும் பகுத்தறிவாளர்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள்! பின், என்ன செய்வார்கள்? அவற்றை உருத்தெரியாமல் ஒழித்து விடுவார்கள்; அழித்து விடுவார்கள். இதுதான் உண்மை! இதில் எவ்வகைத் தயக்கமும் இல்லை, நூலாசிரியர் அவர்களே!

கண்டுபிடிச்சேன்! நான் கண்டுபிடிச்சேன்!

இந்த நூலில் ஓர் அரிய _ அற்புதமான கண்டுபிடிப்பைச் செய்துள்ளார் அவர். அட,

அட, அடடா! என்ன கண்டுபிடிப்பு? என்ன ஆராய்ச்சி?

இந்தக் கண்டுபிடிப்புக்காக, இவருக்கு ஏன் அறிவியலின் பெயரால் நோபல் பரிசு இன்னும் வழங்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் எமக்கு விளங்கவில்லை!
இனி, இவரது அரிய கண்டுபிடிப்புக்கு வருவோம்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ நண்பரே, நண்பரே, நண்பரே!

அவர், பின்வருமாறு எழுதுகிறார்:

ஆதி நாட்களில் நமது நியதிகள் ஏற்படுத்திய வருணாசிரம தர்மத்தை எடுத்துக்கொண்டால், நாட்டைக் காக்கும் ஆட்சியாளர்களை -க்ஷத்திரியர் என்றும், அறிவு ஜீவிகளாக, பல நூல் நியமங்களை வகுத்து, தன் மதியால் இந்த அரசர்களையே அடக்கியாண்டவர்களை பார்ப்பனர்கள் என்றும், இந்த இரண்டு இனங்களுக்கும் பொதுவாக வணிகம், சமூக சேவை முதலிய பணிகளை மேற்கொண்டவர்கள் வைசியர் என்றும், இந்த இனத்துக்கெல்லாம் உதவியாக ஏவல் புரிந்து வந்தவர்கள் சூத்திரர் என்றும் பிரித்து இருக்கின்றனர்.

ஏற்படுத்தியதா? ஏற்பட்டதா?

வர்ணாசிரம தர்மத்தை ஆதி நாட்களில் நமது நியதிகள் ஏற்படுத்தினவாம்! நியதிகள், விதிகள், உண்டாக்குபவர் இல்லாமல் தாமாகவே சுயம்புவாக வந்தனவா? அவற்றை நியமிப்பவர் இருக்க வேண்டாமா? இது என்ன வாதம்?

ஆட்கள்தானே நியதிகளை உருவாக்கினர் _ உருவாக்க முடியும்? அவை தாமாகவே பொத் என்று விண்ணிலிருந்து குதித்து வந்துவிட்டனவா?

அண்ணலின் கை வண்ணம் அல்லவா?

இந்திய அரசியலமைப்பு விதிகள் தாமாகவே உருவாயினவா? அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான வல்லுநர் குழுதானே விதிகளை வகுத்தது?

இப்பொழுது எண்ணிப் பார்ப்போம். வர்ண தர்மம் தானாகவே நியதியாக வந்துவிட்டதா?

வேதம் வெளிப்படுத்துகிறதே?

ரிக் வேதம் 9809ஆவது சுலோகம் பின்வருமாறு கூறுகிறது:

விராட் புருஷனாகிய பிரம்மாவின் முகம், தோள், தொடை, பாதம் இவற்றிலிருந்து முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் உருவாயினர்.

இந்த ரிக்வேத புருஷசூக்த சுலோகம், ஆரிய முனிவரான நாராயண கவியால் பாடப்பட்டது.

கூட்டணியால் கூறப்பட்டது

அந்தப் பிரம்மாவானவர் தலை, புஜம்(தோள்), தொடை, பாதம் இவற்றிலிருந்து முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு ஜாதிகள் (வர்ணங்கள்) பிறந்தன. (மனுநீதி 1:3)

இந்த மனு (அ) நீதி நூலை உருவாக்கியவர் பிருகு என்பவர்.

பிரம்மா மனுவுக்குச் சொல்ல, மனு மரீசிக்குச் சொல்ல, மரீசி பிருகுவுக்குச் சொல்ல, பிருகு அதனை நூல் ஆக்கினார் மனுநீதி என்ற பெயரில்.

ஒப்புதல் வாக்குமூலம்

பகவத் கீதை என்று சொல்லப்படுவது கண்ணனால் சொல்லப்படுவது எனக் கூறப்படுகிறது. இதில் கண்ணன் பின்வருமாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான். சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் _ (அத்தியாயம்: 4, சுலோகம் 13)

ஆக, நியதிகள் தாமாக வந்தவை அல்ல; ஆரிய ஆதிக்க புரியினர் ஏற்படுத்தியவை என்பது புலனாகின்றதன்றோ?

பார்ப்பனியப் பரப்புரை

அறிவு ஜீவிகளாக பல நூல் நியமங்களை வகுத்து, தம் மதியால் இந்த அரசர்களையே அடக்கி ஆண்டவர்கள் பார்ப்பனர்களாம்.

சூத்திரர்கள் ஏவலர்களாம், எடுபிடிகளாம்! நூலாசிரியர் கூறுகிறார் இப்படி!

பார்ப்பனர்கள் மட்டும்தான் அறிவு ஜீவிகளாம்! மதியுடையவர்களாம்! என்ன ஆணவம்! என்ன திமிர்த்தனம்!

அய்யன், அய்யா, அறிஞர், அண்ணல்

பார்ப்பனரல்லாத மற்றவர்களுக்கு _ சூத்திரர்களுக்கு அறிவே இல்லையா? அறிவு ஜீவிகள் இல்லையா? மதி இல்லையா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிரகடனப்படுத்தி, உலகின் ஒப்பற்ற திருக்குறள் எழுதிய சூத்திரர் அய்யன் திருவள்ளுவர் அறிவுஜீவி இல்லையா? மதியில்லையா அவருக்கு?

பகுத்தறிவுப் பகலவன், அறிவாசான் அய்யா தந்தை பெரியார் அறிவு ஜீவியில்லையா? வெறும் ஏவலரா?

தன் துள்ளுதமிழ்ப் பேச்சாலும், எழுத்தாலும் பார்ப்பனியத்தைப் பதற வைத்த அறிஞர் அண்ணா அறிவு ஜீவியில்லையா?

நாலாம் ஜாதிக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமன் ஆன அண்ணல் அம்பேத்கர் அறிவுஜீவி இல்லையா? மதிவாணர் இல்லையா?

பெருந்தலைவரின் பேராற்றலும் பேரறிவும்

அறிவு ஜீவியாகக் கருதப்பட்டு நாடாண்ட பார்ப்பன இராஜகோபாலாச்சாரியாரை ஏவலர் என்று சங்கர் அவர்களால் குறிப்பிடப்படும் பெருந்தலைவர் காமராசர் அறிவுஜீவி இல்லையா?

ஆச்சாரியாரை, அய்யா பெரியாரின் பேருதவி கொண்டு ஆட்சியிலிருந்து அலறியடித்து ஓடச் செய்யவில்லையா பெருந்தலைவர்! நூலாசிரியர் இப்படிப் பிதற்றலாமா?

கந்தலாகிப் போய்க் கொண்டிருக்கும் காட்சி

ஆரிய _ பார்ப்பன வல்லாண்மை வர்ணதர்மம் கந்தலாகிப் போய்க் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு (கோவில் கருவறையில் மட்டும்தான் இந்த வர்ணதர்மம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.) சகிக்க முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்புகிறாரே இந்த நூலாசிரியர்! அய்யோ பாவம்!

ஆகா! என்ன பொருத்தம்!

மேலும் தொடர்கிறார்: கூர்ந்து ஆலோசித்தால் இன்றைய இரத்தப் பிரிவுகளான எ, பி, எபி, ஓ என்ற நான்கும் அதன் பண்புகளும் வர்ணாசிரமத்தில் பிரிந்த அந்த நாற்குலங்களின் அடிப்படைக் குணங்களுடன் ஒத்துப் போவதை நாம் உணரலாம்.

அடே அப்பா! என்ன ஆராய்ச்சி? என்ன விளக்கம்? இவரது கருத்துப்படி,

இரத்தப் பிரிவு _ எ(A) பார்ப்பன(பிராமண)ர்களுக்கு உரிய பண்புகள் கொண்டது.

இரத்தப் பிரிவு _பி (B) சத்திரியப் பண்புகள் கொண்டது.

இரத்தப் பிரிவு எபி (AB) வைசியப் பண்புகள் கொண்டது.

இரத்தப் பிரிவு ஓ (O) சூத்திரப் பண்புகள் உடையது.

அதாவது, இரத்தப் பிரிவுகள் (Blood Groups) நான்கும் நான்கு வர்ணத்தார்களிடம் இருக்கும். மாறி இருக்காது!

குலமா? குணமா?

இரத்தப் பண்புகள் நான்கு பிரிவுகளுடன் நால்வர்ண தர்மக் குணங்கள் ஒத்துப் போகிறதாமே?

ஒத்து ஊதுகிறாரே நூலாசிரியர்?

இவர் படித்த அறிவியல் பட்டப்படிப்பு பி.எஸ்சி. (B.Sc.) இப்படித்தான் கூறுகிறதா?

செல்இயல் (Cytology), இதயஇயல் (Cardiology), உடலியல் (Physiology),வேதியியல் (Chemistry) உள்ளிட்ட அறிவியல் இப்படித்தான் கூறுகிறதா? அறைகூவல் விடுக்கின்றோம்!

இரத்தம்பற்றிய அறிவியல் உண்மைகளை, இரத்தப் பண்புகளை அறியாமலே ஏதேதோ கதைக்கிறாரே நூலாசிரியர் சங்கரர்?

இரத்தம்பற்றி மெய்யாகவே அறிவியல் கூறுவதை இப்பொழுது காண்போம்! அல்லது நினைவு கூர்வோம்.

இரத்தம் என்பது யாது?

உடல் உள்ளுறுப்புகளின் உட்புறச் சூழல்களில் ஒன்றுதான் இரத்தம் என்பது. நல்ல _ தூய தமிழில் குருதி எனப்படும். காரத்தன்மை கொண்ட சிவப்பான நீர்மம். இதன் அடர்த்தி 1.05 முதல் 1.06. சாதாரணமாக, நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனிடம் ஏறத்தாழ 5 லிட்டருக்குக் குறையாமல் இருக்கும் குருதி.

இரத்தத்தில் உள்ளடங்கி இருப்பவை:

இரத்தத்தில், பிளாஸ்மா (Plasma),, சிவப்பு, வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் (Platalets), நீர் முதலியன இருக்கின்றன.

55 முதல் 60 விழுக்காடு (55% _ 60%) பிளாஸ்மாவும், 40 முதல் 45 விழுக்காடு உயிரணுக்களும் (சிமீறீறீ) உள்ளன.

இரும்புச் சத்தான ஹீமோகுளோபின் (Haemoglobin) இருப்பதால் இரத்தம் சிவப்பாக இருக்கும். இந்த இரத்த அணுக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எலும்பு மஜ்ஜை (Marrow), கல்லீரல், மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள் முதலிய பகுதிகள் ஆகும்.

இரத்தத்தின் இயற்கைப் பணிகள்

இரத்தம் 23 நொடிகளுக்குள் உடலை ஒரு தடவை சுற்றிவருகிறது. ஒரு நாளில், 2688 கி.மீ. பயணம் செய்கிறது. உடலில் உள்ள எல்லாத் திசுக்களுக்கும் (Tissues) சென்று ஆற்றலை அளித்துவிட்டு கார்பன்_டை_ஆக்சைடு முதலான மாசுகளை ஏற்றுக் கொள்கிறது.

வேறு வகையில் சுருக்கமாக, ஆனால் தெளிவாகக் கூறவேண்டுமானால், இரத்தம் உயிரிய வளியை (Oxygen) உடலின் திசுக்களுக்குச் சுமந்து செல்வதுதான்.

(Blood’s chief function is to carry oxygen to the tissues.)

ஏந்திச் செல்வது இல்லவே இல்லை!

உண்மையில் இரத்தத்திற்கும் மனிதப் பண்புகளுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை; இல்லை; இல்லவே இல்லை.

இது ஒருபோதும் அன்பு, சினம், விருப்பு, வெறுப்பு, ஈகை, வீரம், ஈரம் முதலான பண்பியல்புகளைச் சுமந்து செல்லாது; ஏந்திப் போகாது. இப்பண்புகள் இரத்தத்தில் கலக்கவும் கலக்காது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், வர்ணதர்மம், குலம், கோத்திரம், ஜாதி முதலான பார்ப்பனிய வல்லாண்மைப் பண்புகளை ஏந்திச் செல்லாது! ஏன்? அப்படி இயற்கையில் இவை உண்மையாக இல்லை!

எப்படிச் செப்புகிறார் இவர்?

அறிவியல் இவ்வாறு உண்மைகளைக் கூற _ திரு.சங்கர் B.Sc மட்டும் இரத்தப் பிரிவுகள் வர்ணாசிரம _ ஜாதி முதலான பொருளற்ற _பொய்யான பண்புகளைக் கொண்டிருக்கின்றன என, எப்படிச் செப்புகிறார்? அதுவும் அறிவியல் பற்றிய நூலில்!

இரத்தப் பிரிவுகள் (Blood Groups)

A, B, AB, O – இவைதாம் குருதிப்பிரிவு வகை. 45% மக்கள் ‘O’ வகையைச் சேர்ந்தவர்கள். இவற்றின் உட்பிரிவுகள்: A, A1, AL என்பன.

எல்லோருக்கும் பொது இவை

இந்த இரத்தப் பிரிவுகள் ஜாதி, வர்ண, மத, மொழி, இன, இட, நாடு வேறுபாடின்றி எவருக்கு வேண்டுமானாலும் அமையலாம். அப்படித்தான் அமைந்திருக்கிறது. இது இயற்கை நியதி.

இல்லாத ஜாதிக்கு என்னென்ன குணமோ?

இந்த இந்த வர்ணத்தாருக்கு, ஜாதியாருக்கு இந்த இந்த இரத்தப் பிரிவுதான் இருக்கும் என்பது கிடையாது. இவ்வண்ணம் அறிவியல் எப்போதும் கூறியது கிடையாது! ஏன்?

ஜாதி, குலம், வர்ணம் முதலியவைதாம் உண்மையில் கிடையாதே!

இவை வல்லாண்மை (ஆதிக்க)ப் பார்ப்பனரின் கற்பனையான, குரூரமான, தன்னலம் கொண்ட கற்பனைக் கற்பிதமே தவிர வேறில்லை!

குலவெறி, குலவெறி, குலவெறி

எனவே, பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு எ, பி, எபி, ஓ இரத்தப் பிரிவுகள்தான் இருக்கும் என்பது பினாத்தல்; பித்துக்கொள்ளித்தனம். பார்ப்பனிய _ வைதிக, இந்து மதவெறி! ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறிடி _ என்பதுபோல. ஒய் திஸ் குலவெறி, குலவெறி, குலவெறி டி?

அறிவியலின் பெயரால் வர்ணதர்ம அரங்கேற்றமா?

இப்படிப்பட்ட அபத்தங்களை, ஆரிய_பார்ப்பனிய வைதிக, சனாதன இந்துமத வர்ண ஜாதி வெறியினை அறிவியலின் பெயரால் அரங்கேற்றம் செய்வதா?

கூடாது, கூடாது, கூடவே கூடாது! என, எச்சரிப்பதுதான் பகுத்தறிவாளர்களாகிய தந்தை பெரியார் நெறியாளர்களின் சமூகநீதிக் கடமை.

நமது கடமை என நூலாசிரியர் எதையாவது பொறுப்பின்றி, அறிவியல் மனப்பான்மை (Scientific Attitude) இன்றி எழுத வேண்டாம்!

கிறுக்க வேண்டாம்! சும்மா விடமாட்டோம்! இப்படிப்பட்ட அறிவியல் திரிபுவாதங்களை இவரனையார் நிறுத்தும்வரை விடமாட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *