Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அதி புத்திசாலி?

– திராவிடப்புரட்சி

கடவுள் இல்லை என்று சொல்லுவதைத் தடை செய்யக் கோரும் பொதுநல மனு மீதான நீதிமன்ற வாதம் (கற்பனை)
மனுதாரர்: அதி புத்திசாலி

கோர்ட் குமாஸ்தா: அதி புத்திசாலி! அதி புத்திசாலி! அதி புத்திசாலி! (அதி புத்திசாலி உள்ளே வருகை!)

நீதிபதி: எந்த அடிப்படையில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளீர்கள்?

அதி புத்திசாலி: கடவுள் இருக்கிறார் என்கிற உண்மையின் அடிப்படையில் அய்யா!
நீதிபதி: கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்பதற்கு எது ஆதாரம்?

அதி புத்திசாலி: இருக்குதுங்கையா! இதோ கூடவே எடுத்து வந்திருக்கிறேன் அய்யா! இந்தப் பொஸ்தகத்தில் அதற்கான ஆதாரம் இருக்குதுங்க அய்யா!

நீதிபதி: இந்த புஸ்தகம் யார் எழுதுன புஸ்தகம்?

அதி புத்திசாலி: இது எங்க தாத்தாவோட…. தாத்தாவோட…. தாத்தாவோட….. பல தாத்தாக்களுக்கு முன்பு இருந்த ஒரு தாத்தாவால்….

நீதிபதி இடைமறித்து: அந்தக் காலத்தில் புஸ்தகமே அச்சடிக்கலியே?!

அதி புத்திசாலி: இல்லைங்கையா…. அது அவரால சொல்லப்ட்டதுங்கயா! பின்னால வந்த தாத்தாக்கள் அதை புஸ்தகமா அச்சடிச்சு வைச்சாங்கையா!

நீதிபதி: அது சரி, அது உங்க தாத்தா சொன்னதுதானே… அது எப்படி ஆதாரமாக ஆக முடியும்?

அதி புத்திசாலி: அங்கதாங்கயா விஷயமே இருக்கு! மத்தவங்ககிட்ட சொன்னதுதான் எங்க தாத்தா! ஆனால்…. அவர்கிட்ட அந்த விஷயங்களைச் சொன்னது கடவுளுங்கையா!

நீதிபதி: கடவுள் சொன்னாரா?! அவரிடம் கடவுள் சொன்னார் என்று எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: நீங்க தாராளமா நம்பலாம் அய்யா! அதற்கு ஆதாரம் இருக்கு!

நீதிபதி: அதற்கு ஆதாரம் இருக்கா?! எங்க இருக்கு?

அதி புத்திசாலி: இதோ! இந்த பொஸ்தகத்திலேயே இருக்குங்க அய்யா! இது கடவுளால் சொல்லப்பட்டது என்று தெளிவா இருக்குங்க அய்யா!

நீதிபதி: இதை எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: நம்புங்க அய்யா! நம்புங்க! நம்பித்தான் ஆகவேண்டும்! நாங்க நம்பலியா! அது போல நம்புங்க அய்யா! நம்பிக்கைதான் வாழ்க்கை!

நீதிபதி: அதெல்லாம் சரி… நீங்க அந்த புஸ்தகத்தில் இருப்பதை நம்புகிறீர்கள்….

ஆனால் அதை நான் எப்படி நம்புவது?

அதி புத்திசாலி: அப்படிக் கேளுங்கையா! நீங்க நம்புவதற்குத் தேவையான ஆதாரம் எல்லாம் இருக்குங்க அய்யா!

நீதிபதி ஆவலோடு: எங்க? எங்க இருக்கு?

அதி புத்திசாலி: இதோ இந்தப் பொஸ்தகத்திலேயே இருக்குதுங்க அய்யா!

நீதிபதி: ஸ்ஸ்ஸ்சப்பா முடியல! சரி இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது எல்லாம் உண்மை, இது கடவுள் சொன்னதுதான், அதற்கான ஆதாரம் இந்தப் புஸ்தகத்திலேயே இருக்கிறது என்பதை நம்பி எப்படித் தீர்ப்பளிப்பது? அது சரியா வராதே….

அதி புத்திசாலி: அய்யா அவசரப்பட்டுடாதீங்க! அது மட்டுமல்ல… உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மனிதன் படைக்கப்பட்டது வரை அனைத்திற்கும் இதில் ஆதாரம் உள்ளது!

நீதிபதி: அது வேறையா?!

அதி புத்திசாலி: ஆமாங்க அய்யா! எல்லா உண்மைகளும் இதில் இருக்குதுங்க அய்யா! இது ரொம்ப முக்கியமான ஆதார பொஸ்தகம் அய்யா!

நீதிபதி: நீங்க சொல்லுறத ஊர் நம்பாதே!

அதி புத்திசாலி: சரியாச் சொன்னீங்க அய்யா! நம்பாதவர்கள் பற்றியும் இந்தப் பொஸ்தகத்தில் இருக்குங்க அய்யா! நீங்க இந்தக் காலத்தில் சொல்லுவதை அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்காங்க என்றால் என்ன அர்த்தம்? இதில் சொல்லியிருப்பது எல்லாம் உண்மை என்றுதானே அர்த்தம்?

நீதிபதி: நான் அதைச் சொல்லலை… நான் சொல்லவந்தது….

அதி புத்திசாலி: புரியுதுங்க அய்யா! புரியுது! நீங்க சொல்ல வருவது புரியுது!

நீதிபதி: அப்பாடா புரிஞ்சுதா?!

அதி புத்திசாலி: இந்தப் புஸ்தகத்தில் உள்ளதை மற்றவர்களை எப்படி நம்பவைப்பது என்றுதானே கேட்க வரீங்க…. அதுக்கு ஒரு வழி இருக்குங்க அய்யா!
நீதிபதி: நான் அதைச் சொல்ல வரல… சரி என்ன வழி அதைச் சொல்லுங்க!

அதி புத்திசாலி: மனிதனால் சொல்லமுடியாத, சிந்திக்க முடியாத பல விஷயங்கள் இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது. இதுவே இந்தப் புஸ்தகத்தில் இருப்பது அனைத்தும் கடவுளால் சொல்லப்பட்டது என்பதை நம்புவதற்கான ஆதாரம்!

நீதிபதி: மனிதனால் சிந்திக்க முடியாத, சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்குதா?!

அதி புத்திசாலி: இருக்குதுங்க அய்யா! நீங்க முழுசா இதைப் படிச்சுப் பார்த்தால்தான் உங்களுக்கே புரியும்! நீதிபதி: நான் படிச்சுப் பார்க்கிறேன். ஆனால் இதை ஒரு ஆதாரமாக வைத்து….
அதி புத்திசாலி: அவசரப்பட்டுடாதீங்க அய்யா! முதல்ல இந்தப் பொஸ்தகத்தை படித்துப் பாருங்கள்…. அப்புறம் தெரிந்துகொள்வீர்கள்… இந்த அறிவியல் கிறிவியல் எல்லாம் பொய் என்று!

நீதிபதி: என்னது?! அறிவியல் எல்லாம் பொய்யா?!

அதி புத்திசாலி: ஆமாங்க அய்யா! பூமி, வானம், சந்திரன், சூரியன் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாவற்றையும் கடவுள் படைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த மனிதன் மிருகம் என்று அனைத்தையும் படைத்தான் அய்யா! அதற்கான எல்லா ஆதாரமும் இந்தப் பொஸ்தகத்தில் இருக்குதுங்க அய்யா! ஆனால்…. அறிவியல் அது இது என்று சொல்லிக்கிட்டு…. மரபணு, பரிணாம வளர்ச்சி என்று ஏதேதோ உண்மைக்கு மாறாக சொல்லுறாங்க அய்யா! (கடுப்பான) நீதிபதி: மனிதன் சிந்திக்காத எல்லாம் இந்தப் புஸ்தகத்தில் இருக்கிறது என்றால்…. அவன் கண்டுபிடித்த ரேடியோ, டி.வி, ப்ரிட்ஜ், மின்சாரம், மின் விளக்கு, ரயில், ராக்கெட், உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பு ஊசி மருந்துகள்…. இத்தியாதி இத்தியாதி என்று அவன் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான அனைத்து விஷயங்களும் இந்தப் புஸ்தகத்தில் இருக்கா? அதெல்லாம் இதில் இல்லை எனும்போது இந்தப் புஸ்தகத்தில் இருப்பதை எதற்காக முக்கியமாகக் கருதவேண்டும்?

இருபது வயதிற்குக் குறைவாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்றைக்கு எழுபதைத் தொட்டிருப்பதற்குக் காரணம் மனிதனின் கண்டுபிடிப்புகள் தானே? இன்று மனிதன் சுகமாக வாழ்வதற்குக் காரணம் மனிதனின் கண்டுபிடிப்புகள் தானே? ஆனால்…. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் புஸ்தகத்தால் என்ன செய்ய முடிந்தது? கொடிய தொற்று நோயால் இறந்த கோடிக்கணக்கான உயிர்களை இந்தப் புஸ்தகத்தை வைத்துக் காப்பாற்ற முடிந்ததா? சொல்லிக்கிட்டே போகலாம்… (மூச்சு வாங்குகிறார்)

(சிரித்துக் கொண்டே) அதி புத்திசாலி: அய்யா இத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் கடவுள்தானே….

நீதிபதி: என்னது?!

அதி புத்திசாலி: மனிதனைப் படைத்த கடவுள்தானே அவனுக்கு மூளையும் படைத்தான். மனிதனின் மூளைதானே இவ்வளவையும் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது! மேலும்…. மனிதன் கண்டுபிடிக்க முடியாத இன்னமும் பல விஷயங்கள் இருகின்றன அய்யா! அறிவியல் அறியாத உண்மைகள் பல இருக்கின்றன அய்யா! அதெல்லாம் இந்தப் பொஸ்தகத்தில்…..

நீதிபதி: (இடைமறித்து) போதும்! போதும்! ஆயிரம் வருஷத்திற்கு முன்பு மனிதன் கண்டுபிடிக்காத பலவற்றை, கடவுள் விஷயமாகக் கருதிய பலவற்றை இன்றுவரை மனிதன் கண்டுபிடித்து இருக்கிறான். அன்றைக்கு அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாத கற்பனைக்கெட்டாதவைகள்தான். இன்றைக்குக் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்ற பலவற்றை மனிதன் வருங்காலத்தில் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவான்! இதுவே எதார்த்தம்! உண்மை! எனவே, தீர்ப்பை வாசித்துவிடுகிறேன்!

மனுதாரரின் வாதத்தை, ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது, மனிதனால் கண்டுபிடிக்காதவற்றை அடிப்படையாக வைத்துத்தான் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறது என்பது தெரியவருகிறது. வருங்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமும், அறிவும் வளரும், கண்டுபிடிப்புகளும் தொடரும். அது வரை கடவுள் குறித்த நம்பிக்கைகளும் தொடரும். ஆனால், அறிவியல் வளர வளர இந்த நம்பிக்கை குறையும். ஆனால் இறுதிவரை மனிதனால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றே ஒன்று…. கடவுள்தான்! என்பதைக் கூறி…. மனுதாரரின் கோரிக்கை அடிப்படையற்றது என்று கருதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்!

பின்குறிப்பு: இந்தக் கற்பனை நீதிமன்ற உரையாடல் மாறுபட்ட சிந்தனையைத் தூண்டுவதற்க்காகவே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!