மீண்டும் ஒருமுறை…

ஏப்ரல் 01-15

– இசையின்பன்

பிரியா இன்றோடு வீட்டை விட்டு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. 18 வயது நிரம்பிய மறுநாள் வீட்டை விட்டு வெளியே வந்தவள். படிப்பைக் கூட பாதியில் நிறுத்திவிட்டு தனக்கிருக்கும் ஆங்கிலப் புலமையால் ஒரு வேலையை சுலபமாகப் பெற்றுக்கொண்டு அன்னை தெரசா மகளிர் விடுதியில் மாதம் 4,300 ரூபாய் விடுதிக்கட்டணமாக செலுத்திக் கொண்டு தன் அம்மாவைப்பற்றி எந்தக் கவலையுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்று அவளுக்கு கடுமையான காய்ச்சல். வேலையிலிருந்து பாதி நேரத்திலேயே கிளம்பி வெளியில் வந்தாள். பேருந்தில் செல்லும் அளவுக்கு உடல்நிலை இல்லாததால் ஆட்டோவைக் கூப்பிட்டாள்.

வேளச்சேரிக்குப் போங்க.

ஆட்டோ உருமிவிட்டு உருளத் தொடங்கியது.

சைதாப்பேட்டையைக் கடக்கும்பொழுது அவளது அம்மா பேருந்து நிறுத்தத்தில் நிற்பது தெரிந்தது. கூட நிற்பவன் யார்? அவனேதான்.

தன் அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. இவளெல்லாம் ஒரு பெண்ணா! கணவனை இழந்து இன்னும் ஒரு ஆண்டுகூட  முடியவில்லை. சாலையில் வேறு ஒருவனோடு சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

இறந்துபோன தன் அப்பாவை நினைத்தாள். நினைக்க நினைக்க கோபம் அழுகையாக மாறியது. சிறிய வயதில் தன்னோடு அப்பா கொஞ்சி விளையாடிய அந்த நாட்கள்… கடற்கரையில் வேகமாக வந்து மோதுகின்ற அலை விசிறியடிக்கின்ற மேல்அலை கால்களை நனைத்துவிட்டு திரும்பிச் செல்லும்போது குறுகுறுக்கும் மணல் துகள்கள் கீழே விழுந்துவிடாமல் இருக்க மகிழ்ச்சியோடு அப்பாவின் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டது இன்னும் நினைவில் நிற்கிறது. தன்னுடைய 9ஆவது வயதில் மிதிவண்டி கற்றுக்கொண்டபோது பின்னாடியே சைக்கிளைப் பிடித்துக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து ஓடிவந்த அப்பா.

5ஆம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பிற்கு வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்ற முதல்நாள் பள்ளிக்குள் நுழைந்ததும் வகுப்பறைக்குத் தயங்கித் தயங்கி நான் செல்லும்வரை வாசலிலே நின்று ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.

கடைத்தெருவிற்கு செல்லும்போது நான் எந்தப் பொருளைக் கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சிறிதுகூட தயக்கமில்லாமல் வாங்கிக் கொடுத்தவர்.

இதேபோன்று கடுமையான காய்ச்சல் வந்து மருத்துவரிடம் சென்றபோது ஜன்னி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது இரவு முழுவதும் விழித்திருந்து ஈரத்துணியால் உடம்பு முழுக்க துடைத்து விட்டுக்கொண்டு கலங்கிய கண்களுடன் தன் அருகே அமர்ந்திருந்த அப்பாவை நினைக்க நினைக்க மனம் ஆற்றாமையால் பொங்கிற்று.

இன்றும் உங்கள் அன்பு மகளுக்கு கடுமையான காய்ச்சல், பக்கத்தில் ஆறுதலுக்கு நீங்கள் இல்லையே அப்பா. இன்னும் நினைக்க நினைக்க, எனக்கு அனைத்துமாய் இருந்த என் தந்தையே கடைசியில் கல்லூரிக்கு என்னைக் கூப்பிட வரும்போதுதானே அந்த விபத்து நடந்துவிட்டது. கல்லூரி முடிந்து நான் காத்திருப்பேன் என்பதற்காக வேகமாக வரும்பொழுதுதானே எதிரே வந்த லாரியில் மோதி துடிக்கத் துடிக்க என் கண் எதிரிலேயே… எனக்காகவே வாழ்ந்து எனக்காகவே உயிரை விட்டுவிட்ட என் அன்புத் தந்தையே!

உங்களைப் பிரிந்ததுமுதல் இப்பொழுதுவரை என்னால் உங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லையே.
அவள் கண்ணீர் வற்றவில்லை.

ஆட்டோக்காரர் கண்ணாடியின் பின்னால் பார்த்து அழுது கொண்டிருந்தவளிடம் வேளச்சேரியிலே எங்கே இறங்கணும் என்றார்.

பிரியா கண்களைத் துடைத்தவாறே, பெரியார் நகர், 2ஆவது தெருவில டாக்டர் பூங்கொடி கிளினிக் இருக்குல்ல அங்கே போங்க.

கிளினிக் வாசலில் இறங்கியவள் வெயிட்டிங்ல இருங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

ரிசப்ஷனில் உள்ள பெண் நட்புடன் சிரித்தாள். வாங்க

டாக்டர் இருக்காங்களா?

உள்ளே பேஷன்டைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

அய்ந்து நிமிடம் அமர்ந்திருந்தாள்.

உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்ததும் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள்.
வாம்மா பிரியா

சோர்ந்திருந்தவளிடம், உடம்புக்-கு என்னாச்சு என்றவாறே அவள் கையில் நாடி பிடித்தார் பூங்கொடி.

காலையிலிருந்து உடம்பு வலியாய் இருந்தது. ஒரு பாரசிட்டமால் போட்டுக்கிட்டு கால் சென்டருக்குப் போனேன். ஆனால் உட்கார முடியலை. உடம்பு நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதான் லீவைப் போட்டுட்டு வந்தேன்.

ஸ்டெதஸ்கோப்பை எடுத்து பிரியாவின் மார்பில் வைத்தவாறே அம்மா எப்படி இருக்கிறாள் என்று கேட்டாள் பூங்கொடி.

ஸ்டேட்சுக்குப் போறதுக்கு முன்னாடி அவளைப் பார்த்தது. போன்ல மட்டும்தான் பேசிக்கிறோம்.

வெப்பமானியை எடுத்து நாக்கிற்கடியில் வைத்தார். ஒரு நிமிடம் கழித்து எடுத்தவர் 103 டிகிரி இருக்கு. இன்ஜெக்சன் போட்டுக்கிறியா? ஏன் தனியாக வந்தாய்? அம்மாவைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல.

இவ்வளவு காய்ச்சலோடு உன்னை அனுப்பிட்டு அவள் என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? மொபைல்ல கூப்பிடு. ஒரு பிடி பிடிக்கிறேன் என்று சொன்னபோது பிரியா கோபமாயும் அழுகையுமாய், பிளீஸ் அத்தை, தயவுசெய்து அந்தப் பொம்பளையைப் பத்தி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். கேவலமான பெண்ணிற்கு மகளாய்ப் பிறந்ததை நினைத்து நானே வெட்கிப் போய் இருக்கிறேன். தலையைக் குனிந்து விசும்பினாள் பிரியா. அதிர்ச்சியில் சிலையானார் பூங்கொடி. இரண்டு, மூன்று நிமிடங்கள் கழிந்தபின் இயல்பு நிலைக்கு வந்தவள் எழுந்துவந்து உட்கார்ந்திருந்த பிரியாவை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அழாதம்மா, அழக்கூடாது. உன்னை நான் தைரியமான பொண்ணுன்னு நினைச்சுட்டு இருக்கேன். நீ போயி இப்படி அழறியே என்றவாறே அவள் மோவாயை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

ஆசுவாசப்பட்ட பிரியா தன் அம்மாவைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.

அப்பா இறந்துபோன கொஞ்ச காலத்தையடுத்து அம்மாவின் நடத்தை மாற்றத்தைப்பற்றி தான் புரிந்துகொண்டதைச் சொன்னாள். அப்பாவின் நினைவு தன்னைவிட்டு இன்னும் சிறிதுகூட போகாத காலத்திற்குள் அம்மா அடுத்தவனோடு சுற்றத் தொடங்கியதைப்பற்றி பூங்கொடியிடம் கொட்டித் தீர்த்தாள்.

எப்படி அத்தை எங்கப்பாவுக்கு இவுங்களால துரோகம் பண்ண முடியுது. இப்படி ஒரு கேடுகெட்ட ஜென்மத்திற்கு மகளா நான் இருப்பதையே அவமானமா நினைக்கிறேன். மீண்டும் அழுதாள்.

பூங்கொடி அழைப்பு மணியை அடித்தாள். ரிசப்சனில் நின்ற பெண் உள்ளே வந்தாள். ஃபிளாஸ்கில் இருந்து காஃபியை ஊற்றிக் கொண்டு வா. கொண்டு வந்த காஃபியை பிரியாவிடம் கொடுத்து குடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க.

குடித்தாள்.

நீ இந்த அத்தை சொல்றதை நம்புவியா!

காயப்பட்டுப்போன உன் மனசை நான் சொல்லப்போற உண்மைகள் சரிப்படுத்துமான்னு தெரியாது. ஆனால் எதையெல்லாம் உன் அம்மா உனக்குத் தெரியக்கூடாதுன்னு மறைச்சாளோ அதையெல்லாம் இப்ப நான் சொல்லித்தான் ஆகணும். உன் அம்மாவை இப்படி நீ வெறுக்கும் அளவிற்கு உன் அப்பா உன்னை மாற்றி வைத்திருக்கிறார். நேர்மையான மனதுடன் நான் சொல்வதைக் கேள் என்று சொல்லத் தொடங்கினான். மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் கயல்விழி, பூங்கொடி, பாரி மூவரும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தவர்கள். நல்ல நண்பர்கள். பாரி நன்றாக கவிதை எழுதுவான். கயல்விழி பாடுவாள். பூங்கொடி ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். உலக நடப்புகளை நன்றாகவே மூன்றுபேரும் அலசுவார்கள். இவர்களுடன் படித்தவர்கள் திரையரங்குகளில் ரஜினி, கமலைத் தேடியபொழுது இவர்கள் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றார்கள். பெரியாரையும், அம்பேத்கரையும், கார்ல் மாக்ஸையும் நூலகங்களில் தேடினார்கள். விவாதித்துக் கொண்டார்கள். கல்லூரியின் கடைசிக் காலங்களில் தயங்கியவாறே பாரி சொன்னான் பூங்கொடியிடம் கயல்விழியை விரும்புகிறேன் என்று.

மகிழ்ந்தாள் பூங்கொடி.

உன்னைவிட நல்ல சாய்ஸ் நிச்சயமாக கயல்விழிக்கு வேறு யார் இருக்க முடியும்!
எப்படிச் சொல்வேன் பூங்கொடி? உரிமையுடன் களங்கமற்ற நட்புடன் பழகியவளிடம் என் மனதில் கள்ளத்தனமாய் ஒளிந்திருந்த காதலைப்பற்றி.

இதில் என்ன தவறு இருக்கிறது பாரி? நட்புக்குள் காதல் தோன்றும்போது நட்பு  வலிமையடையத்தானே செய்யும். தயக்கமாக இருக்கிறதா! உன் காதலை வழக்கம்போல் கவிதையாக்கி மடலாகக் கொடு. பதிலாக அவளின் நல்மனதை உனக்கு வாங்கித் தருகிறேன் என்ற பூங்கொடியைப் பார்த்து பாரி, மகிழ்ச்சி கலந்த வெட்கத்துடன் ஏற்கெனவே எழுதிவிட்டேன். உன்னிடம் எப்படி கொடுக்கச் சொல்வது என்றுதான் குழம்பிக் கொண்டிருந்தேன் என்றபடியே மடலைக் கொடுத்தான்.

அடேங்கப்பா நல்ல வேகம்தான். சிரித்தபடியே வாங்கி கையில் இருந்த புத்தகத்தில் வைத்தாள். இருவரும் நடந்தனர், மடல் புத்தகத்திலிருந்து நழுவியதைக் கவனிக்காமல். வகுப்பறையில் பாடம் நடந்துகொண்டிருந்ததால் மடலைப் பிறகு கொடுப்போம் என்று பாடத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.

சிறிது நேரத்திற்குள்ளாக கல்லூரி முதல்வர் இராமஷேசனிடமிருந்து அழைப்பு கயல்விழிக்கு. போனவள் திரும்பவில்லை. பூங்கொடி வகுப்பு முடிந்ததும் தேடிப் போனாள். முதல்வர் இராமஷேசன் அறைக்கு முன்னால் நின்ற பியூன் கலங்கிய கண்களுடன் கயல்விழி அவள் அப்பாவுடன் சென்றதைச் சொன்னார். வகுப்பறைக்கு சோகமாய் திரும்பியவள் பாரியின் மடலையும் அவளிடம் கொடுக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டினாள். கடிதத்தைக் காணவில்லை. எல்லாம் புரிந்தது பூங்கொடிக்கு. போய்விட்ட கயல்விழி கல்லூரிக்-கு மீண்டும் வரவேயில்லை.

சிறிது நாட்கள் கழித்து அவளுடைய திருமணப் பத்திரிகைதான் கல்லூரிக்கு வந்தது.  பாரி பாதி ஆளாகிவிட்டான். பூங்கொடியோ குற்ற உணர்விற்கு ஆளாகிவிட்டாள். தான் மட்டும் அன்று கடிதத்தை எச்சரிக்கையுடன் பாதுகாப்போடு வைத்திருந்தால்… இந்தத் தேவையற்ற மாற்றங்கள் வந்திருக்காதே. ஆண், பெண் நன்றாகப் பேசி, சிரித்து, பழகுவதை வயிற்றெரிச்சலோடு பார்க்கும் இராமஷேசனிடமா அந்தக் கடிதம் கிடைக்க வேண்டும்! கயல்விழியைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தாலும் பரவாயில்லை. அவள் அப்பாவிற்குத் தகவல் சொல்லி வரவழைத்து பாரியின் ஜாதியைப் பற்றிக் கேவலமாகப் பேசி அவாளோடெல்லாம் இந்தப் பெண்டு பழகிண்டு இருக்காளே என்று கூறி அவளுடைய கல்லூரி வாழ்க்கையைக் கெடுத்ததோடு இல்லாமல் இப்படி திருமணம்வரை முடிவெடுக்க வைத்துவிட்டாரே. இது மட்டுமா? திருமணத்திற்கு வாழ்த்தப் போகிறேன் என்று போய் கயல்விழியிடம் ஏன்டியம்மா நோக்கு இப்ப அந்தப் பயலால தொந்தரவு ஏதுமில்லையே, இதோ கண்ணுக்கு நிறைஞ்ச ஆம்படையான் அமைஞ்சிருக்கான், நீயும் கண்ட கழிசடைப் பசங்களோடு பழகிண்டிருக்காதே என்று மணமகன் திருஞானம் காது குளிர வாழ்த்திவிட்டுப் போனார்.

மணமகனாய் வாய்த்த திருஞானமோ தன்னைத் தவிர வேறு யாரையும் எதனையும் நம்பாதவன். இராமஷேசன் கைங்கர்யத்தால் கயல்விழி வாழ்க்கையில் தொடங்கியது சூறாவளி. மேலும் கயல்விழிக்கு பாரி நண்பர்கள் மூலம் பரிசுப் பொருளாய் கொடுத்துவிட்ட ஆணும் பெண்ணும் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்துசெல்லும் ஒரு அழகான ஓவியத்தின் நடுவே மி ணீனீ ணீறீஷ்ணீஹ் ஷ்வீலீ ஹ்ஷீ என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த திருஞானம் பலத்த சந்தேகத்திற்கு ஆட்பட்டு கயல்விழி வாழ்க்கையில் என்றும் சந்தோஷம் என்பதையே இல்லாமல் ஆக்கிவிட்டான். திருமணமான முதல் இரவன்றே அவளிடம் கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டு இன்னும் அவள் கன்னியாகத்தான் இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள அவன் நடந்துகொண்ட அருவருப்பான நடவடிக்கைகள்… இப்படி ஒரு நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வந்துவிடக் கூடாது. அவசரப்பட்டு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டோமோ என்ற சோகத்திலேயே அவள் அம்மாவும் அப்பாவும் அடுத்தடுத்து போய்விட்டார்கள். நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் அவனுடைய சந்தேகத்தின் கொடுமையை காசு, பணத்தைக் கேட்கும்போதெல்லாம் கொடுத்தாவது தீர்க்கலாம் என்று பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைக்குத்தான் முடிவு கிடைத்ததே தவிர, கயல்வழியின் சிக்கல் தீரவில்லை.

(சிக்கல் சிக்கலாகவே இருந்ததா? அடுத்த இதழில் தெரியும் – நிறையும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *