நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே… ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?– புகழேந்தி, கள்ளக்குறிச்சி
என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!
அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? – பாஸ்கரன், திருப்பூர்
எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும்.
உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? – சங்கர் குமார், நாசரேத்
நண்பா சங்கர்… அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!
நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013