– பள்ளபட்டி கா.காளிராசன்
பவுர்ணமி நிலவு மகள், மேகத் திரைக்குள் மறைந்துகொண்டு இருந்தாள். கந்தசாமிக்குத் தூக்கம் வரவில்லை, புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். அவனது இமைகள் மூட மறுத்தன. அவனது மகனின் எதிர்காலம் அவனை வாட்டி வதைத்தது. இதுவரை பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை, எப்படி டவுன் பள்ளிக்கூடத்தில் போய் மகனைச் சேர்ப்பது என்கிற அச்சமே, அவனது மனதை ரணமாக்கியது.
கந்தசாமி சிறுவயதாக இருக்கும்போது, உற்சாகமாய் தொடக்கப் பள்ளிக்குச் சென்று வந்தான். ஒன்றாம் வகுப்பில் நன்றாகப் படித்தான். மூன்றாம் வகுப்புக்கு வந்தபோது ஒரு புதிய ஆசிரியர் அவனது வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்தார். அவர் மிகவும் கண்டிப்பானவர், கணக்கு வாத்தியார், நெற்றியில் நீண்ட நாமம் போட்டு இருப்பார். வீட்டில் இருந்து வரும்போது தண்ணீர் கொண்டு வந்து விடுவார். எந்தப் பையனையும் தொட மாட்டார்.
நீண்ட பிரம்பு ஒன்று வைத்து இருப்பார். தப்பாகச் சொன்னாலும் சரியாகச் சொன்னாலும் அடி விழுவது உறுதி. ஒருசமயம் அந்த ஆசிரியர் அடித்த அடியில் கந்தசாமிக்கு மண்டை வீங்கியே போச்சு. அது மட்டுமல்லாமல் நீங்களெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடத்துக்கு வர்றீக? பன்னி மேய்க்கத் தான்டா லாயக்குனு சொல்லியவாறு திட்டித் தீர்த்தார். கந்தசாமியால் இந்த வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறுநாள் காலையில் வழக்கம்போல பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் வந்துகொண்டு இருந்த அந்த ஆசிரியர் மீது கல்லெறிந்து அவரது மண்டையை உடைத்து விட்டான் கந்தசாமி. அன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு முழுக்குப் போட்டவன்தான்.
அன்று இருந்த ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி இன்றும் அதே நிலையில்தான் இருந்தது. இப்பொழுது அய்ந்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டான் மணிகண்டன். ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் நகரத்துப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போக வேண்டும்.
தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்றால் பணம் கட்ட வேண்டும். கந்தசாமியிடம் அவ்வளவாக வசதியில்லை. அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுபவன். இப்படி பலவாறாக எண்ணியவாறு இருந்த கந்தசாமி தன்னை அறியாமலேயே தூங்கிவிட்டான்.
நகரப் பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகின்றோம் என்கிற மகிழ்ச்சியில் மணிகண்டன் வேகமாக அதாவது அதிகாலையிலேயே எழுந்திருச்சி குளிச்சிட்டு ரெடியாயிட்டான். கந்தசாமி இன்னும் எழுந்திருக்கவில்லை. மணிகண்டன்தான் எழுப்பிவிட்டான்.
மணி எட்டை தன் ஓசையால் பக்கத்தில் இருந்த சர்ச் ஓசை எழுப்பியது.
என்னப்பா கந்தசாமி தகப்பனும் மகனும் எங்கேயோ கிளம்பிட்டாப்புல தெரியுது?
இவன பள்ளிக்கூடத்துல சேக்கப் போறேண்ணே
நல்ல விஷயந்தான், என்ன ஒன்னு படிச்சவன் பாட்டக் கெடுத்தான்கிற கணக்குல
போகும் போதே அபசகுணமா பேசுறானே, இவனெல்லாம் திருந்தவே மாட்டான்க, போறாம புடிச்ச பயல்க என மனசுக்குள்ளே திட்டினான்.
மூன்று கிலோ மீட்டர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தபோது, வழியில் ஒரு பள்ளிக்கூடம் தென்பட்டது. பள்ளிக்கூடம் மிகப் பெரியதாக இருந்தது.
காமராஜர் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பள்ளியின் முகப்பில் இருந்தது. காமராஜர் உருவப் படம் பொறிக்கப்பட்டிருந்தது.
பள்ளிக்கூட கேட் மூடி இருந்தது. மணி 9.30 இருக்கும் வாட்சுமேனிடம் கந்தசாமி தன் பையனைப் பள்ளிக்கூடத்தில் புதிதாகச் சேர்க்கணும் எனக் கேட்டபோது, உன் பையன இங்கெல்லாம் சேர்க்க மாட்டாங்க. இது பெரிய பெரிய பணக்காரப் புள்ளக படிக்கிற பள்ளிக்கூடம், உன் பையன கார்பரேசன் ஸ்கூல்ல போய்ச் சேர்த்துவிடு என்றார்.
கந்தசாமி வாட்சுமேன் அறையில் மாட்டி இருந்த காமராஜர் உருவப் படத்தையே பார்த்தான்.
சரி சரி இடத்தக் காலி பண்ணுப்பா, பிரின்ஸ்பால் பார்த்தா என்னை வேலையில இருந்து காலி பண்ணிடுவார் என கந்தசாமியை விரட்டாத குறையாக விரட்டினான். வேறு வழியில்லாமல் அப்பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் செல்லுவோம் என்கின்ற எண்ணத்துடன் தன் மகனைக் கூட்டிக் கொண்டு நடந்தான்.
சற்றுத் தொலைவில் தேவமார் மேல்நிலைப் பள்ளி தென்பட்டது. கந்தசாமியின் மனம் ரணமாய் வலித்தது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிற ஆசிரியரின் குரல் கந்தசாமியின் காதில் வந்து அறைந்தது போல் இருந்தது.
தலைமை ஆசிரியரிடம் தன் மகனைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றான். அதற்குத் தலைமை ஆசிரியர், சேர்த்துவிடுவோம். பள்ளிக்கூடத்திற்கு நான்கு சேர் வாங்கிக் கொடுத்திடலாமா? எனக் கேட்டார். ஒரு சேரின் விலை 350 ரூபாய் என்றார்.
கந்தசாமிக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்தளவுக்கு என்ட்ட வசதியில்லீங்க ஒரு சேர் வேணும்னா வாங்கித் தர்ரேன்ங்க சார் என்றான்.
அதெல்லாம் முடியாது, வேறு பள்ளிக் கூடத்துல போய்ச் சேர்த்துக்கோ என்றார் தலைமை ஆசிரியர். வேறு வழியில்லாமல் அந்தப் பள்ளியில் இருந்து வெளியேறினான். அங்கிருந்த முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவப் படம் இவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டது போலத் தோன்றியது.
மணி 12 ஆனது. மணிகண்டனுக்குப் பசி எடுத்தது. சரி விஸ்வநத்தம் ரோட்டுல ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. அங்க போய் சேத்துவுடுறேன்டா, போற வழியில ஓட்டலில் சாப்பிட்டுக்கிடுவோம் என்று சொல்லியவாறு நடந்தான். வழியில் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்காரர்கள் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
கந்தசாமி வேடிக்கை பார்த்த வண்ணம் நடந்தான். அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி கந்தசாமியையும் மணிகண்டனையும் வரவேற்றது.
மாணவர்கள் மட்டும் பயிலும் பள்ளிக் கூடம், மாணவர்கள் ஊதா நிறக் கால் சட்டையும் வெள்ளைநிற மேல்சட்டையும் அணிந்து இருந்தனர். தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாகச் சென்று நின்றனர் கந்தசாமியும் மணிகண்டனும். மதியம் மணி 2 ஆனது. தலைமை ஆசிரியர் சாப்பிட்டு விட்டு அவரது அறையில் வந்து அமர்ந்தார்.
என்னப்பா இந்த நேரம் வந்து இருக்க, காலையில வந்து இருக்கக் கூடாதா? என்றார் தலைமை ஆசிரியர். கந்தசாமியால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்தது. என்னப்பா நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ என்னடானா பதில் பேச மாட்டேங்குற. சரி சரி நாளைக்குக் காலையில சீக்கிரமா வந்துரு. பையன் எங்க படிச்சான்.
எங்க ஊர்லதான் சார்.
என்ன பேருடா?
மணிகண்டன் என்றான்.
ஒழுங்கா சேட்டை செய்யாம படிக்கணும், விடுமுறை எதுவும் எடுக்கக் கூடாது என்றார் தலைமை ஆசிரியர். இன்னைக்கு அட்மிஷன் போட்டுறேன். நாளைக்கு வந்து சேர்ந்துக்கோ என்று கிளார்க் வசம் போகச் சொன்னார்.
அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அம்பேத்கரும் பெரியாரும் மணிகண்டனை வரவேற்பது போல் இருந்தது. பள்ளியை விட்டு கந்தசாமியும் மணிகண்டனும் வெளியே வந்தனர். மீண்டும் பள்ளியின் பெயரை ஏறிட்டுப் பார்த்தான், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்று இருந்தது. மெதுவாக உச்சரித்துப் பார்த்தான். அப்போது பள்ளிக்குள் இருந்து ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற ஒரு மாணவனின் உரத்த குரல் கந்தசாமியைச் சிரிக்க வைத்தது.