பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.
உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.
ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.