பகுத்தறிவைப் பயன்படுத்து!

டிசம்பர் 16-31- 2013

– தந்தை பெரியார்

அறிவுடைய மனிதன் எல்லாத் துறைகளிலும் அறிவு பெற்றிருக்கிறானா என்றால் சில துறைகளில் மாத்திரம்தான் பெற்றிருக்கிறான். ஆனால், சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்தினால் பாபம் என்று சொல்லி விட்டனர். அதனால் பயந்து சில துறைகளிலே பயன்படுத்தவே மாட்டான். பயன்படுத்துவதே இல்லை. அந்தக் காரணத்தினாலேதான் நாம் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ்மக்கள், பிற்பட்ட மக்கள் என்று சொல்லும்படியாக இருக்கிறோம்.

அந்தத் துறையில் நாம் ஆராய்வது இல்லை. ஆராய்ந்தால் பாபம் என்று சொல்லுவார்கள். அப்படி ஆராய்வதாலே ஏதாவது தண்டனை ஏற்பட்டு விடும் – கிடைத்து விடும் என்று பயந்து ஆராயாமல் இருக்கிறார்கள். ஆனால், மனிதனுக்கு அறிவு இல்லை என்று சொல்ல முடியுமா? அறிவு இருக்கிறது; சில காரியங்களில்தான் அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள். சில காரியங்களில் பயன்படுத்துவதே இல்லை.

 

விருந்துக்கு அழைக்கப்பட்டவர் கால், கைகளைக் கழுவிக் கொண்டு இலையில் உட்கார்ந்ததும், சாணி உருண்டையை வைத்துச் சாப்பிடுங்கள் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்? என்ன அயோக்கியப் பயல், நம்மை மடையன் என்று நினைத்தானா, அல்லது அவன் மடையனா என்று ஆத்திரம் அடைந்து எழுந்து போய்விடுவான், ஏன்? – அறிவு இருக்கிறதினாலே!   எந்த மடையனாவது சாணியைச் சாப்பிடுவானா? என்று கருதியேயாகும். ஆனால், அதே மனிதனிடத்தில் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து, அதன் தலையிலே அருகம்புல் குத்தி வைத்து, குங்குமத்தை இட்டு, விழுந்து கும்பிட்டுவிட்டு வா சாப்பிடப் போகலாம் என்றால் உடனே கும்பிடுவான். சோறாக வைத்த பொழுது கோபம் அடைந்த மனிதன் அதைச் சாமியாக வைத்தால் விழுந்து கும்பிடுகிறான். தலையில் குட்டிக் கொள்ளுகிறான். இது ஏன்? அவனுக்கு அறிவு இல்லையா?

அறிவு இருக்கிறது; அந்த அறிவைச் சோற்றுச் சங்கதியில் செலுத்தலாம். ஆனால், கடவுள் சங்கதியில் செலுத்தினால் அழிந்தே போய் விடுவோம் என்கிற பயம் உண்டாக்கப் பட்டிருப்பதால் அவன் சிந்திப்பதில்லை. இரண்டும் அறிவுதான். ஆனால், பாபம், தோஷம் என்கிற தடை குறுக்கே நிற்கின்றது.

மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு, ஆலோசனை அறிவு, சிந்திக்கத் தகுந்த அறிவு இருந்தாலும் மேல் காட்டியபடி சில விஷயங்களில் உபயோகப்படுத்துவான், சில விஷயங்களிலே உபயோகப்படுத்துவதே இல்லை.

ஏன் நெற்றியில் சாம்பல் அடித்துக் கொள்கிறாய் என்றால் கோபம் வந்து விடும்.

அது சிவபிரானை வணங்கும் பக்திச் சின்னம். முன்னோர்கள் காலம் முதற் கொண்டு செய்து வருகிறோம். அது மேலே பட்டால் பாபம் போகும். அதைக் குற்றம் சொல்லுகிறாயே என்று கேட்பார்கள். அந்தச் சாம்பலை அடுப்பிலிருந்து முறத்தில் வாரி வந்து தெருவிலே நின்று அவன் முகத்திலே கொஞ்சம் வாரி அடித்தால் உடனே அவன், என் முகத்தைக் குப்பைத் தொட்டி என்று நினைத்துக் கொண்டாயா என்று சண்டைக்கு வந்துவிடுவான்.

மற்றும் அதே சாம்பலை ஒரு தட்டிலே வைத்துக் கொண்டு, இந்தப் பொண்ணுக்குப் பேய் பிடித்து இருக்கிறது. பேய் ஓடக்கடவது என்று சொல்லி ஒரு பெண்ணின் முகத்திலே அடித்தால் பக்கத்தில் யாராவது பாட்டிகள் இருந்தால், இன்னும் கொஞ்சம் நன்றாய்ப் போடுங்கள் என்று சொல்வார்கள். வெறும் சாம்பலை ஒருவனுக்குத் தெரியாமல் அள்ளி வந்து, இது சாமிப் பிரசாதம் என்று கொடுத்தால் பக்தியோடு இரண்டு கைநீட்டி வாங்கி வாயிலும் போட்டுக் கொள்ளுகிறான். அதற்காக விழுந்தும் கும்பிடுகிறான். தட்டதிலே தட்சிணையும் போடுகிறான். ஆனால், இதைப் பற்றிச் சிந்திக்கிறதேயில்லை.

ஆனால், நான் சொல்லுவதென்னவென்றால், எந்தச் சங்கதியாக இருந்தாலும் நன்றாகச் சிந்திக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது கடவுளாச்சே, இது சாஸ்திரமாச்சே, மதமாச்சே, பகவான் வாயிலிருந்து வந்ததாச்சே, பெரிய புராணம் சொல்லுதே, சிறிய புராணம் கழறுதே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் ஆராயும் திறன் இருக்கிறது. அதைக் கொண்டு எந்தச் சக்தியானாலும் ஆராய்ந்து பார்த்துத்தான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் திராவிடர்களுடைய நீதியாகிய குறள் வாக்கியம். அதாவது வள்ளுவர் சொல்லுகிறார், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்றால் போதாது. அந்த அறிவுக்குச் சில காரணம் வேண்டும். யார் சொல்லுவதாக இருந்தாலும் நன்றாக அலசிப் பார்த்து அதனுடைய உண்மையை அறிவதற்குப் பெயர்தான் அறிவே தவிர, முட்டாள்தனமாக கண் மூடிப் பின்பற்றுவது அறிவல்ல. ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை யார் சொன்னாலும் ஆராய வேண்டும் ஒருமுறை என்று சொல்லியிருக்கிறார். இன்னுமொருமுறை அது எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்படிப்பட்ட சங்கதியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் மனிதனுடைய அறிவுக்கு லட்சணம். அந்த அறிவினுடைய சிந்திக்கிற தன்மையிலே உலகத்திலே உள்ள நாட்டாருக்கு எல்லாம் சுதந்திரம் உண்டு. ஆனால், நம் நாட்டாருக்குத்தான் அறிவுச் சுதந்திரம் கிடையாது.

மற்ற நாட்டாருக்கு எல்லாம் அறிவிலே சுதந்திரம் இருப்பதனாலே தங்கு தடை இல்லாமல் யோசிக்கிற தன்மை இருக்கிறதனாலே அவர்கள் அற்புதமான அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்தார்கள்.

ஆனால், நமக்கு இவ்வளவுதான் யோசிக்கலாம், இவ்வளவுதான் பார்க்கலாம், அதற்கு மேல் யோசனை செய்தால் பாபம் என்று ஏற்பட்டிருக்கிறதனாலே நாம் இன்னமும் கீழ் ஜாதித் தன்மையில் இருக்கிறோம்.

மனிதன் தாராளமாகச் சிந்திக்கிற உரிமை கொண்டு இருக்கிறதினாலே அவனுடைய அறிவு வளருகிறது. அவன் நாடு முன்னேற்றம் அடைகிறது. அவன் வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கிறது. சகல சவுகரியங்களும், போக போக்கியமும் ஏற்படுகிறது. எல்லா அதிசயங்களையும் கண்டு மகிழ வசதி ஏற்படுகிறது.

(25.3.1951 அன்று பெரம்பூர் – செம்பியம் திராவிடர் கழக 3-ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… – விடுதலை 26.3.1951)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *