உலகம் பல போராளிகளைப் பார்த்துள்ளது. அவர்களின் விடுதலை உணர்ச்சி முழக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றில் மண்டேலாவின் முழக்கம் வித்தியாசமானது. மண்டேலா பல்வேறு நிகழ்வுகளில் ஒலித்த உரிமைக் குரல் இதோ:-
வெள்ளை ஆதிக்கத்தின் நேரடி விளைவுதான் ஆப்பிரிக்கர்கள் அனுபவிக்கும் இழிநிலை. வெள்ளை ஆதிக்கம் என்பது கருப்பர்கள் தாழ்வானவர்கள் என்பதையே குறிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒழிசலான வேலைகள் என்பவை ஆப்பிரிக்கர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. எதையாவது தூக்கிச் செல்ல வேண்டுமென்றாலோ எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றாலோ ஒரு வெள்ளையர் சுற்றும்முற்றும் யாராவது கருப்பினத்தவர் தென்படுகிறாரா என்றுதான் பார்ப்பார், அவர் தனது வேலையாளாக இல்லாவிட்டாலும்கூட. இது போன்ற அணுகுமுறையால்தான் வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை ஏதோ தனிவகை ஜந்து என்ற விதத்தில் பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கும் குடும்பம் இருக்கும் என்றோ அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்றோ, வெள்ளையர்களைப் போலவே அவர்களுக்கும் காதல் ஏற்படும் என்றோ வெள்ளையர்கள் உணர்வதில்லை. வெள்ளையர்கள் தங்கள் மனைவியருடனும் குழந்தைகளுடனும் இருக்க விரும்புவதைப் போலவே கருப்பர்களும் விரும்புவார்கள் என்று அவர்கள் உணர்வதில்லை; தங்கள் குடும்பத்தை நல்லபடி நடத்தவும், உணவு, துணிமணிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் தேவையான அளவுக்குச் சம்பாதிக்கக் கருப்பர்கள் விரும்புவார்கள் என்று வெள்ளையர்கள் உணர்வதில்லை.
எமது மக்கள் கண்டுள்ள முன்னேற்றங்கள், அவர்களின் தெள்ளத் தெளிந்த பேச்சு, அவர்கள் இங்கே பெற்று வரும் வெற்றிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஈட்டி வரும் அங்கீகாரம் ஆகியவை எல்லாம் ஒருவிதத்தில் எனது உழைப்பின் விளைவே என்று கூறி வருகிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். பெரியதொரு படையில் இடம் பெற்றிருப்பவர்களில் யானும் ஒருவன். வெற்றி அல்லது சாதனை என்று ஏதாவது உண்டென்றால் அதற்கான பெருமை இந்தப் படையில் இருக்கிற எல்லாரையும் சாரும். முன்னேற்றத்துக்குக் காரணம் எனது உழைப்பு மட்டுமே அன்று. எனது தோழர்களும் நானும் _ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் _ ஆற்றியுள்ள கூட்டுப் பணியின் விளைவாகவே முன்னேற்றம் கண்டுள்ளோம்.
தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் ஓர் ஆப்பிரிக்கரின் நிலைமை எவ்வளவு கொடியது, எவ்வளவு அவலமானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் தண்டனையை ஏற்கத் தயாராய் இருக்கிறேன். இந்தச் சிறைகளில் ஏற்கெனவே இருந்துள்ளேன். சிறைச் சுவர்களுக்குள்ளேயும்கூட ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான பாகுபாடு எவ்வளவு அப்பட்டமானது, வெள்ளைக் கைதிகளைக் காட்டிலும் ஆப்பிரிக்கக் கைதிகள் எவ்வளவு மோசமாய் நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் நான் தேர்ந்தெடுத்திருக்கிற பாதையிலிருந்து என்னை விலகச் செய்திட முடியாது; என்னைப் போன்ற ஏனையோரையும் விலகச் செய்திட முடியாது.
எனது மக்களுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். நான் நிரபராதி என்றும், இந்த நீதிமன்றத்தில் கூண்டிலேற வேண்டிய குற்றவாளிகள் ஃபெர்வூடும்(பிரதமர்) அவரது அமைச்சர்களுமே என்றும் வருங்காலம் தீர்ப்பளிக்கும் _ இதில் எனக்குத் துளியும் அய்யமில்லை.
விடுதலை செய்யப்படும்போது, அநீதிகளை அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடர்வேன். அநீதிகள் பூண்டோடு ஒழியும் வரை தொடர்ந்து போராடுவேன்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போராட்டம் அன்னியர்கள் அல்லது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் நடைபெறுவதாக அரசு ஏற்படுத்தி வரும் எண்ணம் முற்றிலும் தவறானது. தனி மனிதன் என்ற முறையிலும் எனது மக்களின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையிலும் நான் என்ன செய்திருந்தாலும் சரி, தென் ஆப்பிரிக்காவில் நான் பெற்ற அனுபவத்தின் காரணத்தாலும், நான் பெருமையாகக் கருதுகிற எனது ஆப்பிரிக்கப் பின்னணியின் காரணத்தாலும் செய்தேனே தவிர, யாரோ வெளிநாட்டார் ஏதோ சொன்னார் என்கிற காரணத்தால் அல்ல.
நாசவேலைக்குத் திட்டம் தீட்டியதை நான் மறுக்கவில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையிலோ, வன்முறையின்பால் காதல் கொண்டோ அப்படிச் செய்யவில்லை. எனது மக்கள் பல்லாண்டு காலமாய் வெள்ளையரின் கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வருவதால் தோன்றியுள்ள அரசியல் நிலைமையை அமைதியாகவும் நிதானமாகவும் மதிப்பீடு செய்ததன் விளைவாகவே நாசவேலைக்குத் திட்டம் தீட்டினேன்.