ஆசிரியர் பதில்கள்

மே 16-31

கேள்வி : கலவர பூமியாக மாறிவரும் (பரமக்குடி, தருமபுரி, மரக்காணம்) தமிழகத்தைச் சீர்திருத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

– க.ரமேஷ், ஒரத்தநாடு

பதில் : ஜாதி வெறி, ஜாதி மோதல்களை வெறும் சட்டம் ஒழுங்குமுறையாக மட்டும் பார்க்காமல்,  நோய் நாடி நோய் முதல் நாடும் வகையில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு – அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கப் பிரச்சாரத் திட்டங்கள் – செயல் திட்டங்கள் தேவை. எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதற்கு முன்னுரிமை – ஒரு திட்டம்.

திருக்குறள்

கேள்வி : மலேசியத் தமிழர்கள் மாநாட்டில் உலகப் பொதுமறை நூலாக திருக்குறள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழர்களாகிய நாம் அதன் பெருமையை உணராதது ஏன்?

– கோ.கோபிசுகிதா, திருவள்ளூர்

பதில் : மலேசியத் தமிழர்கள் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும்கூட அறிவித்தார்கள்; நம் தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்கும் அரசியல், எதிலும் அரசியல் அல்லவா வந்தது – வேதனையான இது  மாறினால் தான் தமிழகம் விடியும்.

கேள்வி : பங்களாதேஷில் மதவெறிக் கூட்டம், நாத்திகர்களை வேட்டையாடத் துடிப்பதேன்?

– கே.குமரன், திருப்பூர்

பதில் : மதவெறிக்கும் மனிதத்தன்மைக்கும் வெகுதூரம் ஆயிற்றே.
நாடாளுமன்ற அமளி, முடக்கம் ஜனநாயகமா? கேலிக்கூத்தா?

– வெ.இராஜா,  கடலூர்

பதில் : மக்கள் பிரதிநிதிகள் மக்கள் வரிப்பணத் தையும், ஜனநாயகத்தை நாசமாக்குவதும் கண்டனத்திற்குரியது; பலமான ஜனநாய கத்தைப் பலவீனமாக்கும் கேலிக்கூத்து.

கேள்வி : சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என தமிழக மக்களின் விருப்பத் திற்கும், தமிழக வளர்ச்சிக்கும் எதிராக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பா.ஜ.க..வின் குரலை அப்படியே பிரதிபலிக்கிறதே?

– ஜி.சுருதி, பெரம்பலூர்

பதில் : பா.ஜ.க.வைவிட கூடுதலாக அல்லவா திட்டமே கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் குரலாக உள்ளது.பா.ஜ.க. திட்டம் நிறைவேற நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; இராமனைக் காப்பாற்றவே எங்கள் எதிர்ப்பு என்றல்லவா பா.ஜ.க. கூறுகிறது.

ஜெயலலிதா

கேள்வி : தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன என சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

– வெங்கட.இராசா, ம.பொடையூர்

பதில் : இந்த ஆண்டின் நல்ல நகைச்சுவை; ஊடகங்களில் வரும் கொலை, கொள்ளைகள் எல்லாம் பொய்ச் செய்திகள் போலும்!

மத்திய புலனாய்வுத் துறை அலுவலகம்

கேள்வி : மத்திய புலனாய்வுத் துறையைத் தன்னாட்சி அமைப்பாக மாற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளதா?

– எஸ்.கோவிந்தசாமி, பெரியார் நகர்

பதில் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசுக்கும் அதன் அமைப்புக்கான சட்ட திட்டங்களை, செயல்முறைகளை மாற்றிட உரிமையும் அதிகாரமும் உண்டே!

கேள்வி : நூற்றுக்கணக்கான பேருந்துகளைச் சேதப்படுத்திய – பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்திய கட்சியின் சொத்துக்களை அரசு ஏன் ஜப்தி செய்யக்கூடாது?

– இல.சங்கத்தமிழன், செங்கை

பதில் : சட்டப்படி செய்ய இடம் உண்டு; பொதுச் சொத்துக்குச் சேதம் எவர் ஏற்படுத்தினாலும் அது மக்கள் விரோதச் செயல் – தண்டிக்க, கண்டிக்க வேண்டிய ஒன்று.

கேள்வி : நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதைப் போல சட்டமன்ற நிகழ்ச்சிகள் மக்களைச் சென்றடைய தடையாக இருப்போர் யார்?

– வ.குமரேசன், நீடாமங்கலம்

பதில் : தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி (RTI) இக்கேள்வியை உரியவர்களிடம் கேட்டு விடை பெறுங்கள்.

மருத்துவர் ராமதாஸ்

கேள்வி : மாமல்லபுரம் சித்திரைத் திருவிழாவில் தொடங்கிய  மருத்துவர் ராமதாசின்  பயணம் திருச்சி சிறையில் முடிந்துள்ளது பற்றிய தங்களின் கருத்து?

– ஜி.கோபிசுகி, தருமபுரி

பதில் : உண்மையிலேயே மிகவும் வருத்தப் படுகிறோம். அவர் சிறையில் உள்ளதோ, பல வழக்குகளைச் சந்திப்பதோ விரும்பத் தக்கதல்ல – சமூகநீதிப் பாதையிலிருந்து தடம் மாறியதனால் இந்த, மீண்டும் துவக்கநிலைக்கே அவரும் வரவேண்டும் என்பதே நமது அவா. பழி வாங்கும் நடவடிக்கையினால் எத்தரப்பும் பயன் அடைய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *