குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்!

மே 16-31

– தந்தை பெரியார்

மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித் தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்துத் தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகின்றதோ, அதுபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.

 

அக்கொள்கைகள்தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரி யான கொள்கை நிர்ணயங்களை மீறக்கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற் காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப் பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால்தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை கடவுள் உண்டாக்கினார் என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், கடவுள் தண்டிப்பார் என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதன்முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்) ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி?

எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக் காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவுநிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத் திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதைத் திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது அது ஒரு புதிய மதமாக அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ள வர்கள் என் மதம் பெரிது, உன் மதம் சிறிது என்கிற மதச் சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டுவிடுகின்றது.

இந்தச் சண்டையில்லாமல் திருத்தப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும் அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கை களின் முக்கியங்களை அறிய முடியாமலேயே போய்விட்டது.

இப்படியேதான் மதங்கள் வெகுகாலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகிவிட்டது.

இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்தைச் சற்றும் அறிந்திருக்க மாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டு விட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.

சிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திப் பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும், பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்விதப் பலனும் இல்லாமல் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.

எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரா? அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை.

எவருமே என்றால் மத ஆச்சாரியர்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.
இந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது.

மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்தி லேயே திருப்தியடையச் செய்கிறதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டு மென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

அய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கை யையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியாட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவமன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருப்பதாகவும், நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.

மதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந் தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின் றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனைச் சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டுவிட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே கைலயங்கிரிக்குப் போய்விடலாம் என்கின்றான்.

சுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக்கொள்ளுகிற காரணத்தினாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறகு அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?

அதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ராமா என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான்.
அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.

அதுபோலவே, ஒரு முகமதியனும் குரான் வாக்கெல்லாம் கடவுள் வாக்கு. அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது. அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான்.

இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும், அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.

(11.8.1929 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *