விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை
நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் – சிறை யிலே அவர்கள் இருக்கவேண்டும் – அவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.
நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத்திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை எனத் தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.
கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாருடைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரி கட்ட வேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்குவோம்.
இந்த மாநாடு பொதுச் சொத்தைப் பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவைக் கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!!
– சென்னை,பெரியார் திடலில் 7.5.2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…
Leave a Reply