பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் ஒரு நாத்திக அறிவியலாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 83 வயதான அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் நகரில் சென்ற ஆண்டு அணுக்களை உடைத்து ஆராயும் போது, அணுக்களின் துணைத் துகள்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.
அந்தச் செய்தியை அவர் வெளியிட்டபோது பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்குக் கடவுள் துகள் என்று தாங்களாகவே பெயர் வைத்துவிட்டார்கள். அச்செய்தி முதன் முதலில் வெளிவரும் போதே அப்படி எழுதிவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் கடவுள் துகள் என்றே இன்னமும் எழுதுகின்றன. ஆனால், இந்தச் சொல்லை அத்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேராசிரியர் ஹிக்ஸ் மறுத்துள்ளார்.
கடவுளின் துகள்கள் என்று குறிப்பிடப்-படுவதை நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஹிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். காரணம், அவர் ஒரு நாத்திகர்!
பேராசிரியர் ஹிக்ஸ், உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் துணை அணுத்துகள்கள் தான் காரணம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார்.
ஆனால், 83 வயதான அந்த அறிவிய-லாளருக்கு -_ அவரது கண்டுபிடிப்பிற்கு கடவுளின் துகள்கள் என்ற பட்டப்பெயர் பிடிக்கவில்லை; ஏனென்றால், எல்லா-வற்றையும் படைப்பிக்கவல்ல ஒரு கடவுளின் கண்டு-பிடிப்பாக தனது ஆராய்ச்சி இல்லை என்பது அவர் முடிவு.
அந்தப் பெயர் வேடிக்கையாக, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிவியலாளரான லியோன் லெடர்மேன் என்பவரால் குறிப்பிடப்பட்டது. அது ஒரு நல்ல பெயரும் இல்லை என ஹிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
1993இல் லெடர்மேன் ஒரு புத்தகத்தில், கடவுளின் அணுத்துகள் என்ற பெயர் எப்படி வந்தது? உதாசீனம் செய்யப்பட்ட(God damn) துகள் என்று பெயரிட புத்தக வெளி-யீட்டாளர்கள் அனுமதிக்க-மாட்டார்கள். அதனால்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். எடின்பர்க் நகரைச் சேர்ந்த ஹிக்ஸ், முதலில் நான் ஒரு நாத்திகன். இரண்டாவது, அந்தப் பெயர் ஒரு விதமான வேடிக்கைதான்; நல்ல பெயர் இல்லை. நான் அதற்கு இடமளித்து இருக்கக்கூடாது. அது தவறானவற்றிற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னார்.
சென்ற ஆண்டு Hadron Collider என்ற பெரிய கருவியில் அணுவை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவரது கருத்து உறுதி செய்யப்பட்டது.
அறிவியல் உலகம் அந்தத் துகளை ஹிக்ஸ் போசான் துகள் (higgs boson particle) என்றுதான் அழைக்கிறது.
ஆனால், புத்தக வெளியீட்டாளர்களும், ஊடகத்தினரும் தங்களின் வியாபாரத்திற்காக இப்படி செய்வது எந்தவிதத்தில் நியாயம்?
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ராமாயணம் என்ற நாடகத்தை நடத்தினார். அது அச்சு அசல் வால்மீகி ராமாயணம். அதில் உள்ள் உண்மைகளைத்தான் அவர் எடுத்துக்காட்டினார். ஆனால், அந்த உண்மைகளைப் பொறுக்கமுடியாத ஆத்திகர்கள், எம்.ஆர்.ராதா நடிப்பது ராமாயணம் அல்ல: அது கீமாயணம் என்று தமது இயலாமையை வெளிப்படுத்தினர். அதையே சில பத்திரிகைகளும் வெளியிட கீமாயணம் என்றே அந்நாடகம் பரப்பப்பட்டது.
பகுத்தறிவை எதிர்கொள்ள முடியாத அறியாமையும் பிற்போக்கு மதங்களும் பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் வேலையை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை செய்துகொண்டிருக்கின்றன. அறிவுக்கு இன்னும் எத்தனை நாள்தான் திரைபோட்டு மறைக்கமுடியும்? அண்ட சராசரங்களையும் அகழ்ந்து ஆய்ந்து உண்மையைக் காட்டுவதல்லவா அறிவு. அதன் முன் கடவுள் எம்மாத்திரம்!
– பெரியாரிடி, ஆர்.ராமதாஸ் உதவியுடன்
நன்றி : சந்திரன், வீராசாமி