நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற அய்யத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாகப் பேசுவதில்லை.
சமூகத்தின் ஒழுங்கு குறித்து ஏற்படும் பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் ஆண்-பெண் உடல் தொடர்புடைய சிக்கல் என்றால் அதில் முதல் காரணம் உளவியலாகத்தான் இருக்கும்.
தமிழக ஊடகங்களில் சமூகம் குறித்த விவாதங்களில் துணிச்சலாகக் கருத்துக் கூறி வருபவர் டாக்டர் ஷாலினி. அண்மையில் டெல்லியில் நடந்த இரண்டாவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
“இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பண்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம் என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேசினார். தொடர்ந்து நம் கேள்விகளுக்கு சரமாரியாக பதிலளித்தார்.
அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன?
பொதுவாக ஓர் ஆணுக்குத் தன்மேல் நம்பிக்கை இருக்கும்போது, தன்னுடைய ஆளுமை மேல் Confidence இருக்கும்போது என்னுடைய தரம் மிகுதிதான் என்கிற தெளிவு இருக்கும். ஆணுக்கு தன்மீது நம்பிக்கையில்லாதபோதுதான் பிரச்சினை. ஆண், பெண் பாலியல் உறவுங்கிறது, ஒன்று அவருடைய உந்துதல் Instinct, இன்னொன்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வது Learning. மற்ற ஜீவ ராசிகளுக்கு, அது பாத்துக் கத்துக்கறதுக்கு ஒண்ணுமில்லே. பூச்சிப்புழுக்களுக்கெல்லாம் Brain ரொம்ப சின்னது. அது கத்துக்க முடியாது.
Instinct மூலமாக வாழ்ந்து முடிச்சுடும். அதுக்குப் புதுசா வித்தியாசமாக கத்துக்க வழியே இல்லை. ஆனால், மனிதர்கள் பிறக்கும்போது Instinct இருந்தாலும் எப்படி நிறைவேற்றனும்னு, பெரும்பாலும் பார்த்துத்தான் கத்துக்கிறோம்.
அப்போ, இந்தப் பையன் தவறான விசயத்தப் பாத்துட்டான்னு வச்சுக்குவோம். அவனுக்குக் கிடைக்குற மாதிரி, பெண்ணுன்னா இப்படி இருக்கணும், வளர்ந்த சம்மதிக்கிற பெண்ணோடதான் உடலுறவு கொள்ளணும்னு அவன் பார்த்திருந்தா அவன் கத்துக்குவான். அப்படிப் பார்க்காமல், விகாரமாகவே Sexual காட்சிகளையோ, Sexual வன்முறையையோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவன் பாத்துக் கத்துக்கிட்டான்னா, அவன் இப்படிக்கூட செய்யலாம் போலிருக்கே, அப்படிங்கிற விசயம் தெரிஞ்சு போச்சுன்னா, அவன் செய்ய முயற்சி பண்ணுவான். இது எப்படி இந்தப் பையனுக்கோ, பெண்ணுக்கோ தெரிய வருதுன்னு பார்த்தா, அவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அவுங்க சுற்று வட்டாரத்துல, இன்டர்நெட்டுல, Pornograph பார்த்திருக்கலாம்.
எதுவுமே இல்லைன்னா அவன் வெட்டியா இருக்கிறதுனால, விகாரக் கற்பனையோடு இருக்கலாம். இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் ஓர் ஆண் தன்னுடைய ஆண்மை மேல நம்பிக்கை இருக்கும்போது பெர்சனாலிட்டி மேல அவனுக்கு கான்பிடென்ட் இருக்கும்போது, ஒரு சுயமரியாதை இருக்கும்போது, என்னோட தரம் உயர்கிறது, என் தரத்திற்கு இதெல்லாம் செய்யக் கூடாது, அப்படின்னு அவன் மனதில் இருக்கும். தன்னைப்பற்றி ஒரு அபிப்ராயமே இல்லாதபோது, வெட்டியா இருக்குற பையனுக்கு, தான் அவமானப்படுறதா, தனக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிற மனிதனுக்கு இதுக்கு மேல எனக்கு என்ன இருக்குனு நினைக்கிற ஆண் இது மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடுவாங்க.
படித்தவர், படிக்காதவர் பெரிய அதிகாரத்தில் இருப்பவர் என்ற வேறுபாடின்றி இந்தத் தவறு நடைபெறுகிறது. தன் சொந்த மகளிடமே தவறாக நடந்த பிரச்சினை என்னிடம் வந்துள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் வக்கிர புத்தினு சொல்லலாமா-?
இல்லை. ஆணுக்கு இயல்பிலேயே பாலியல் இச்சை அதிகம். அவனைப்பற்றி அவனது மனதில் தெளிவான அபிப்ராயம் இல்லைன்னா அவுங்க எந்த லெவலுக்கும் போக வாய்ப்பிருக்கு. எனவே, யாராவது கடிவாளம் போட்டுக்கிட்டே இருக்கணும்.
கடிவாளம் என்றால்……?
கடிவாளம் என்பது வேறு வேறு விதத்தில் தேவைப்படுது. ஒரு பையனுக்கு விளையாட்டு, கல்வி என்று ஏதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்குமானால் பாலியலில் கவனம் செலுத்த மாட்டான். ஆணுக்கு இருக்கும் நேரத்தை -_ சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தினால் தனிமையில் ஈடுபடும் வாய்ப்புக் குறையுது. தேவையில்லாத சிந்தனைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியா இருக்கணும்.
இன்று இணையத்தில் நிறைய Pornograph படங்கள் இலவசமாகவே பார்க்கும் வசதி உள்ளது. எல்லா விதத்திலயும் பார்த்துக் கத்துக்கிறாங்க. பார்த்ததைச் செயல்படுத்தும் எண்ணம் உண்டாகிறது. இந்தப் பிரச்சினை உலகம் முழுவதும் பரவிக் கொண்டு உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும்.
தற்போது பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான உடைகள்தான் ஆண்களைத் தூண்டுவதாக உள்ளது என்னும் கருத்து பற்றி…..
ஒரு பெண் ஆபாசமா உடை அணிந்து செல்லும்போது, ஆண்கள் பின்தொடர்ந்து வருவார்களே தவிர, தொடுவதற்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏதாச்சும் நம்மளப் பண்ணிடுவாரோ என்ற பயம்தான் இருக்கும். அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணுங்களைத்தான் Abuse பண்ணுவாங்க. ஆண்கள் பெண்கள் முகபாவனைக் குறிப்பைத்தான் பார்ப்பார்களே தவிர, உடைகளை அல்ல.
எனவே, பெண்கள் Body Language-_ல கவனமா இருந்தாலே போதும். பெண்கள் Body Language- கான்பிடென்டா, தைரியமா இருந்தா ஆபத்து வராது. உடை என்பது ஒரு பிரச்சினை அல்ல.
இன்றைய சமூகத்தின் கட்டமைப்பை மீறி தூண்டப்படக் காரணம்?
தன் ஆசைகளை உடனே நிறைவேற்றிக் கணும்ங்கிற நினைப்பு வந்துடுது. பொறுமையா இருக்கணும்ங்கற புரிதல் இல்லாமல் போகிறது. கேட்டதும் தேவைகள் எல்லாமே கிடைத்து விடுகிறது. கடைக்குச் சென்றால் எல்லாம் வாங்கிடலாம். இல்லைங்கிறதே இல்லைனு ஆகிவிட்டது. நினைத்ததும் எல்லாவற்றையும் சாதிக்க முடியுது. கஷ்டமே இல்லாமல் கிடைக்கிறது. எனவே சுயகட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.
இதில் பெற்றோரின் பங்கு ஏதேனும் உள்ளதா? சரியாக வளர்க்கத் தவறியதுதான் காரணமா……?
பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதே கிடையாது. பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அப்படி வளர்ப்பதில்லை. அவர்கள் மொழியிலேயே பிரச்சினைகளையும் _ எதிர்கொள்ளும் விதத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறார்கள். சில பெற்றோர் சொல்லி வளர்க்கின்றனர். ஆண் குழந்தைகளைக் குறிப்பிட்ட வயது வந்ததும் எதுவும் சொல்லி வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளுக்காவது பருவ வயதை அடையும்போது சில விஷயங்களைக் கற்றுக் கொடுப்பர். ஆண் குழந்தைக்கு எதுவும் இல்லை. எப்ப, எப்படிச் செயல்படுத்தணும்னு சொல்லித் தரணும். சொல்லித் தர பெற்றோர் வெட்கப்படுகின்றனர். இதனால் ஆணின் மனதில் அறியாமை உள்ளது. மனநிலையில் தெளிவில்லாமல் போயிடுது. தவறுக்குக் காரணமாகி விடுகிறான். பெண் குழந்தையை அம்மா, பாட்டி train பண்ணிவிடுவது போல் ஆண் குழந்தை மீது கவனம் செலுத்துறதில்லை. எனவே, ஆண் குழந்தைகளும் கஷ்டப்படுறாங்க. மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறாங்க.
எந்த மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டும்?
உலகத்தை – குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது ஆணின் கடமை. உன்னை நம்பி ஒரு பெண் வருவா அவளையும் நீ நல்லவிதமா காப்பாத்தணும்னு, உன் குழந்தைகளை சந்தோஷமா வச்சிக்கணும்னு சொல்றதில்ல, அப்பா அம்மாவ பார்த்துக்கணும்தான் சொல்வோம். பெண்களும் அப்பா அம்மாவைப் பார்த்துக்கலாமே. ஆண் மட்டும் வேலைக்குப் போகணும். சம்பாதிக்கணும். கார் வாங்கணும், அம்மா அப்பாவைப் பார்த்துக்கணுமா? மற்றொன்று அவனோட பிரக்ஞையே அவனுக்கு இல்ல. இரண்டாவது அவளோட Sexuality பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது. அதனால அவன் நிறைய, ஏடாகூடமா போய் மாட்டிக்கிடுறாங்க. அதுக்கப்புறம் அவனைத் திட்டுறோம் இப்படி நடந்துக்கிட்டியே கரெக்டான்னு. இப்படி நடந்துக்கறதுக்கு அறியாமைதான் முக்கியமான காரணம். அதனை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமணத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறதா?
அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை. பாலியல் குற்றத்துல மாட்டின அந்த 22 வயது பையன் திருமணமானவன்தான். அவனால சரியான முறையில உறவு கொள்ள முடியாததால், Candle Bottle உள்ளே சொருக வேண்டிய அவசியம் இல்லைல்ல. இயலாமைதான். இயலாமை இருக்கிறதாலதான் பரீட்சைப் பொருளா வைத்து ஏடாகூடம் பண்றாங்க.
இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பன்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம்.
திருமணமானவருக்கே அப்படி ஓர் எண்ணம் குழந்தைகள் மீது வருகிறதே?
பொதுவாகவே, ஆணின் மூளையானது வக்கிரங்களுக்குட்பட்டதுதான், Sexual drive அதிகம். ஏதேனும் ஒரு கட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் கரெக்டா அவன் வருவான்.
வீட்டுக்கு அடங்காமல் போற பசங்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், சரியாகிவிடும் என்கிறார்களே? உண்மையா?
நம்ம ஊர்ல வந்து ஏதாவது பெண்ண பலி கொடுத்துவிட்டால் சரியா வந்திடும்னு நினைக்கிறாங்க. ஆனால், எந்தக் கடவுளுக்கும் பெண்ணைப் பலிகொடுக்கவே மாட்டாங்க. ஆடு, மாடுன்னு ஆணைத்தான் பலி கொடுப்பாங்க. ஒரு பெண்ணைப் பலிகொடுக்கிற சமுதாயம் உருப்படாது.
இருந்தாலும் ஆக்க சக்தியை எவனாவது அழிப்பானா? விதை நெல் இருக்கிற வரைக்கும்தானே அடுத்த தலைமுறை உருவாகும். விதை இருக்கிற நெல்லை எரிச்சுட்டா.. எவ்வளவு முட்டாள்தனம். உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டுவது போல் ஆகும். பையன் சரியில்லைன்னா அதைச் சரிக்கட்டணும். அதை விட்டுட்டு யார் தலையிலும் கட்டிட்டு Responsibility கிடைக்கலன்னு சொல்றது தவறானதுதான். எல்லோருக்கும் திருமணமானது, ஒரு பொண்ணு வந்தா அடங்கிடுவான். இல்லைன்னா, எனக்கப்புறம் யார் வந்து பார்ப்பார்கள்,
அந்தக் காலத்துல பெண்கள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், ஏழேழு ஜென்மத்துக்கும் ஒரே புருஷன்தான். இந்தக் காலத்துப் பெண்கள் கணவன் சரியில்லை என்றால், சரிதான் போடா நீ கிளம்புன்னு சொல்லிவிடுகிறார்களே. பெண்கள் எல்லாம் Advance ஆகிட்டார்கள். ஆண்களும் பெரியவர்களும்தான் Advance ஆகல.
குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதை எப்படித் தவிர்ப்பது?
முதலில் அதை, குழந்தைக்கு உடலோட பாகங்களைப் பற்றி தெளிவா வெட்கப்படாமல், கூச்சப்படாமல் சொல்லணும். இது ஆண்குறி, இது பெண்குறின்னு, அவங்கவங்க வீட்டுல என்ன செல்லப் பெயரைச் சொல்றாங்களோ, அதை use பண்ணி சொல்லித்தரணும்.
அதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லைங்கிறதைச் சொல்லணும். இந்தப் பாகத்தைச் சுத்தமா வச்சுக்கனும்னு சொல்லித்தரணும். அவுங்க என்ன Language பேசுறாங்களோ, அதற்கேற்ற மாதிரி வார்த்தைகளை நாம அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரணும். பெண் குழந்தைகளின் உறுப்பை யாரும் தொடக் கூடாது. அம்மா அல்லது பாட்டிதான் தொடணும். அப்பாகூட தொடக்கூடாது. வேறு யாரும் தொடக்கூடாது.
தொட்டால் என்னிடம் வந்து சொல்லணும்ங்கிறத ஒன்றரை வயதிலிருந்தே சொல்லித் தரணும். குழந்தைகளுக்கு நல்லாத் தெரியும். யாராவது தொட்டால் சொல்லிடுவாங்க. பெரும்பாலான பிரச்சினை, நமக்குத் தெரிஞ்சவங்கதான் செய்வாங்க. நமக்குத் தெரியாத யாரோ கிட்னாப் பண்ணிட்டுப் போயி, ரேப் பண்ண மாட்டாங்க. கூடவே இருக்குற யாராவது, செய்யறதுனால, கூட இருக்குற எந்த ஆணா இருந்தாலும், எச்சரிக்கையா இருக்கணும்.
கணவனாகவே இருந்தாலும் எச்சரிக்கையாகவே இருக்கணும். ஏன்னா, அப்பாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளையும் நாம் பார்க்கிறோம். ஒட்டு மொத்தமா ஏரியாவிலே சின்ன பசங்க, பெரிய பசங்க, வயசானவங்கன்னு பாகுபாடே இல்லாமல் யார்கிட்டேயும் குழந்தையைத் தனியே விடாமல் யாரிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
இது பெண்குழந்தையைப் பாதுகாக்க வேண்டியவங்க, பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய வேலை. ஆண் குழந்தையை டிசைன் பண்ணும்போது, நீ கெட்டிக்காரன், புத்திசாலி என்று அவனது தன்னம்பிக்கை (Confident) யை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் தரம் அதிகமாகிவிடும். அதற்கு ஏற்றாற்போல் அவன் நடந்து கொள்வான். தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுகிறான்.
ஆண் பிள்ளைகளை இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் வளர்க்கும் முறைதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று சொல்லலாமா?
இப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் பகிர்ந்து கொள்வதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கொரு I-pad அய் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை I-pad அய் நோண்டிக் கொண்டிருக்கிறது. அப்போது பிராக்டிகலாகப் பார்க்க வாய்ப்புள்ளது. தனிமையும் புத்திசாலித்தனமும் வக்கிரமும் சேரும்போது அந்தக் காம்பினேஷன் ரொம்ப மோசமானது. எனவே, குழந்தைகளிடம் அதிக நேரம் செலவு செய்து நிறைய விஷயங்களைச் சொல்லித் தரவேண்டும். அவர்களது மனதைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு குரங்கு. அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பயிற்சியை _ பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
பாலியல் கல்வி இன்றைய குழந்தைகளுக்கு அவசியமா?
ரொம்ப ரொம்ப அவசியம்.
இது உளவியல் ரீதியா குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துக்கொண்டு வருமா?
ஒரே நாளில் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஒரு வயதில் இருக்கும்போதே நாம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தரக்கூடிய விஷயம். அட்லீஸ்ட் பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை என்றால், கல்வித் திட்டத்திலாவது நாம் கொண்டு வரவேண்டும். அதுவும் இல்லையென்றால், நாம் ஊடகங்கள் வாயிலாகச் சொல்லித் தரவேண்டும். எதுவுமே, அப்பா, அம்மாவும் சொல்லித் தரமாட்டாங்க. பள்ளியிலும் சொல்லித் தரமாட்டங்கன்னா, ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அறியாமையால் தவறான கருத்துகள் வைத்திருக்கிறார்கள். அதனால் நிறைய பிரச்சினைகள் வரும். ஓர் ஆணுக்கு வக்கிரம் இருந்தாலும் அது உலகத்தையே பாதிக்கும். அதனால் நாம் போர்க்கால அடிப்படையில் ஆண்களின் புத்தியைத் திருப்பித் தரணும் என்பது ரொம்ப அவசியமாக இருக்கிறது.
பாலியல் கல்வி முறை என்று நேரடியாக இல்லையென்றாலும் வேறு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?
பாலியல் கல்வி என்று தனிப்பட்ட முறையில் சொல்வது தவறு. இது ஒரு வாழ்க்கைக் கல்வி. உடம்பு என்பது என்னவென்று நமக்குத் தெரிய வேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிய வேண்டும். கல்யாணம்னா, செக்ஸ்னா என்னவென்று இயல்பாக எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது வாக்கிங் என்பது ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்கள். காட்டுவாசிக்கிட்டப் போயி வாக்கிங் ரொம்ப முக்கியம்பான்னு சொன்னா அவன் சிரிப்பான். அதெல்லாம் நான் செய்துக்கிட்டு இருக்கேன். இதப்பத்தி நீ பேசாதே என்று சொல்வான். இயல்பாக இருக்கிற விஷயத்தை நாம் தனிப்பட்ட முறையில் (ஸ்பெஷல்) செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இப்பக் காட்டுவாசிங்க இயல்பாகவே பேசுவாங்க. இப்படிச் செய்தால் இப்படியாகும், குழந்தை இப்படிப் பிறக்கும், ஆணும் பெண்ணும் இப்படி இருப்பாங்க என்று இயல்பா பேசுற விஷயத்தை மறைத்து மறைத்தே நாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கிவிட்டோம். இதுமாதிரி இல்லாமல் இயல்பாக இருந்தால் பிரச்சினைகள் சரியாகும்.
உளவியல்ரீதியான பயிற்சி ஏதாவது…..?
உளவியல்ரீதியான பயிற்சி என்பது இன்றைக்கு நிலைமையில் உளவியலுக்கான மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவுங்க சொல்லித் தரமாதிரி இருக்கு. ஆனால், காலம்காலமாக சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த உளவியல் அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்திருக்காங்க. திருக்குறள் என்பது உளவியல் ரீதியான பயற்சி மாதிரிதான். Personality development manual மாதிரி திருக்குறள் இருக்கிறது. நாலடியாரும் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ நூல்கள் நம்மிடம் இருந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.
உளவியல் ரீதியாக மனசுதான் நமக்கு ரொம்ப முக்கியம். இல்லை என்றால் நாம் மிருகம்தான். மனசு மட்டும்தான் நம்மை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், அந்த மனதைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் மிருக லெவலுக்குப் போய்விடுவோம். அதைவிட மோசமானது, மிருகங்கள் இதுமாதிரி செய்யாது. ஆனால் நாம் செய்வோம். புத்தி சொன்னதைத் தப்பாகப் பயன்படுத்தும்போது ஆபத்தாக ஆகிவிடும். நமக்கு மனதை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதல் இருந்துக்கிட்டே இருக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். நம்ம பசங்களுக்கு எல்லாத்தையும் சொல்லித் தந்துவிட்டு Moral scienc அய்ச் சொல்லித் தரமாட்டோம். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவு செய்வது கிடையாது. தெளிவு, அறிவு, ஞானம், சரியான Learning இருந்தால் சரியாகிவிடும். தெளிவு கடையில் கிடைக்காது. நாம்தான் சொல்லித் தரணும்
– சந்திப்பு : செல்வா