சமயத்துறையில் பண்டைத் தமிழர் வழிபட்ட கடவுள், ஜாதி, இனம், நாடு, காலம், இடம் ஆகிய வேறுபாடுகளற்ற கடவுள் மட்டுமல்ல; சமய பேதமும் மொழி பேதமும் கடந்த கடவுள். சமய பேதம் கடந்த கடவுளை வழிபட்ட அவர்கள் தேசியச் சமயமும் சமயம் கடந்த சமயமாய் இருந்தது. இன்றைய அரசியல் மொழிப் பாணியில் கூறுவதானால் அவர்கள் கடவுளும் சமயச் சார்பற்ற கடவுளே, சமயமும் சமயச் சார்பற்ற சமயமே. அத்துடன் அவர்கள் அரசியல், சமயம், சமுதாயம், குடும்பம், கலை, இலக்கியம், நாகரிகம், அறிவியல் ஆகிய யாவுமே சமயச் சார்பற்றவை ஆகும். இப்பண்பை ஆரியருக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிக கால இந்திய மாநிலப் பண்பாக (தற்போதைய) இந்திய மாநில முதல் அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு அழகுபட விளக்கிக் கூறியுள்ளார். அவர் கருத்து வருமாறு:
அந்நாளைய சமய வாழ்வு பேரளவில் இந்நாளைய இந்திய மக்கள் சமய வாழ்வையே பெரிதும் ஒத்திருந்தது. இந்நாளைய சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி, இந்நாளைய மூட நம்பிக்கைகளில் பல கூட அன்று நிலவியிருந்தன. ஆனால் இந்நாளைய சமயத்துக்கும் அந்நாளைய சமயத்துக்கும் இடையே ஓர் உயர் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடு உண்டு. அந்நாளைய வாழ்வில் சமயம் ஒரு பகுதி. இன்றோ நம் வாழ்வு சமயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் அந்நாளில் குருமார் இருந்தனராயினும், அவர்கள் சமயப் பணியாளர், தொண்டர்களாகவே இருந்தனர். சமய வாழ்விலோ, அரசியல், சமுதாய வாழ்வுகளிலோ, கலை இலக்கிய, அறிவியல் துறைகளிலோ, நாகரிகத்திலோ அவர்கள் ஆட்சியும் ஆதிக்கமும் கிடையாது. குருமாரும் அன்று மற்ற மனிதரைப் போல மனிதராகவே சரிசம நிலையில் வாழ்ந்தனர்.
பண்டித நேரு அவர்கள் தீட்டிக் காட்டும் ஆரியருக்கு முற்பட்ட கால இந்திய நாகரிகம் இதுவே. புத்த சமயத்தில் ஆரிய குருமார் ஆதிக்கம் ஏற்படும்வரை அதாவது வடகிழக்கிந்தியாவில் ஆந்திரப் பேரரசர் ஆண்டகாலம் வரை நிலவிய பழைய இந்திய நாகரிகமும் இதுவே. சங்ககாலத்திலும் ஓரளவு சோழப் பேரரசர் காலம் வரையும் நிலவிய தமிழர் நாகரிகமும் இதுவே.
இந்த உயர் நாகரிகம் படிப்படியாகக் கெட்டழிந்து வந்த போக்கு உண்மையில் இந்நாளைய சீர்திருத்தவாதிகள் படிப்படியாக சீர்திருத்த விரும்பும் படிகளின் நேர் எதிர்போக்கேயாகும்.
முதலாவது சமயம் சாராத கடவுள் _ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்_ என்ற கருத்து, சமயங்கள் சார்ந்த கடவுள்கள்; சமயச் சார்பான பல கடவுள்களைக் கொண்ட புராண சமயக் கருத்துக்கு வழிவிட்டது.
மொழி வாழ்வின் சீர்குலைவு: இலக்கிய வாழ்வின் பண்பு கேடு:
மொழி சாராக் கடவுள் _ மக்கள் தாய் மொழிகளிலேயே அவர்கள் பக்திப் பாடலைக் கேட்டு வந்த கடவுள் _ மொழி சார்ந்த கடவுளாய் _ மக்கள் தாய் மொழிகள் எதனையும் பயின்றறியாத கடவுளாய் _ தனிமொழி, தனக்கென ஒரு தனி மொழி யுடைய கடவுள் ஆயினார். கடவுளுக்காக சமஸ்கிருத மொழி என்று ஒரு புதிய தெய்வீக மொழி படைத்து உருவாக்கப்பட்டது.
சங்க காலத்தில் தெய்வமொழி என்ற பெயர் வேத மொழிக்கு மட்டுமே பெயராய், புத்தர், சமணர், வேத நெறியினர் ஆகிய மூவகுப்பினருக்கு மட்டுமே சமயச் சார்பான மொழியாய் இருந்தது. ஆனால் தமிழ் வாழ்வை இம்மொழி பாதிக்கவில்லை. ஏனெனில் அந்நாளில் தமிழைப் போன்ற இலக்கிய இலக்கண வளம் அதில் இல்லை. ஆனால் வடதிசையில் ஆந்திரப் பேரரசராலும், பல்லவர் முதலிய தென்னாட்டரசராலும் தொடக்கத்தில் பாளி மொழியும், அதன்பின் 4_5ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய சமஸ்கிருத மொழியும் தமிழைப் பின்பற்றி இலக்கிய மொழியாக வளர்க்கப்பட்டன. அது உயிரிலாச் செயற்கை மொழியானாலும் அது கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குள் தமிழுடன் போட்டி யிடவல்ல இலக்கிய மொழியாயிற்று.
பல்லவர் காலத்திலிருந்து பாளியும், சமஸ்கிருதமும் தென்கிழக்காசியா வெங்கும், இந்திய மாநிலத்திலும் தாய் மொழி வாழ்வை முழுதும் துடைத்தழிக்கத் தொடங்கின. சிறப்பாகச் சமஸ்கிருதம் தமிழின் பண்பாட்டுக்கும் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் தடங்கலாக ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இந்த ஆதிக்கம் தமிழ் மொழியின் பண்பாட்டையும் தமிழர் பண்பாட்டையும் மாற்றியமைத்த அளவுக்கு, தமிழரின் வளத்தையோ வீரத்தையோ கெடுக்க முடியவில்லை.
அத்துடன் தமிழகம் சூழ்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய தமிழின மொழிகளிலும், சிங்களத்திலும் _ ஓரளவு இவை கடந்து மராத்தி, வங்காளி, இந்தி ஆகிய மொழிகளிலும், தமிழின் ஆற்றலே ஓரளவு புது வாழ்வு அளித்தது. ஆனால் இவற்றில் அரைகுறையாகச் செலுத்தப்பட்ட சமஸ்கிருதத்தின் ஆதிக்க அழிவாற்றல் இவ்வெல்லை கடந்து வடமேற்கு, வடக்கு இந்தியாவில் தாய்மொழி வாழ்வுகளின் தடத்தையே அழித்துவிட்டது.
(நூல்:தென்னாட்டுப் போர்க்களங்கள்)