நான் நானாக இருக்க
விடுவதில்லை யாரும்.
என் கருத்தைச் சொல்லச் சொன்னாலும்
முடிவெடுப்பது வேறு யாரோ.
ஆனால்… இன்று… இப்பொழுது
என் கருத்தைக் கேட்பதோடு
என் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றனர்.
முன்பு அவுஸ் ஒய்ப்பாக இருந்தேன்.
இன்று ஆசிரியர் பணிக்குப் போகிறேன்
அவுஸ் ஒய்ப் என்றால் மட்டும்
யாரும் சும்மா இருப்பதில்லை வீட்டில்.
தண்ணீர் தெளித்து
பெருக்கி, கோளமிட்டு,
சமைத்து, துணித் துவைத்து
நாள் முழுவதும் வேலைதான்.
முன்பு சம்பளம் இல்லாத வேலைக்காரி
இப்பொழுது சம்பளம் கொடுத்து வேலைக்காரி.
சமையலறைக்கும், கட்டிலறைக்கும்
நடந்த நடை.
இன்று வகுப்பறைக்கும் தொடர்கிறது.
அவுஸ் ஒய்ப்பிற்கு
ஒரு பக்க அடி
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு
மத்தளம் போல
இரு பக்கமும் அடி.
என் குடும்பம் தான்
இருந்தாலும் சொல்லத் தோன்றியது
யாரையும் அவுஸ் ஒய்ப் என்று
ஏளனப் படுத்தாதீர்.
– புதுவை பெ. குமாரி