Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரை உடனே நீக்குக! – மஞ்சை வசந்தன்

ளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே நூறு விழுக்காடு பொருத்தமானது, ஏற்புடையது. தமிழ்நாடு பெரியார் மண். இந்திய மாநிலங்களிலே தனித்தன்மையுடன் எல்லாவற்றிலும் தனி வரலாறு படைத்து வருவது.

அரசமைப்புச்  சட்டத்தை முதன்முதலில் திருத்தச் செய்து இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தது; 69% இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டிற்கு உறுதி செய்தது; இந்தித் திணிப்பை எதிர்த்து தாய்மொழியைக் காத்தது; இருமொழிக் கொள்கையை நிலைநாட்டியது; மாநில உரிமைகளைக் காப்பது; விடுதலை நாளில் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தது; இந்தியாக் கூட்டணியை அமைத்தது; பாசிச பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் கட்டுப்படுத்தியது; நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து விதிவிலக்குப் பெறப் போராடுவது என்று பலவற்றைத் தமிழ்நாட்டை ஆளும் திராவிட ஆட்சி செய்து வருகிறது.

மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அப்படிப்பட்ட “திராவிடமாடல் ஆட்சி” நடக்கும் நிலையில், இந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்குக் கேடு செய்வதற்காகவே ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற நாள் முதலே தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், திராவிட சமூகநீதிக் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசியும் செயல்பட்டும் வருகிறார்; சனாதன செயல் திட்டங்களை நுழைப்பதில் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

திருவள்ளுவருக்குக் காவி உடை

கவர்னர் மாளிகையில் 24, மே 2024 அன்று நடந்த திருவள்ளுவர் திருநாள் விழாவுக்கு, கவர்னர் ரவி ஏற்பாடு செய்தார். விழா அழைப்பிதழில், காவி உடை, நெற்றியில் திருநீறு அணிந்த திருவள்ளுவர் படத்தை அச்சிட்டிருந்தார்.

திருவள்ளுவருக்குப் பிறந்த நாள் கொண்டாடும் நோக்கில், 1935ஆம் ஆண்டு ஜனவரியில், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மசிறீ சுப்பையா பிள்ளை, சிவக்கண்ணு பிள்ளை மற்றும் சிலர் சேர்ந்து ‘திருவள்ளுவர் திருநாள் கழகம்’ என்ற அமைப்பைத் துவக்கினர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் மறைந்த நாளாக மாசி உத்திர நாளும் கடைப்பிடிக்கப்பட்டன.

அந்த நடைமுறையை ஏற்று திருவள்ளுவர் திருநாள் கழகம் சார்பில், 1935ஆம் ஆண்டு மே 18, 19ஆம் தேதிகளில், சென்னை பச்சையப்பன்  மண்டபத்தில், தமிழகப் புலவர்களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி, திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

கலைஞர் முதல்வரான பின், 1971ஆம் ஆண்டு முதல் தை 2ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர் கோவிலில் பின்பற்றப்படும் நடைமுறையைப் பின்பற்றி, வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினமான 24.5.2024 அன்று கவர்னர் ரவி, திருவள்ளுவர் திருநாள் விழாவை, கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்தார்.

மாலை 5.00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட அனுப்பப்பட்ட அழைப்பிதழில், 24.5.2024 அன்று திருவள்ளுவர் காவி உடையுடன் திருநீறு அணிந்து காட்சி அளிக்கும் படத்தை அச்சிடச் செய்தார்.

தமிழ்நாடு அரசு திருநீறு இல்லாத வெள்ளை நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியிருக்க, திருவள்ளுவருக்குக் காவி உடையும், பட்டையும் கொட்டையும் போடச் செய்து தமிழ்நாடு அரசின் கொள்கைக்கும், நடைமுறைக்கும் எதிராகச் செயல்பட்டார்.

காந்தியை மட்டம் தட்டினார்:

காந்தியைச் சுட்டுக்கொன்றவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், ஆளுநர் ரவி காந்தியின் பெருமையைச் சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டார். நேதாஜி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், “காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் பலன் தரவில்லை” என்று கூறினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்கு முதன்மையானது என்று இந்திய மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருமே அறிவர். அப்படியிருக்க இந்திய விடுதலைக்கு காந்தியின் போராட்டங்கள் பலன் தரவில்லை என்று பேசியது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி! விடுதலைக்கு எந்த வகையிலும் முயற்சி மேற்கொள்ளாதது ஆ.எஸ்.எஸ். அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஆர்.என்.ரவி காந்தியாரின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி  வரலாற்றுக் குற்றம் செய்தார். காந்தியை ஒருமுறை கொன்றது போதாது என்று மறுபடியும், மறுபடியும் கொல்லும் குற்றத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்கிறார்கள்.

வள்ளலாரை சனாதனியாக்கினார்:

வள்ளலார் சனாதன எதிர்ப்பையே முதன்மை இலக்காகக் கொண்டு வாழ்நாள் இறுதிவரைப் பாடுபட்டவர். சமதர்மத்தின் முன்னோடி. ஜாதி, மதம், வர்ணம், சடங்கு, மூடச்செயல்களைக் கண்டித்தவர்; அவற்றிற்கு எதிராகப் போராடியவர். காவி அணியாதவர். கடவுளை ஜோதியாகக் கண்டவர். அப்படிப்பட்ட சனாதன எதிர்ப்பாளரான வள்ளலாரை “சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம்” என்று கூறினார் இந்த ஆர்.எஸ்.எஸ்.ரவி.

வள்ளலாரின் 200ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு, “பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசினார். இது எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபு, மோசடி. சனாதனம் என்பது, ஆரியப் பார்ப்பனர்களால் புஷ்யமித்திர சுங்கன் காலத்தில் நுழைக்கப்பட்டது உண்மை அப்படியிருக்க சனாதனம் பத்தாயிரம் ஆண்டுகள் பழைமை உடையது என்பது எவ்வளவு பெரிய மோசடி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயன்றார் இவர். ஒன்று, வள்ளலாரைச் சனாதனியாக்கினார். இரண்டு சனாதனத்தைப் பத்தாயிரம் ஆண்டு பழைமையுடையது என்று தூக்கிக்காட்டினார். இப்படிப்பட்ட மோசடியை உலக வரலாற்றிலே காணமுடியாது. அப்படிப்பட்ட உலக மகா மோசடிக்காரராக ஆளுநர் தம் கருத்துகளை வெளியிட்டார்.

திராவிட எதிர்ப்பும் வெறுப்பும்

ஆரியத்தையும், சனாதனத்தையும் தூக்கிப் பிடிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் திராவிடத்தை வெறுத்தும், எதிர்த்தும் செயல்படுகிறார். திராவிட என்ற சொல்லையே தவிர்க்கிறார். திராவிடத் தலைவர்களை விலக்குகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை உயர்த்திப் பேசுகிறார். திராவிட இயக்கத்தாலே தமிழ்நாடு கெட்டதாக கருத்துப் பரப்பி வருகிறார்.

குழந்தைத் திருமணம்

சட்டப்படி ஒழிக்கப்பட்ட குழந்தைத் திருமணத்தை, இன்றைக்கு – அறிவியல் உலகில் – பெண்ணுரிமை உச்சத்தில் பேசப்படும் காலத்தில், ஆதரித்துப் பேசுகிறார். குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், சட்டத்தைக் காக்க வேண்டிய, செயல்படுத்த வேண்டிய ஆளுநர், சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். சிதம்பரத்தில் தீட்சதர்  குடும்பங்களிடையே நடத்தப்பெறும் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார். தானே குழந்தைத் திருமணம் செய்துகொண்டதாக எடுத்துக்காட்டி ஏற்பளிக்கிறார். இதுவெல்லாம் எப்படிப்பட்ட குற்றச்செயல்கள்! அந்தக் குற்ற உணர்வு அறவே இன்றி, மிடுக்காக தன் குற்றச் செயல்களைச் செய்துவருகிறார்.

வேதங்களை உயர்த்திக் காட்டுகிறார்

“வேதங்களின் தயாரிப்புதான் நம் பாரதம் என்றும், உலகம் முழுவதும் வேதங்களைப் பரப்ப வேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.

மகரிஷி சாந்திபினி ராஷ்ட்ரிய வேதவித்யா பிரிஷ்தான் மற்றும் யோக க்ஷேமா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வேத சம்மேளனம் என்னும் நிகழ்ச்சியில் 12.12.1923இல் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி,

வேதங்கள் மூலம் நித்திய அறிவைக் கொண்டு ரிஷிகள் நாட்டை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர். நமது பாரதம் வேதங்களின் தயாரிப்பாகும் வேதங்கள்தான் நம் நாட்டின் தாய்.

நம் நாட்டில் வந்த சம்பிரதாயத்தைப் பின் தொடர்ந்தாலும் சரி, எந்தச் சம்பிரதாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தாலும் சரி, அனைத்துக்கும் ஆதாரம் வேதங்களாகத்தான் இருக்கும். அதிலிருந்து தான் நம் நாட்டின் பரிணாம வளர்ச்சி தொடங்கியது என்கிறார்.

வேதங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை எழுதியவர்கள் யார்? அவற்றிற்கு எழுத்து வடிவம் உண்டா? வாய் வழியாக வந்தது என்றால், அது உருப்படியாக எவ்வித மாற்றமுமின்றி வந்திருக்குமா?

ரிஷிகள் வழி நடத்தினார்களாம்? யார் அந்த ரிஷிகள்? அவர்களின் பிறப்புகள் எத்தகையவை?

மானுக்குப் பிறந்தவன் கலைக்கேட்டு ரிஷியாம், நரிக்குப் பிறந்தவன் ஜம்புகர், குடத்திற்குப் பிறந்தவன் அகத்தியன், தவளைக்குப் பிறந்தவன் மாண்டவ்யன் என்றும், கழுதைக்குப் பிறந்தவன் காங்கேயன் என்றும், நாய்க்குப் பிறந்தவன் சவுனகர் என்றும், கரடிக்குப் பிறந்தவன் ஜம்புவந்தர் என்றும், குதிரைக்குப் பிறந்தவன் அஸ்வத்தாமன் என்றும், கிறுக்கி வைத்துள்ளனரே, இந்த ரிஷிகள் தான் மக்களை வழி நடத்தியவர்களா?

வேதங்கள் பற்றி வரலாற்று அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் (சூத்திரர்) என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களிலும் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணம்” என்று எழுதி இருப்பவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள் அல்ல; டாக்டர் ராதா குமுத முகர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., (இந்து நாகரிகம் பக்கம் 69) என்ற பார்ப்பனர்தானே!

ரிக் வேதம் இன்னொன்றையும் சொல்லுவதை திருவாளர் ரவிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

“தெய்வாதீனம்ஜகத் சர்வம்

மந்த்ரா தீனம் தூதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்”

(ரிக் வேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

இதன் பொருள் என்ன?

“உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டன. பிராமணர்களே நமது கடவுள்” – இதுதான் ரிக்வேதம்.

கடவுளைக் கீழ்மைப்படுத்தும். இந்த வேதம்தான் உலகம் முழுதும் பரவ வேண்டுமாம். இந்த ஆளுநர் கூறுகிறார்.

புதிய (குலக்) கல்வித் திட்டத்தைப் புகுத்தத் துடிக்கிறார்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய (குலக்) கல்வித் திட்டத்தைப் புகழ்ந்து அதைத் தமிழக மக்கள் ஏற்க வேண்டும் என்கிறார். கல்வி ஒன்றிய அரசிடம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாடு அரசின் விருப்பத்திற்கும், கொள்கைக்கும் எதிரானவை என்று நன்கு தெரிந்தும், அதற்கு எதிராகத் தம் கருத்தைத் திணித்து வருகிறார். கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணைவேந்தர்கள் சந்திப்புக்
கூட்டத்தில், கல்வி மாநில அரசின் விருப்பத்தில், முடிவில் இல்லாமல் தேசிய அளவில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போதுதான் குலக்கல்வியையும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், ஆரிய மேலாண்மையையும் எளிதில் செய்ய முடியும் என்று துடிக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற
மரபுகளை மீறுகிறார்

தமிழ்நாடு அரசால் தயாரித்து வழங்கப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்குப்பின் சட்டமன்றத்தில் அளிக்கப்படும் ஆளுநர் உரையை, தன் விருப்பப்படியெல்லாம் மாற்றிப் படிக்கிறார். திராவிடத் தலைவர்களின் பெயர்களையே சொல்லாது விலக்குகிறார். அத்தவறைச் சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் அடுத்த ஆண்டு மீண்டும் அதே தப்பைச் செய்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் புறக்கணிக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரிகளை விட்டுப் பாடச் செய்கிறார். திராவிடம் என்ற சொல்லை எப்படியெல்லாம் விலக்க முடியுமோ அப்படியெல்லாம் விலக்கி வைக்கிறார்.

மசோதாக்களைக் கிடப்பில் வைத்தல்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஏற்பளிக்காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டார். எவ்வளவு எதிர்ப்பு, கண்டனம் வந்தாலும் அவற்றை கவனத்தில் கொள்ளாது, தான் விரும்புவதையே செய்துவருகிறார்.

‘டெக்கான் ஹெரால்டு’ கண்டனம்

ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட மசோதாவில் கையொப்பமிட. அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி அரசமைப்புச் சட்டவிதியின் 200ஆவது பிரிவு ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகளை அளிக்கிறது. முதலாவது, சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது; இரண்டாவது, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது; மூன்றாவதாக, ஒப்புதல் அளிப்பதில் தனக்குள்ள கேள்விகளுடன் அந்த சட்ட மசோதாவை முடிந்தவரை விரைவில் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவது.

இந்த நிலையில் குறிப்பிட்ட சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்போது ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஒரு சட்ட முன்வடிவில் எவ்வளவு காலத்துக்கு மாநில ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்ற கால அளவீட்டை அரசியல் சாசனம் குறிப்பிடவில்லை. அதை இப்போது கவர்னர்கள் பயன்படுத்திக் கொண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையறையின்றி கிடப்பில் போட்டு தாமதம் செய்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பது, அதை நிராகரித்ததற்குச் சமம் என்று கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்படி ஒரு மசோதாவை நிராகரிக்க ஆளுநருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. சட்ட மசோதாக்கள் விஷயத்தில் மாநில சட்டப் பேரவைக்கு உதவியாக இருப்பதுடன், அதன் ஆலோசனைகளுக்கு உட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், சட்டங்களை இயற்றுவதற்கோ அல்லது இயற்றாமல் இருப்பதற்கோ சட்டமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பலமுறை வலியுறுத்தியுள்ளன. எனவே, எந்த ஆளுநரும் சட்டப்பேரவையின் அதிகாரங்களில் தலையிடும் வகையில் செயல்படக்கூடாது.

மசோதாக்களுக்கு தங்கள் ஒப்புதலை அளிக்காததன்மூலம் ஆளுநர்கள் சட்டமன்றத்தை அவமதிக்கிறார்கள். ஒரு மசோதாவைச் சட்டமாக்குவதைத் தடுப்பதன்மூலம் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை முடக்குகிறார்கள். ஒரு மாநிலத்திற்கு எவ்வகையான சட்டங்கள் தேவை என்பதை சட்டமன்றம்தான் தீர்மானிக்கிறது. அதைச் செயல்படுத்துவது மாநில அரசு. இதில் கவர்னருக்கு எவ்விதமான பங்கும் இல்லை.

அனைத்து மாநிலங்களும் இந்த விவகாரத்தை மத்திய அரசு, குடியரசுத் தலைவரிடம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதன்மூலம் கவர்னர்கள் அரசு நிர்வாகத்தில் சாத்தியமற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதிலிருந்து தடுக்க வேண்டும்.

இவ்வாறு ‘டெக்கான் ஹெரால்டு’ நாளேடு தெரிவித்தது.

ஆனந்தவிகடன் அறிவுறுத்தல்

சட்டமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கின்றன. அரசமைப்புச் சட்டம், சட்டமன்றங்களுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையே ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்விக்குள்ளாக்கி வருகிறார் என்று சொல்வதைவிட கேலிக்குள்ளாக்கி வருகிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். குறிப்பாக, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்களை அழைத்துப் பேசும்போது அவரது உரையில் இந்தத் தொனியே வெளிப்படுகிறது. ‘சட்டமன்றம் ஒரு மசோதாவை
நிறைவேற்றி அனுப்பி, அதற்கு ஆளுநர் நீண்டகாலம் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தால், அது நிலுவையில் இருக்கிறது என்று நாகரிகமாகச் சொன்னாலும்,  அது செத்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்று புது அர்த்தம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் ஆளுநர்.

‘செத்துவிட்டது என்று ஆளுநர் சொல்வது சட்டமன்றம் இயற்றி அனுப்பிய மசோதாவையா அல்லது ஜனநாயகத்தையா?’ என்று கேள்வி இப்போது அரசியல் அரங்கில்  பலமாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை, மாநில அரசுடன் அதிகாரப் போட்டி நடத்துவதற்கான உரிமை என்று அவர் எடுத்துக்கொள்ள முடியாது.

மாநில அரசையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பொதுவெளியில் மட்டந்தட்டுவது மாதிரி ஆளுநர் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வருவதும் அந்தப் பதவிக்குக் கண்ணியம் சேர்க்காது.

‘ஆளுநர் இந்த விஷயத்தில் தன் விருப்புரிமையைக் காட்ட முடியாது’ என்று நீதிமன்றம் குட்டு வைத்தது. பேரறிவாளனின் கருணை மனுமீது முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு இதே தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தபோது, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

அரசமைப்புச் சட்ட நடைமுறைகளின்படி சட்டமன்றம் அதன் கடமையைச் செய்யட்டும். ஆளுநர் மாளிகை அதன் எல்லையில் நிற்கட்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால், பாதிப்பு தமிழ்நாட்டுக்குத்தான்!

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு காலதாமதமின்றி ஒப்புதல் வழங்கக் கோரி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் எதிரிபோல் செயல்படுவதாக தமிழ்நாடு அரசு அதில் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல், தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உடனுக்குடன் கையொப்பம் போடாமல், ஒவ்வொரு கோப்புக்கும் விளக்கம் கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

அரசியல் எதிரிபோன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதிப்பதன் மூலம் பேரவைச் செயல்பாடுகளையே ஆளுநர் தடுக்கிறார். மேலும், ஆளுநரின் செயல்பாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். சரியான காரணங்களைத் தெரிவிக்காமல், அரசு அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பியபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார்.

அரசால் அனுப்பப்படும் கோப்புகள், அரசாணைகள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் தாமதிக்கும், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் டி.என்.பி.எஸ்.சி. செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு அவசரச் சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்களில் அது நிரந்தரச் சட்டமாகியிருக்க வேண்டும். தற்போது வரை 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கையொப்பம் போடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளார். அந்த வகையில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை அய்ந்து ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பது தொடர்பான சட்டத்திருத்தம், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் தி.மு.க. ஆட்சியில் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக, ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது தொடர்பான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கையால் அரசுப் பணிகள் முடங்கியுள்ளன என்று, தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் சபரிஷ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறப்பட்டது. சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மற்றும் தமிழ்நாடு அரசு உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு மனுவில் குறிப்பிட்டு குற்றம்சாட்டியது.

அரசியல் சாசனப் பிரிவுகள் 200 மற்றும் 163இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு அரசு, நீட் விலக்கு மசோதா. பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

ஆளுநர் பதவி ஒரு சம்பிரதாயப் பதவி என்றும், ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படக் கடமைப்பட்டவர் எனவும் முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு அரசு, மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

இந்நிலையில் கடந்த 08.04.2025 அன்று, உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை  வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை; அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு விரோதமாக இருக்கின்றன என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது; கண்டனங்கள் தெரிவித்தது.

மேலும், மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அதிகாரம் இருக்கி றதா?

மாநில அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மசோதாக்களை மட்டுமே அனுப்ப முடியுமா? அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் 08.04.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை.

– ஆளுநர் ஆர்.என்.ரவியின் நட வடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாக இருக்கின்றன.

– தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.

– தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன

– தமிழ்நாடு அரசு 2ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

– தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தர வேண்டும்.

– ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவின்படி சுயேச்சையாகச் செயல்பட அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

– மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்

– தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்றவற்றுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும்.

– ஆளுநர் ரவிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவே முடியாது; நிர்ப்பந்திக்க முடியாது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

– இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் செல்லும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ளன.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பாராட்டும், வரவேற்பும்

உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி நிலைப்பாடு சரியானதே என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் 8.4.2025 அன்று அளித்த தீர்ப்பு அமைந்துள்ளது.

பஞ்சாப் அரசின் (ஆளுநர் அதிகாரம்பற்றி யது) முந்தைய வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ஏற்கத்தக்க வழிகாட்டியாகும்.

ஆளுநர் (ஆர்.என்.ரவிக்கு) ‘வீட்டோ’ அதிகாரம் – சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை – செயல்படவிடாமல் தடுக்கும் உரிமை கிடையாது என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது!

ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள பத்து மசோதாக்களும் செல்லும் என்ற தீர்ப்பு மிகச் சிறப்பானது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள நிலைப்பாடு சட்டப்படி சரியில்லை என்றே உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

ஆளுநரை, குடியரசுத் தலைவர் ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும்!

இதன்படி, தனக்கு இல்லாத அதி காரத்தை, இருப்பதாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் சட்ட வலிமைக்கு, ஆட்சிக்கு எதிராக இதுவரை நடந்துகொண்டுள்ள ஆளுநரை, குடியரசுத் தலைவர் ‘டிஸ்மிஸ்’ (திரும்பப் பெறவேண்டும்) செய்யவேண்டும் அல்லது அவரே ‘ராஜினாமா’ செய்து, வெளியேறவேண்டும் என்பதுதானே பொருள்!

வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தீர்ப்பு!

அஃதின்றி, இந்த ஆளுநர் செயல்பாடுகள்பற்றி பேரறிவாளன் போட்ட வழக்கில், முன்பே உச்சநீதிமன்றத்தின் கண்டனமும் இத்துடன் நினைவிற் கொள்ளவேண்டிய ஒன்று என்பதால், தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு வினாடியும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான முன்னுதாரணமாகிவிடக் கூடும் ஆதலால் ஒன்றிய அரசும், மக்கள் மன்றமும் புரிந்து, இனி செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!

இத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை சரியான பார்வையுடன் பின்பற்றவேண்டிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறை இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுத் தீர்ப்பினை (Historical Landmark Judgement) வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்தையும், அதன் மாண்பமை நீதிபதிகள், ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரையும் பாராட்டுகின்றோம்!

முதலமைச்சரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இந்தத் தீர்ப்புமூலம் இந்தியா முழுமைக்கும் உள்ள மாநில சட்டப் பேரவைகளின் அதிகாரத்தைக் காப்பாற்றி, தடம்புரண்ட ஜனநாயகத்தை மீண்டும் தடத்தில் ஏற்றிய தனிப்பெரும் சாதனையைச் செய்த நமது ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இதன் பயன் இந்தியாவின் அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் உரிமை காப்பாற்றப்பட்டு, ஜனநாயகம் பிழைத்துள்ளது. பல பல்கலைக் கழகங்களுக்கும் ஒரு விடியல் இதன்மூலம் கிடைக்கும் என்பது உறுதி!” என்று தமிழர் தலைவர் உணர்வு பொங்கக் கூறியுள்ளார்.

முதல்வரின் பூரிப்பும் வரவேற்பும்

‘‘தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்ட முன்வடிவுகளை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டு மென்றும் தெரிவித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ளது.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசு களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர்க் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை நிலை நாட்டிட தமிழ்நாடு போராடியது.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு
வெல்லும்.” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்தார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் முயற்சியின் பயனாய்க் கிடைத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பால் தமிழ்நாடு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் உரிமையும் பயனும் பெற்றுள்ளன.

சர்வாதிகார அணுகுமுறைக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு மாறாய், சட்டத்திற்கு மாறாய், சர்வாதிகாரப் போக்குடன் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்ட – செயல்படும் இந்த ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும். இதுவே, மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

அதை நிறைவேற்றி சட்டப்படியான ஆட்சி நடைமுறையைக் காக்க வேண்டியதும், மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டியதும் ஒன்றிய அரசின் கடமையாகும்.