செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்பை இந்தத் தலைமுறையும், இனிவரும் தலைமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்க ‘‘உலகத் தமிழ்மொழி நாள்’’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளை அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
‘‘உலகத் தமிழ்மொழி நாள்’’
– உலகத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கை!
– உலகத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கை!
வட அமெரிக்க தமிழ்ச் சங்கம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ்மன்றம் – அமெரிக்கா, பெரியார் பன்னாட்டமைப்பு – அமெரிக்கா, இலெமூரியா அறக்கட்டளை – மும்பை, தமிழ் அறக்கட்டளை – பெங்களூரு, கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றம் – பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம், தமிழ்மாமணி மன்னர்மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை – புதுச்சேரி உள்பட பல நாடுகள் மற்றும் இந்தியாவின் பல தமிழ்ச் சங்கங்களும், தமிழறிஞர் பெருமக்களும் கடந்த
மூன்று ஆண்டுகளுக்கு முன் இக்கோரிக்கையை எழுப்பினர். அதனை வழிமொழிந்து இன்னும் ஏராளமான அமைப்பினர் இவ்வேண்டுகோளைத் தாங்களும் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஈராண்டுகளுக்கு முன்பே நாம் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் (29.4.2023).
ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கம் நிலை பெற ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கல்விக் கொள்கையின் வாயிலாகவும், அலுவலகங்களில் வலிந்து திணிப்பதன் வாயிலாகவும், கடிதப் பரிமாற்றங்களின் வாயிலாகவும், திட்டங்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெயரிடும் போதிலும் இந்தியா என்பது பன்மைத்துவம் மிகுந்த நாடு என்பதை அழிக்கத் துடிக்கிறார்கள்.
ஒன்றிய அரசின் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாட்டம்!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு அன்று இந்தியா முழுவதும் ஹிந்தியைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள், கருத்தரங்குகள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு மூத்த மொழிகளையும் சிறப்பிக்கும் வகையில் அந்தந்த மொழிகளுக்கான சிறப்பு நாள்கள் கொண்டாடப்படுகின்றன. சிலவற்றை அய்.நா. மன்றமே முன்னெடுத்துள்ளது.
தொன்மைச் சிறப்பும், பண்பாட்டுச் செழிப்பும்,
இலக்கியச் செழுமையும், சீரிய இலக்கணக் கட்டமைப்பும் நிரம்பிய செம்மொழியான நம் தமிழ் மொழி, திராவிட மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகவும் திகழ்ந்து வரும் சிறப்புக்குரியது.
நம் மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில் இதற்கு செம்மொழி என்னும்
சிறப்பை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூலம் 21 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிக்கச்
செய்தார். அதன் பின்னரே சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் செம்மொழித் தகுதியைப் பெற்றன.
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படவேண்டும்!
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று சொல்லத்தக்க வகையில் நமது பண்பாட்டு வரலாற்றுச் சிறப்பு
களை அகழாய்வுகளின் மூலம் உரிய அறிவியல் சான்றுகளுடன் நிறுவும் அரும்பணியை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
தமிழர்தம் தொன்மை வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் பல்வேறு நகரங்
களிலும் அருங்காட்சியகங்கள், தொல்லியல் அகழாய்வு நடைபெற்ற இடங்களிலேயே காட்சிக்கூடங்கள், சிந்துவெளி நூற்றாண்டு என்று தமிழ் மொழி, இன வரலாற்று, பண்பாட்டுப் பெருமைகளை முன்னிறுத்தும் பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் சாதனைகளாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறது தமிழ்நாடு அரசு.
அதன் தொடர்ச்சியாக உலகத் தமிழர்கள் எல்லோரும் கொண்டாடும் வகையில், புரட்சிக்கவிஞர் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் தேதியை உலகத் தமிழ் மொழி நாளாகவும், ஏப்ரல் 22 முதல் 29 வரை அந்த வாரத்தினை உலகத் தமிழ் வாரமாகவும் அறிவித்துக் கொண்டாடுவதற்கு உரிய ஆணையினை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்திட வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் பெருவிருப்பமாகும்.
புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள்தான் இதற்கு மிகப் பொருத்தம்!
உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிப்பதற்கு ‘‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ என்று முழங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்த நாளை விட சரியான – பொருத்தமான நாள் வேறொன்றிருக்க முடியாது. புதுமைச் சிந்தனையும், பொதுமைக் கருத்துகளும், தமிழ் மொழியுணர்வு, திராவிட இன உணர்வு மிக்க படைப்புகளும், ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று ஒரு கவிதைப் பரம்பரையே உருவாகும் அளவுக்கு ஈர்ப்பு மிக்க தன் கவிதைகளால் தமிழ் இளைஞர்களை ஈர்த்த சிறப்பும் புரட்சிக் கவிஞர் அவர்களையே சாரும்.
இதனைச் செய்யத்தக்க ஆற்றலும் தகுதியும்
உடைய முதலமைச்சர் என்பதால், உலகத்
தமிழர்கள் இதனை உரிமையுடன் எதிர்பார்க்
கின்றனர். தமிழர்களுக்கென்று அமைந்திருக்கும் இந்த அரசினால் செய்யப்படும் அறிவிப்பு – தமிழ் வழங்கும் நாடுகளில் எல்லாம் எதிரொலிக்கும். தமிழ் வாழும் காலந்தோறும் நிலைத்து நிற்கும்.
‘‘செம்மொழித் தமிழ்’’ என்ற அரிய வரலாற்றுச்
சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறை
வேற்றியது போல, ‘‘உலகத் தமிழ் மொழி நாள்’’ என்னும் முதன்மைச் சாதனையைச் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் நமது முதலமைச்சர் அவர்களும் நிறைவேற்றிச் சிறப்புற வேண்டும் என்பது நமது விழைவு ஆகும்.
– கி.வீரமணி
ஆசிரியர்